பாலசுப்ரமணியன் பொன்ராஜின் சீமுர்க் சிறுகதைத் தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று என்று கருதும் கதையான ‘சீமுர்க்’ கதையைப் படிக்கும்போது புனைவும், மெய்யியலா என்ற கேள்வியை என்னால் தவிர்க்க இயலவில்லை. சிந்தனையும் புனைவும் விமர்சனப் பார்வையும் மேலோங்கிய பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகளை போர்ஹே கதைகளை வரையறுப்பது போல ஹைப்ரிட் கதைகள் என்று வரையறுத்துக் கொள்ளலாம். போர்ஹேசின் சிறுகதையொன்றில் ஒரு வாக்கியம் வரும். அவன் தன்னைப் பற்றி பிறர் கருதும்போது தனது வருங்கால சாதனைகளையும் சேர்த்து வைத்து மதிப்பிட வேண்டுமென்று விரும்புபவனாகவும், பிறரை அவர்களது கடந்தகாலச் செயல்களை வைத்து மதிப்பிடுபவனாகவும் இருந்தான் என்று போர்ஹெஸ் எழுதியிருப்பார். இந்த வாக்கியம் போர்ஹெசின் கதாபாத்திரத்துக்கு மட்டுமல்ல; நம்மில் பெரும்பாலானவர்களின் மனப்போக்குக்குப் பொருந்தக்கூடிய பொதுவான மனித இயல்பு குறித்த கண்டுபிடிப்பு அதில் இருக்கிறது. மெய்யியலும் அறிவியலும் போலவே இந்தப் பூமியில் நமது உயிர் இருப்பு என்னவாக இருக்கிறது என்பதைச் சிந்திக்கும் மாற்று முறைமைகளாகவே கவிதையும், சிறுகதையும், நாவலாக இருக்கிறது. மூளை நரம்பிய...