ஷங்கர்ராமசுப்ரமணியன்
முன்னம் பழைமையிலிருந்தும் மீண்டும் நம்மை, நமது வாழ்வைப் பரிசீலிக்க ஆரம்பிக்கலாம். பழையதென்றும் மரபென்றும் தளையென்றும் மெய்யியலென்றும் மதமென்றும் சடங்கென்றும் நாம் ஒதுக்கியதில் இன்றை, இப்பொழுதை உயிர்ப்பிக்கும் வஸ்துகள் ஏதாவது மிஞ்சியுள்ளதா? இன்றைக்கான குணமூட்டியோ, எதிர்காலத்திற்கான தீர்வோ இருக்கிறதா என்றும் பார்க்கலாம்.
‘காலடியில் ஆகாயம்’ தொகுதியில் ஆனந்தின் சிறந்த கவிதைகளில் ஒன்றான ‘எல்லாமும் எப்போதும்’ கவிதையில் கவிதைசொல்லி மண்ணுக்குள் போகிறான். மண்ணுக்குப் போனபின்பு உளிச்சத்தம் கேட்க மேலும் அடியில் செல்கிறான். அவனது பாட்டன் ஒரு சிலையை முடிக்கும் தருவாயில் இருக்கிறார். அது அவனது சிலையாக இருக்கிறது. மேலும் கீழே செல்கிறான் கவிதைசொல்லி, அங்கே சிற்பியாக கொள்ளுப்ப்பாட்டன் அமர்ந்திருக்கிறார். அங்கே பாதி செதுக்கப்பட்ட அவனது சிலை இருக்கிறது. மேலும் இறங்க இறங்க கடைசியில் கவிதை சொல்லியே சிலை செய்துகொண்டிருப்பதைப் பார்க்கிறான். அந்த நான், செய்து கொண்டிருந்தது கவிதை சொல்லியின் மகனுடைய சிலை.
ஆனந்த் உருவாக்கியிருக்கும் இளவரசி கவிதைகள் நம் மண்ணுக்குள் புதையுண்டு போனவற்றைத் தேடிப் போவதைப் போல இருக்கின்றன. நவீன கவிதை உதிர்த்து விட்ட சந்தம், உணர்வெழுச்சி, பாடல் பாவம் மற்றும் பழம் படிமங்களைக் கொண்டு ஆனந்த் தனது இளவரசியைப் படைத்துள்ளார்.
இளவரசி கவிதைகளில் காணக்கிடைக்கும் நிலப்பரப்பு, இயற்கை, வாழ்க்கை, படிமங்கள் அனைத்தும் தற்காலத்தினுடையது அல்ல. ஆழ்மனத்தின் நினைவுப் படிமங்களால் நிறைந்த உலகம் என்று அதைச் சொல்லலாம். அவையெல்லாம் எப்போதாவது வெளியில் இருந்ததா? என்ற கேள்வியையும் வாசகன் கேட்கலாம். பதில் புகைமூட்டமாகவே கிடைக்கும். ஆனந்தின் கவிதையான ‘வழியில் தங்கியவர்கள்’ வழியாகவே உரைத்துப் பார்க்கலாம். கோயிலும் போய்விட்டது. குன்றும் போய்விட்டது. இரண்டும் போய்விட்டதை சூரியன் அறியும். கோயில் போனால் போகட்டும் எனலாம். குன்றும் அதனோடு எப்படிப் போயிற்று? என்று கேட்கலாம்தானே. குன்று பழசா என்ன?
இக்கவிதைகளில் சொல்லப்படும் இளவரசனின் தனிமையும் இளவரசி உணரும் தனிமையும் நேற்றும் இன்றும் நாளையும் எப்போதும் புதிதாக இருக்கும். இளவரசி தேடும்போது இளவரசன் தொலைந்தவனாக இருக்கிறான். இளவரசனும் தேடித் தேடி நெடுங்காலம் காத்துச் சலித்தவனாகத் தென்படுகிறான். உறவுகள், திடப்பொருளின் உறுதியை இழந்து எல்லாம் நீர்மமாகக் கையிடுக்கில் வழிந்துவிடும் குறுக்கும்நெடுக்குமான தகவல்தொடர்பு ஊடிழைகளுக்குள் தொலைந்து மறைந்துவிடும் காலத்தில் நாம் இருக்கிறோம்.
ஆதியில் ஒரு பெண், தன் காதலனுக்காக; ஆண், தன் காதலிக்காக; காத்திருந்த காலத்தின் இடைவெளி அதிகம். இன்று அந்தக் காத்திருப்பின் இடைவெளியை தொழில்நுட்பம் மூன்று நொடிகளாக, ஒரு நொடியாக மாற்றியிருக்கிறது. ஆனால் காத்திருப்பின் நிறையும் வலியும், அதனால்உணரநேரும் தனிமையும் பரிதவிப்பும் மாறவேயில்லை.
குன்று பழசா என்ன? என்று கேட்கலாம் தானே.
உறவுகள் ஆவியாக மாறப்போகும் காலத்திலும் அந்தக் காத்திருப்பின் நிறையும் வலியும் தொடரப்போவது உண்மை. அந்த வலியை, கூடும்போது உருவாகும் களிப்பை, ஒரு புதிய உயிரின் பிறப்பை ஒரு புதிய காலத்தின் பிறப்பை, ஒரு புதிய பிரக்ஞையை அந்தப் பிரக்ஞையால் உருவாகப் போகும் புதிய உலகத்தைக் கனவு காணும் எதிர்காலவியல் கவிதைகள் என்று இளவரசி கவிதைகளைச் சொல்வேன். இங்கே முத்தங்கள் இருக்கின்றன. கலவி இருக்கிறது. காமம் இருக்கிறது. ஆனால் இளவரசியின் உலகில் புணர்ச்சியால் குழந்தைகள் பிறப்பதில்லை. மலரிதழ்கள் சந்தித்துப் பிரியும் கருவறையில், பச்சிலைச் சாறுகளில், பகல் போய் மாலை கவியும் நேரத்தில் பிறப்பு நிகழ்கிறது.
இக்கவிதைகளில் இளவரசி தனிமையை நிரப்புபவளாகவும் தனிமையைக் கொண்டுவருபவளாகவும் இருக்கிறாள். ஒளியை அழைத்து வருபவளாக இருளோடு இருப்பவளாக இருக்கிறாள். அனைத்தும் தெரிந்தவளாக அஞ்ஞானத்தின் வடிவாகவும் இருக்கிறாள். இயற்கையாக, எல்லாவிதத் தோற்றங்களுக்கும் அடிப்படையாக இருக்கிறாள். ஆதியிலிருந்து ஆணின் மனதில் பெண் குறித்துள்ள அச்சத்தையும் வரையறுக்க இயலாத தன்மையையும் கொண்டவளாகவும் நிச்சயத்துக்கும் அநிச்சயத்தக்கும் இடையே நீண்டபடியும் வசீகரமாகவும் அழகாகவும் அச்சமாகவும் இருக்கும் பெண் உருவம் இங்கே கொண்டாடப்படுகிறது. பிறந்தவுடன் மின்னும் விளக்கைப் பழமென்று முழுங்கிய இளவரசி ஒளிவட்டத்துடன் நடந்துவர இருளிலிருந்து அவளை வரையறை செய்ய முயலும் குரல்கள் கேட்கின்றன. நீ ஒரு...நீ ஒரு....நீ ஒரு...என்று வரையறுக்க முயலும் குரல்கள்.
ஆதி நீதி நூல்கள், இதிகாசங்கள் முதல் இன்றைய விளம்பரம் வரை உடலாக, தீர்க்கப்பட வேண்டிய இச்சையாக வரையறுக்கவொண்ணாமல் ஆனால் வரையறுக்க முயலப்பட்டுக் கொண்டே இருக்கும் இளவரசி அவள். வாழ்வின் தோற்றம் மற்றும் நினைவுகளால் பாதிக்கப்படாமல் மீண்டும் தன் ஒளிவிரித்து தன் ஆழம் கண்டு அற்புதத்தில் நிறையும் இளவரசியைக் காண்கிறோம். ஆனந்தின் கனவும் எப்போதைக்குமான பாடுபொருளான இன்றில் இக்கணத்தில் முகிழும் இளவரசி அவள். இத்தருணத்தில் தெய்வமாகப் புனிதபடுத்தி, தாய்மையாக வழிபாட்டுப் பொருளாக்கி, காதலியாக மனைவியாக வெறும் உடைமையாக்கி, போகவஸ்துவாய் சந்தையில் ஆக்கப்படும் இளவரசி அல்ல அவள். வரையறுக்க முடியாத, எல்லையில்லாத ஆற்றலின், நினைவுகளையெல்லாம் உதிர்க்கச் செய்யும் ஒளியின் அடையாளம் தான் இளவரசி. அவளை நிறைத்து அவனும் நிறைபவன் தான் இளவரசன்.
அவரவர் கைமணல், இரண்டு சிகரங்களின் கீழே தொடங்கி காலடியில் ஆகாயம், நான் காணாமல் போகும் கதை, காலவெளிக் காடு, அளவில்லாத மலர் என ஆனந்த் மேற்கொண்ட பயணத்தின் மிக நுட்பமான விளைவுதான் இளவரசி கவிதைகள். ‘கடவுளர் மானுடருடன் பேசி மகிழும் கருகாத, நிழல் கோடுகளால் பிரிக்கப்படாத உலகம்’ இளவரசியினுடையது. நினைவின் எந்தச் சுமையும் இல்லாமல் ஓடும் சிறுவனாக நாமும் நம் உலகமும் இருக்க நினைக்கும் கனவு ஆனந்தின் கனவு இது. அனைத்தும் அறிந்ததும் எதுவுமே அறியாததுமான அற்புதப் பாழ்நிலையை நோக்கிப் படிப்படியாக ஆனந்த் தொடங்கிய யாத்திரையென்று அவற்றைச் சொல்லலாம்.
அன்பு, காதல், உறவு, மேன்மை, மகிழ்ச்சி எல்லாவற்றையும் நற்பண்புகளாக திருவள்ளுவர் பேருந்தில் திருவள்ளுவர் படத்தைப் போல சமூகம் நம் மனச்சுவரில் தொங்கவிட்டுள்ளன. ஆனால் அவற்றின் உடன்நிகழ்வுகள் மற்றும் சிக்கல்களைப் புரிந்துகொள்ள நமக்கு எளிய கருவிகள் கூட சமூக அறிவுத்தளத்தில் உருவாக்கப்படவே இல்லை. நம்முள்ளேயே பெருகும், நாம் எப்போதும் உணரும் பிரிவாற்றாமை, வெறுப்பு, சிறுமை, தனிமை, பயம் ஆகியவற்றை எப்படி பகுத்தறிவது என்பதை நாம் அறிந்துகொள்ளவேயில்லை. மரணத்தையும் பிரிவின் நினைவுகளையும் எப்படி எதிர்கொள்வது? அன்பைவிட உண்மையில் வலிதரும், நம் சுயத்தையே கலைத்து நசிக்கும் ஆயுதக்கருவி இவ்வுலகில் வேறு என்னவாக இருக்கமுடியும்?
மனித உயிர் வெறும் சமூக, குடும்ப, உற்பத்தி அலகு மட்டும்தானா? பெயர்கள், சாதி, மதம், இனம், தேச அடையாளங்களாலான ஆன சமூகத்தன்னிலை மட்டும்தானா? அப்படியானால் கலையும் இலக்கியமும் ஆன்மிக தத்துவ விசாரணைகளும் ஆடம்பரம்தானா? நினைவுகளின் சுமைகளைக் கொண்ட இறந்தகாலம், எத்தனை போர்களுக்கு எத்தனை மோதல்களுக்கு எத்தனை முரண்பாடுகளுக்கு இன்றும் தொடர்ந்து காரணமாகி வருகிறது? நூற்றாண்டு துக்கங்களை அவன் அல்லது அவள், ஏன் பொருக்காக விடாமல் நிணம் வழிய வழிய நக்கிக் கொண்டே இருக்க வேண்டும்? டால்ஸ்டாயின் கதையில் ரம்பத்தை நக்கி நக்கி நாக்கில் ரத்தம் வரவைக்கும் நாயைப் போல.
ஒரு காட்சி... ஒரு நிகழ்ச்சி...ஆனால் காணும் கண்களால் எத்தனையெத்தனை கதைகளாகப் பெருகுகிறது. அப்படியானால் மெய்காட்சி என்பது என்ன? மெய்யனுபவம் என்பது என்ன?
மனிதன் இன்று, இங்கே இக்கணத்தில்தான் வாழ்கிறான் என்று மேலோட்டமாகத் தான் சொல்லமுடிகிறது. திட்டவட்டமாக அல்ல. அவனால் ஏன் தமக்கு முன்னால் உள்ள எளிய அழகுகளைக் கூடக் காணமுடியவில்லை. தன் முன்னர் பூக்கும் சிறுகணங்களை பெரும்பாலான மனிதர்களுக்குஏன் ஸ்பரிசிக்கவே இயலவில்லை.
ஏனெனில் அவன் நிகழ்கணத்தில் முழுமையாக இல்லை. நிகழ்கணத்தில் இருந்தால் போர்கள் இருக்காது. அமில வீச்சுகள் இருக்காது. முரண்பாடுகள் இருக்காது.
இவையெல்லாம் மிக அழகான கனவுகள் தானே. அருமையான தீர்வுகள் தானே. ஆனால் ஆனந்த் தனது நூல்கள் வழியாக இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் முறைபாட்டுகளைப் பற்றிப் பேசும்போது அவரது மொழி எளிமையாக இருந்தாலும் அவை ரகசியமானதும் மிகுந்த போராட்டத்தை வேண்டுவதுமான வழிமுறைகளாகி விடுகின்றன. அதனாலேயே அவை கவிதைகளாகி விடுகின்றன. கிட்டத்தட்ட அரசாங்கம், நிறுவனங்களுக்கு எதிரான வழிமுறைகளாகவும் ஆகிவிடுகின்றன.
அங்கே நீர் துளி பாதரசமாகிறது
மயிலிறகு மழைத்துளிகளாகின்றன
ஆனந்தின் அறையில் ஆயுதங்கள் இல்லை, தளவாடங்கள், வரைபடங்கள் இல்லை. ஆனால் போர் நடக்கிறது. அது வழக்கமாகச் சொல்லப்படும் தர்ம யுத்தமும் அல்ல. ‘மனம்’ என்றும் ‘நான்’ என்றும் சொல்லப்படும் நினைவுத்தொகுதிகளைக் கலைத்து மனச்சுயத்தை விலக்கி, இன்றில் இக்கணத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் உயிர்த்துவம் மிக்க ‘நான்’-ஐத் தேடும் யுத்தம் அது. அங்கே ஆனந்தின் எழுத்துகள் கவிதை என்ற வடிவிலும், கட்டுரை என்ற வடிவிலும் நாவல், சிறுகதை வடிவிலும் கிடக்கின்றன. ஆனால் அவற்றை ஆனந்த் மேற்கொண்ட யாத்திரையின் குறிப்புகளாகவே நான் வாசிக்க முயலுகிறேன்.
அவரது நம்பிக்கையை நானும் பகிர்கிறேன். மனிதன் மீண்டும் பிரக்ஞையில் பிறக்க வேண்டியிருக்கிறது.
சிறு பறவை அழைத்துவரும் மேகம்
அதோ
அந்தச் சிறுபறவை
அழைத்து வரும் மேகம்
தண்ணென என்னை நிறைக்கையில்
நான்
இல்லாது போவேன்
என் சட்டையை நீ எடுத்துக் கொள்ளலாம்
நீ என் செருப்பை எடுத்துக்கொள்
என் சுவாச கோளங்களை
மேகம் நிறைக்கையில்
கணிதங்கள் அற்றுப்போகும்
அதன் பின்
என்னைப் பற்றி
ஏதேனும்
அறியவேண்டுமாயின்
அந்தச் சிறுபறவையை
அழைத்துக் கேள்.
000
நகுலனிடமே இதெல்லாம் தொடங்குகிறது. ‘இருப்பதற்கென்று தான் வருகிறோம் இல்லாமல் போகிறோம்’ என்று சாதாரணமாகப் பத்திரிகை மேற்கோள்களிலும், இலக்கிய உரையாடல்களிலும் துவைத்தெடுக்கப்பட்ட நகுலனின் கவிதையை மீண்டும் பார்க்கலாம்.
இந்தக் கவிதை, நிலையாமை மற்றும் துக்கத்தைத் உணர்த்தும் அனுபவமாக எனக்கு ஒருகட்டத்தில் இருந்துள்ளது. நகுலனுக்கு அடுத்து எழுதவந்த ஆனந்தின் கவிதை உலகத்தை ஓரளவு நெருங்கி வாசித்தவர்கள், இருப்பதற்கென்று தான் வருகிறோம் இல்லாமல் போகிறோம்’ கவிதையில், மகிழ்ச்சியான விடுபட்ட அனுபவத்தை உணரமுடியும்.
ஆனந்தைப் பொருத்தவரை இல்லாமல் போவது இழப்பு அல்ல. இருப்பதுதான் பெருந்துக்கம். நினைவோடும் சுமைகளோடும் வன்மத்தோடும் அதிகாரத்தோடும் தந்தையாகவும் கணவனாகவும் மனைவியாகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் குமாஸ்தாவாகவும் இருப்பதுதான் துக்கம்.
Comments