‘சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதை, எனது தனித்தொகுதியான ‘ஞாபக சீதா’வில் இடம்பெற்றது. மிக குறுகிய காலமே என்னை ஆட்கொண்டு, அந்த நாட்களை பொன்னில் சுடரேற்றி, சீக்கிரமே பிரிந்து சென்ற ஒருத்திக்கு, பிரிந்ததின் நினைவுப் பரிசாக, அதற்கு முன்னர் சில ஆண்டுகள் நான் சேகரித்திருந்த பொருட்களை, ஒரு கண்ணாடிக் குடுவையில் இட்டு அளித்தேன். நான் சேகரித்த கடல் சிப்பிகள், துங்கபத்ராவிலிருந்து கொண்டுவந்த கூழாங்கற்கள், திருநெல்வேலி கோயில் வாசலில் வாங்கிய சோளிகள், குட்டி பொம்மைகள் என அந்தக் குடுவையில் போட்டு அவளது பிறந்த தினம் தொடங்கும் நள்ளிரவில் பரிசளித்தேன். இதை ஒரு கவிதையாக எழுதுங்கள் என்று எனக்கு அக்காலத்தில் வழிகாட்டியாகவும் நண்பராகவும் இருந்த வழக்கறிஞர் காந்தி அவர்கள் யோசனை கூறினார். அதன் விளைவே 'சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே' கவிதை. அவள் என்னிடமிருந்து தொலைந்து போய் ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் இதுவரை எழுதிய கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த தொகுதிக்கு ஒரு தலைப்பை வைப்பதற்கு ஆலோசித்தபோது, ‘சிறிய பொருள்களே சின்னஞ்சி...