Skip to main content

புனிதச் சிப்பி


ஷங்கர்ராமசுப்ரமணியன்



கடலடியிலிருந்து மீன்களோடு
கரைக்கு வந்து
வலையோடு வெளியே எறியப்பட்ட
சிப்பி நீ
தனக்கென்று தனிவிருப்பமில்லாத
உன் உடலில்
கடலின் நிணம் கறையாகச் சிவந்திருக்கிறது
கடலின் காதல் சுவடுகளும்
உனது முதுகில் அழகிய  சமச்சீர் வரிகளாக
பறவை மூக்கென இறங்கிக் குழிந்துள்ளன.
கடலின் விருப்பத்திலிருந்தும் விலகி
இப்போது உலகின் விருப்பத்துக்கு வீசப்பட்டு
இந்த வெயிலில்
உன்னை ஒப்புக்கொடுத்து
யாருக்கோ எதற்கோ
காத்திருக்கிறாய்.
அதனால்  
நீ புனிதச்சிப்பி.

000

Comments