Skip to main content

பக்கீர் சிறுவன் ராணிதிலக்


கரோனோ ஊரடங்கு நாட்களில் எல்லாரும் சமூக விலக்கம் செய்து கொண்டு வீட்டில் தனியே இருக்கும் அனுபவம், எனக்குப் புதியது அல்ல. இன்று தொலைபேசியில் அழைத்த கவிஞர் ஜயபாஸ்கரனிடம், நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள், இது நமக்குப் புதியதா என்ன என்று கேட்டபோது பதிலுக்குச் சிரித்தார்.

சுனாமி காலத்திலும் பெருவெள்ளம் ஏற்பட்ட போதும் சென்னைக் கடலைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றிப் போய்ப் பார்த்ததுண்டு. அப்படித்தான் சென்ற வாரமும் மெரினாவை அலுவலகத்திலிருந்து வரும்போது கடந்தேன். ஔவை சிலைக்குச் சற்று முன்னர் பைக்கை நிறுத்தி மனிதப்படலம் முற்றிலும் அகன்று கடல் நீலமும் மணலின் பொன்னும் மின்னும் இயற்கையைப் பார்த்தேன். வேம்பும் பூச்செடிகளும் நடப்பட்ட நீண்ட புல்வெளியில் நிற்கும் சாம்பல் நாரையைப் பார்த்தேன். தடுப்புக் கம்பிக்கு அருகில் இன்னொரு சாம்பல் நாரையும் மேய்ந்து கொண்டிருந்ததால் மட்டுமே அந்த நாரை நிஜம் என்று தெரிந்தது. இல்லையென்றால் அசலான அளவில் வடிவமைக்கப்பட்ட சிலை போல புல்வெளியில் நின்று கொண்டிருந்தது. ஒரு நிமிடத்துக்குப் பிறகுதான் கழுத்தில் சலனம் கொண்டு தலையைத் திருப்பியது; அதற்குப் பின்னரும் நகரவேயில்லை.

காணும் இடமெங்கும் கண்குளிரும் பொன்மணல் என்ற பிரமிளின் படிமம் மெய்வெளியாக எனக்கு முன்னர் விரிந்திருக்கிறது. ஔவையும் நாரையும் அருகருகே இருந்தாலும் தற்போதுதான் அத்தனை நெருக்கமாக அவர்கள் இருக்கிறார்கள் என்று தோன்றியது. மனிதர்களின் பழக்கம் தீண்டாத பழக்கமொழிந்த இந்த அசாதாரண வேளைகளில் வெளிகளில் குரங்கும்  புலியும் தோன்றத் தொடங்குகிறது. எங்கள் வேளச்சேரி வீட்டுக்கு ஒரு முதிய பெண் குரங்கு வந்து பால்கனிச் சுவற்றில் அமர்ந்து பசியாறும் வரை அவல், பழம் எல்லாவற்றையும் கோரிச் சாப்பிடுவது போலச் சாப்பிட்டு ஒரு குவளை தண்ணீரையும் குடித்துவிட்டு மிகச் சாவகாசமாகத் தனது பயணத்தைத் தொடர்ந்தது. கவிஞர் இசை, மயில் சாலையில் தோகை விரித்து ஆடும் வாட்ஸ் அப்-ஐப் பார்த்ததாகச் சொன்னார். அந்த மிருகங்கள் வேறு யாரும் அல்ல. அவை நாம் தான். அவை தோன்றாமல் இருந்தன; இப்போது அவை தோன்றுகின்றன என்று சொன்னேன்.

இயற்கைக்கும் அதில் தியானிக்கும் ராணிதிலக்கின் கண்களுக்கும் இடையே மனிதப்படலம் பெரும்பாலும் இல்லை. கண்களும் உடலும்  பருவங்களினூடாகவும் வெளிகளினூடாகவும் தாவரங்களினூடாகவும் தோய்ந்து அலைகிறது. அந்த அலைச்சலிலிருந்து சலித்து மேலெழும் ஒரு ஆலாபனை போல அந்தக் கடைதலில் இருந்து மேலெழும் ஸ்வரம் போன்றவைதான் ராணிதிலக்கின் கவிதைகள். காவிரியின் நீர்மேல் ப்ளக் ப்ளக் ப்ளக் என்று தவ்வத் தொடங்கியுள்ளன.       

அவனது கவிதைகளில் கண்ணுக்கு எட்டும்வரை வீடுகளே இல்லை. ஊருக்கு வெளியே ஊருக்கு வெளியே சாலையில் நடந்து செல்லும் சிறுவனின் குதிக்கும் மனம் கொண்ட நாடோடியின் கண்களால் இந்தக் கவிதைகளை எழுதியிருக்கிறார். ‘மெலட்டூர் ஆற்றுப் பாலம்’ கவிதையில் பாலம் இல்லாத போது இருந்த ஆற்றையும் பாலம் தூர்ந்த பிறகு ஓடும் ஆற்றையும் கற்பனை செய்து எழுதியுள்ளார்.
ஆற்றின் நடுவே பாலம் வரும்போது அங்கே கவிஞனுக்கும் இயற்கைக்கும் நடுவே மனிதப்படலம் நுழைந்துவிடுகிறது. கவிஞன் மானுடன் என்றாலும் அவன் ரகசியத்தில் அந்தப் பாலத்தை விரும்பாதவன்; பாலம் இல்லாமல் போகும் காலத்தைக் கனவு காண்பவன்.

லண்டன் பிரிட்ஜ் இஸ் பாலிங் டவுன் என்ற குழந்தைகள் பாடலில் திரும்பத் திரும்ப விழுதல் எப்படி விளையாட்டாக மாறுகிறது?

பாலம் இல்லாமல் போனபிறகு பரிசலின் ஓரத்தில் அமர்ந்தபடி ஈரமிக்க ஆற்றினைக் கைகளால் நனைப்பேன் என்று கனவு காண்பவன் யார்? பாலம் இல்லாதபோது அந்தப் பெரும்பரிசல் ஒரு உயிரியாக எப்படி மாறுகிறது?

மெலட்டூர் ஆற்றுப் பாலம்


முன்னொரு காலத்தில் ஆற்றின்மேல் பாலம் இல்லை
பெரும்பரிசல் ஒன்று
இரு கரைகளுக்கும் இடையே வாழ்ந்துகொண்டிருந்தது.
இப்போது அப்படியில்லை. அகரமாங்குடிக்கும்
மெலட்டூர்க்குமான பாலம் வெட்டாறு மேல் நிற்கிறது.
இப்போது புதிய விரிசலை அது கண்டுவிட்டது.
நான் இதன்மேல் நின்றுகொண்டு
இந்த ஆற்றில் கால் நனைக்காமல் தரிசிக்கிறேன்
என்பது எவ்வளவு துர்பாக்கியம்.
இன்னுஞ்சில காலத்தில் பாலம் இடிந்துவிழும்.
அக்கரைக்கும் இக்கரைக்குமான பரிசல் ஒன்றைக்
கிழவன் ஒருவன் செலுத்துவான்.
அந்தப் பரிசலின் ஓரத்தில் அமர்ந்தபடி
ஈரமிக்க ஆற்றினைக் கைகளால் நனைப்பேன்.
எப்போதும் போல்
பாலத்தைக்
கடக்கும்போதெல்லாம்
ஆற்றை நோக்கிக் கைகள் தாமாக
திரும்புகின்றன.

வெளியீடு

ப்ளக் ப்ளக் ப்ளக்
ராணிதிலக்
காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்
விலை ரூ. 90
தொடர்புக்கு : 04652 - 278525

Comments

Popular posts from this blog

விகடன் என்னும் ஒரு பெருநிறுவனத்துக்கு எதிராக எளியவர் பச்சோந்தி பெற்றிருக்கும் வெற்றி

கரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது.      இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் தி இந

ஒருநாள் - நகுலன்

   ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத  ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் ,  ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் .  இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை -  அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை .

நீலக்குதிரைகள் - மேரி ஆலிவர்

நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன் அது சாத்தியமாவதில் எனக்கு ஆச்சரியம் கூட இல்லை. நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது. அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது. நான் எனது கையை அதன் நீலப்பிடறியில் இட்டு கட்டிக் கொள்கிறேன். என் புளகிதத்தை அது அனுமதிக்கிறது. ஓவியன் ப்ரான்ஸ் மர்க் மூளையில் வெடிகுண்டின் உலோகத்துண்டு தாக்கி இறந்துபோனான். போரென்றால் என்னவென்று அந்த நீலக்குதிரைகளுக்கு விளக்குவதை விட நான் இறந்தே விடலாம். அவை பீதியில் மயக்கம் போட்டு விழுந்துவிடும் அல்லது அதை அவற்றால் நம்பவே முடியாது. ப்ரான்ஸ் மர்க் உனக்கு எப்படி நன்றி சொல்வது. நமது உலகம் காலப்போக்கில் கூடுதலாக அன்பானதாக ஆகலாம். அழகான ஒன்றை ஆக்கும் வேட்கை நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுளின் ஒரு சிறு துண்டாக இருக்கலாம். இப்போது அந்த நான்கு குதிரைகளும் நெருக்கமாக வந்து ரகசியங்கள் சொல்ல இருப்பதைப் போல என்னை நோக்கி தங்கள் தலையைத் தாழ்த்துகின்றன அவை பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை அவை பேசவும் செய்யாது. என்ன சொல்லக் கூடும் அவை இத்தனை அழகாக