Skip to main content

Posts

Showing posts from 2025

இனிய ஹென்றி மத்தீஸ்

இனிய ஹென்றி மத்தீஸ்! எப்போது உன் மனைவி அமேலி மத்தீஸின் முகம் முகமூடியாக உனக்கு உருமாறியது? இனிய ஹென்றி மத்தீஸ்! உன் மனைவி அமேலி மத்தீஸின் கண்கள் எப்போது முகமூடியின் இரண்டு குழிகளாக உனக்குத் தோன்றியது? இனிய ஹென்றி மத்தீஸ்! உன் மனைவி அமேலி மத்தீஸின் முகம் வெறும் கபாலமாக எப்போது உன் கண்களுக்குத் தெரியத் தொடங்கியது? எலும்புக்கும் உடலுக்கும் முகத்துக்கும் கபாலத்துக்கும் எத்தனை நூற்றாண்டுகள் தொலைவு? இனிய ஹென்றி மத்தீஸ்! (இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஃபாவிய கலை இயக்கத்தின் முதன்மையான ஓவியர்களில் ஒருவராக கருதப்படும் பிரெஞ்சு ஓவியர் ஹென்றி மத்தீஸ். அவரது போர்ட்ரெய்ட் ஆஃப் மேடம் மத்தீஸ் புகழ்பெற்ற ஓவியம்.) நன்றி: அகழ் இணைய இதழ்

கழுதை நான்

காவிய காலத்தில் ஒரு கழுதை எப்படி இருந்ததோ அதிலிருந்து ஒரு செல் ஒரு உறுப்பில் கூட பரிணமிக்காத கழுதை நான். உங்கள் அலங்காரப் பாண்டங்களுக்கு எது சட்டகமோ அந்தப் புராதன எலும்புதான் நான். ஆபரணங்களோ தளவாடங்களோ கருவிகளோ அழகோ அன்போ உள்ளும் புறமும் ஏறாத உழைப்பு என நீங்கள் மொழிபெயர்க்கும் வெறும் கழுதைதான் நான். இம்மலைவாசஸ்தலத்தின் தடுப்பணை கவர்னர் மாளிகை மலர் தோட்டம் படகு இல்லம் பங்களா வீடுகள் தேவாலயங்கள் கோயில்கள் தேயிலைத் தொழிற்சாலைகள் தொழிலாளர் குடியிருப்புளைக் கட்ட என் முதுகில் மண்சுமந்து சிற்றாறுகளை சிறுகுன்றுகளை ஒற்றையடித் தடங்களை தடங்களே உருவாகாத சிறு வனங்களை கடந்தேன் நான் என்றாலும் ஒரு நினைவகமோ சிலையோ சதுக்கமோ ஏதுமற்ற கழுதைதான் நான். என்னை ஓட்டிச்செல்லும் எஜமானன் என் ஆறாத காயங்களை உலரக்கூட விடுவதில்லை மழையிலும் வெயிலிலும் நீர்வழிகளிலும் என்னை அடித்து வழிநடத்துபவன் அவன் மலை ஆற்றில் இறங்கும்போது அவன் கழற்றும் அழுக்கேறிய லுங்கியை அரைக்கால் சட்டையை அதில் உள்ள பீடியைக் கழித்துப் பார்த்தால் அபரிமிதமோ உபரியோ சதையில் கூட தங்காத சக மிருகங்கள்தாம் நாங்கள். எனக்கென்று தனிக்கதைகள் இல்லை எந்தப் புராணக்...

சல்மான் ருஷ்டி - மரணத்தை மறுத்த சொற்களின் கதை

  ஒரு இலக்கியப் படைப்பு மீது 30 வருடங்களாகத் தீராத வன்மம் கொண்டு அலைந்த பழியின் வடிவம், கடைசியில் ஒரு கத்தியாக உருமாறி, அந்தப் படைப்பை எழுதிய எழுத்தாளனின் மீது, கிட்டத்தட்ட தன் பழியை நிறைவேற்றிக் கொண்டது. அந்தக் கத்தியிலிருந்து, உயிர்தப்பி மீண்ட நினைவுகளின் பதிவுதான் சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’. கருத்தியல் ரீதியான , கலாசார அடிப்படையிலான , அடையாள அடிப்படையிலான குறுகல்வாதங்களும் தூய்மைவாதங்களும் கூர்மையான கத்தியாக மாறி ய பயங்கரத்தைத் தான் இந்நூல் விவரிக்கிறது. சல்மான் ருஷ்டியின் புத்தகத் தலைப்பு கூறுவதைப் போலவே, கொலை முயற்சி மீதான ஆழ்தியானங்களே இப்புத்தகம். சல்மான் ருஷ்டி மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் சர்வதேச அளவில் குரோதம் ஏற்படுவதற்கும் கோமேனியின் மரண ஆணைக்கும் காரணமான ‘சாத்தானின் வசனங்கள்’ நூலை இரண்டு பக்கங்களுக்கு மேல், அவரைக் கத்தியால் குத்திய இளைஞன் ஹதி மதார் படிக்கவில்லை. சல்மான் ருஷ்டியை கொலை செய்வதற்கு அவனுக்கு அவரைப் பற்றிய இரண்டு யூ டியூப் காணொளிகள் போதுமானதாக இருந்திருக்கிறது. சாத்தானின் வசனங்கள் நூல் பிரசுரமாகி 33 வருடங்கள் ஆகிவிட்டன. சல்மான் ருஷ்டியின் வாழ்க்கையில...

பாலசுப்ரமணியன் பொன்ராஜின் ‘சீமுர்க்’

பாலசுப்ரமணியன் பொன்ராஜின் சீமுர்க் சிறுகதைத் தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று என்று கருதும் கதையான ‘சீமுர்க்’ கதையைப் படிக்கும்போது புனைவும்,  மெய்யியலா என்ற கேள்வியை என்னால் தவிர்க்க இயலவில்லை.  சிந்தனையும் புனைவும் விமர்சனப் பார்வையும் மேலோங்கிய பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகளை போர்ஹே கதைகளை வரையறுப்பது போல ஹைப்ரிட் கதைகள் என்று வரையறுத்துக் கொள்ளலாம். போர்ஹேசின் சிறுகதையொன்றில் ஒரு வாக்கியம் வரும். அவன் தன்னைப் பற்றி பிறர் கருதும்போது தனது வருங்கால சாதனைகளையும் சேர்த்து வைத்து மதிப்பிட வேண்டுமென்று விரும்புபவனாகவும், பிறரை அவர்களது கடந்தகாலச் செயல்களை வைத்து மதிப்பிடுபவனாகவும் இருந்தான் என்று போர்ஹெஸ் எழுதியிருப்பார். இந்த வாக்கியம் போர்ஹெசின் கதாபாத்திரத்துக்கு மட்டுமல்ல; நம்மில் பெரும்பாலானவர்களின் மனப்போக்குக்குப் பொருந்தக்கூடிய பொதுவான மனித இயல்பு குறித்த கண்டுபிடிப்பு அதில் இருக்கிறது.  மெய்யியலும் அறிவியலும் போலவே இந்தப் பூமியில் நமது உயிர் இருப்பு என்னவாக இருக்கிறது என்பதைச் சிந்திக்கும் மாற்று முறைமைகளாகவே கவிதையும், சிறுகதையும், நாவலாக இருக்கிறது. மூளை நரம்பிய...

அனோஜனின் ‘தீக்குடுக்கை’

ஈழத்தைச் சேர்ந்த இளம் சிறுகதை ஆசிரியராக எனக்குப் பெயரளவில் பரிச்சயமான அனோஜன், அகழ் இணைய இதழின் ஆசிரியர்களில் ஒருவர். நண்பர் விஷால் ராஜா வழியாக தொலைபேசியில் உரையாடத் தொடங்கி, தொடர் பேச்சுகள், சில நேரடி சந்திப்புகள் வழியாக நெருக்கத்துக்குரிய நண்பராகவும் ஆகிவிட்டவர். தனது முதல் நாவலுக்கான ஊக்கத்தை எனது கட்டுரையொன்றின் வாயிலாகப் பெற்றதாக தனது நாவலுக்கான முன்னுரைக் குறிப்பில் எழுதியுள்ளதைப் பார்த்தபோது கூடுதல் மகிழ்ச்சியை உணர்ந்தேன். எனது இணையத்தளம் போக, எனது எழுத்துகளைத் தொடர்ந்து வெளியிடும் மேடையாக இருந்துவரும் அகழ் தொடர்பிலான உறவு விஷால், அனோஜனுடனான தொடரும் நட்பு, உரையாடல், தகராறுகளின் இணைச் செயல்பாடும்தான். இந்தப் புத்தகத் திருவிழாவில் சால்ட் பதிப்பகம் வெளியிட்ட அனோஜன் பாலகிருஷ்ணனின் முதல் நாவலான ‘தீக்குடுக்கை’க்கு பின் அட்டைக் குறிப்பாக எழுதியது இது. 000 அகத்திலும் புறத்திலும் போர்களும் பிளவுகளும் முரண்பாடுகளும் கூச்சலிடும் ஒரு நூற்றாண்டில் கண்விழித்து, அந்தத் துர்க்கனவின் கோரத் தீண்டலுக்கும் அதனால் ஏற்பட்ட சிதைவுக்கும் உள்ளாகியிருப்பவர்கள் குழந்தைகள்தான்.மத்தியக் கிழக்கிலும் உக்ரைனிலு...