கண்களில் ரத்தமேறி குணத்துக்கு எட்டாத தொலைவில் எரியும் ரணம் உறங்காமல் விழித்திருப்பது ஏன்? 000 நான்குமுனைச் சாலையின் நெரிசலில் பிதுங்கும் வாகனங்களின் சக்கரங்கள் ஏறாமல் ஓரப்பாதசாரிகளால் நெரிக்கப்படாமல் இரும்பு வடிகால் துளையின் மேல் துளிக்காயமின்றி கிழிசலோ வாடலோ இன்றி தூசுகூடப் படாமல் துடித்துக் கிடக்கிறது ரத்தச் சிவப்பில் முன்போ பின்போ இல்லாத முதல் ரோஜா. 000 இங்கே சமீபமாக கொலையோ சித்திரவதையோ புணர்ச்சியோ எதுவும் நடக்கவில்லை நேற்று மாற்றிய வெள்ளை படுக்கையில் குங்குமச் சிவப்பு மிளகாய் பழத்தின் பளபளப்புடன் விபரீதப் பூவாய் பூத்திருக்கிறது ஒரு துளி. (நன்றி: அகழ் இணைய இதழ்)