Skip to main content

பேருருவம் கொள்ளும் பிரகிருதி சுமித்ரா



மலையாளத்தின் தலைசிறந்த கவிஞரும் தமிழிலும் ஜெயமோகனின் மொழிபெயர்ப்பு காரணமாக நவீன கவிதை வாசகர்களிடமும் நன்கு அறிமுகமான கல்பட்டா நாராயணனின் நாவல் 'சுமித்ரா'. கே. வி. ஷைலஜா மொழிபெயர்த்திருக்கும் இப்புத்தகத்தின் பின் அட்டைக் குறிப்பில் ஜெயமோகன் சொல்லியிருப்பது துல்லியமான வழிக்குறிப்பு; இது ஒரு கவிஞன் எழுதிய நாவல் என்பதுதான் இதன் தனித்துவம்; கவிஞனின் நாவல் எப்படி இருக்கலாம் என்பதற்கான சமிக்ஞைகளைக் கொண்ட நாவல் இது. அரிய தகவல்கள், வரலாற்று விவரங்களிலிருந்து பக்கம் பக்கமாக நாவலாசிரியர்கள் விரித்து எழுதுவதற்கு சபலப்படும் முனைகளில் பொருள் சார் பண்பாடு, அரசியல் சார்ந்த குறிப்புகளையும் அத்தனை சுருக்கமாக நுட்பமாகத் தெரிவிக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லிக் கடக்கிறார் கல்பட்டா நாராயணன்.

நாவலின் மையம் சுமித்ரா என்ற பெண். நமக்கு தமிழ் நாவல்கள் வழியாக அறிமுகமான யமுனா, அலங்காரம், அம்மணி, இந்து, அபிதா போன்று ஏக்கமாகவும் ப்ரேமையாகவும் அடைய முடியாத லட்சியமாகவும் ஆறாத நினைவாகவும் வாசகனுக்கு ஆகிவிடும் பிரகிருதி. கேரளத்தில் உள்ள பெரிய வீடுகளின் புழக்கடை இருட்டு நிழலுக்குள்ளேயே வரும் ஊருணி நீரின் குளிர்ச்சியையும் ஆழ்ந்த இருட்டையும் பிரியத்தையும் கொண்டவள் சுமித்ரா. பெண் குளிரும் பெண் தகிக்கும் ஆழமான ரகசியமான இடம் தான் சுமித்ரா என்ற நாவல். அந்த வகையில் தமிழ் நாவல்கள் லட்சியப்படுத்திய பிரகிருதிகளுக்கு எதிராக அ- லட்சியப் பிரகிருதி சுமித்ரா. யமுனா, அலங்காரம், அம்மணி முதல் அபிதா வரை உடல் அளவுக்கு கருத்து வடிவமாக உள்ளவர்கள். அபிதாவுக்குக் கன்னி தெய்வத்தின் சாயலே உண்டு. சுமித்ராவோ, தோண்டும்போது தெரியும் ஈரமான வேரின் சில்லிடலும் நிலத்தின் மணமும் கொண்டவள். கொண்டவள். நேசத்துக்குரிய யட்சி; வேரையே சடைகளாக, விழுதுகளாகக் கொண்ட நாகலிங்க மரத்தைப் போன்றவள். 

சுமித்ரா தனது 38 வயதில் அகால மரணத்தின் வழியாக நாவலின் முதல் அத்தியாயத்தில் அறிமுகமாகிறாள். சுமித்ராவுக்கு அண்டை வீட்டுப் பையனாக தம்பியாக உற்ற தோழனாக இருந்த புருஷோத்தமனின் ஞாபகத்திலிருந்து வெவ்வேறு ஆண்கள், பெண்கள் வரையும் நினைவுகள் தான் 'சுமித்ரா'. புருஷோத்தமனுக்கு அக்காள் போல, லட்சியக் காதலி போல, அறிவார்த்தமாகவும் உரையாடும் அருந்துணையாக சுமித்ரா தோற்றமெடுக்கும் போதே சுமித்ரா, கேரளத்தின் வயநாட்டின் ஒரு சிறு கிராமத்தில் வசித்தவள் மட்டும் அல்ல என்று தெரிந்துவிடுகிறது.

சுமித்ரா தினசரி பல வேளைகள் குளிப்பவள். அவளே நீராக இருக்கிறாள். கருப்பிக்கும் சுபைதாவுக்கும் தோழியாக, வாசுதேவனின் மனைவியாக, அனுசுயாவின் அம்மாவாக, பாத்திர வியாபாரி பொதுவாளிடம் ஒரே முறை ரகசிய உறவில் சுகித்தவளாக,  அண்டை வீட்டில் வசிக்கும் கிழவர் கௌடருக்கு காலை வேளைகளில் உப்புமா செய்து தந்து உடல்நலமில்லாத பருவங்களில் பராமரிக்கும் அருமகளாக, ஊரே பிழைக்கத் தெரியாதவனாகக் கருதும் தாசனின் கையை எடுத்து வருடிக் கொடுக்கும் அபூர்வமான சகியாக எத்தனையோ உருவங்கள் அவளுக்கு. அத்தனை உருவங்களும் வயநாட்டு வனத்தின் தாழ்ந்த பகுதிகளில் ஓடும் சுனையின் தன்மையையும் குளிர்ச்சியையும் கொண்டவை. இங்கு ஆழம் இடுப்பளவு என்றாலும் தனியாக இறங்குவதற்குப் பயத்தை உருவாக்கும் தனிமையையும் குளிர்ச்சியையும் கொண்டவை. அந்தச் சுனையில் பிறந்து மண் ஏறியவள் தான் சுமித்ரா.

சுமித்ராவின் தோழி சுபைதாவும் சுமித்ராவின் மகள் அனுசுயாவும் இந்த நாவலில் கூர்மையாகப் படைக்கப்பட்ட அதீதங்கள். விடுதியில் இருக்கும் அனுசுயா, தாயின் சாவைக் கேட்டு வந்து வீட்டுக்குள் நுழைந்து அம்மாவின் சடலத்தைப் பார்க்கும் போது பிணம் மீண்டும் சுமித்ராவாக மாறியது என்று எழுதுகிறார். மீண்டும் பெருமூச்சுகளின், மீண்டும் வாழ்வைப் பற்றிய யூகங்களின், எதிர்காலம் குறித்த பயத்தின் ஊற்றுக்கண்ணாக சுமித்ரா மாறிவிடுகிறாள். ஏனெனில் தான் இறந்த பிறகும் இன்னொரு பெண்ணை மகளாக இங்கே விட்டுச் சென்ற துயரத்தில் தான் சுமித்ரா மீண்டும் எழுகிறாள்; இறந்த துயரத்திலிருந்து அல்ல.

இந்த இடம் ஆணாக நான் தொடர்ந்து இறக்கும் இடம் சுமித்ரா.

தனது இடுப்பு வேட்டியை அவிழ்த்த காரணத்தால், தன் நிர்வாணம் குறித்த சங்கடத்தில் தனது செல்ல யானைக் குட்டியை, காயப்படுத்திக் கொன்ற குட்டிப் பெண் சுபைதாவின் வாழ்க்கை முழுக்கத் தொடரும் குற்றவுணர்வு இன்னொரு ஆழம்.



சுமித்ராவின் எல்லா அங்கங்களையும் கடைசி நீர் குளிர்விக்கிறது. சுமித்ரா எண்ணற்ற ரகசியங்களோடு எரியத் தொடங்குகிறாள்.

ஒரு பெண்ணின் அகத்திலிருக்கும் ஆழம், சில்லிட்ட தன்மையை அதன் எதார்த்தத்திலேயே கவிஞனின் கண்கொண்டு எழுதப்பட்ட அபூர்வ படைப்பு இது.  செம்மையின்மை தெரியும் மொழிபெயர்ப்பு, பதிப்பின் கோராமை என எல்லாவற்றையும் தாண்டி சுமித்ரா உயிர்த்துவத்துடன் தமிழில் உருவம் கொண்டிருப்பது வினோதம் தான். இங்கு மொழியைத் தாண்டி வேறு அர்த்தங்கள் தொழிற்படுகின்றன.

சுமித்ரா வாசுதேவனுக்கானவள் மட்டுமல்ல; அவள் என் அவள் எனும்போது வரும் உணரும் நிறைவு நீடிக்கக் கூடியதல்ல. அவள் எல்லாருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக விண்டு கொடுத்தவள். விண்டது அத்தனையையும் தாண்டி சுமித்ராவிடம் ஒன்று உண்டு. அதுவும் சேர்ந்தவள் சுமித்ரா.

சில பெயர்களை இடம் பெயர்க்கவே முடியாது. சில பெயர்களை இடம் பெயர்க்கவே முடியாது. சுமித்ரா, சுமித்ரா, சுமித்ரா. 

Comments