Skip to main content

அன்பு என்றே


அன்பு
என்றே நாம் மொழிபெயர்த்திருக்கிறோம்
எனது வளர்ப்புப் பிராணியின் செய்கையை
சிறுநீர் கழிப்பதற்கு
கழுத்துச் சங்கிலியை விடுவிக்கும்போது
தலையைக் கோதிக் கொடுக்கும்போது
எட்டி எனது விரலை நக்கிக் கடிக்கிறது
சில சமயங்களில் எனது கை முழுவதையும்
கடித்து விழுங்குவதற்கு முயல்கிறது
மொழி தெரிந்தால் அது என்னைக் கேட்டுவிடும்
அதன் அன்புக்குத் தந்தும்விடலாம்
ஆனால் எனது கை
எனது உடலோடும்
தலையில் வலியோடும் பிணைக்கப்பட்டிருப்பது
அதற்குத் தெரியாது
ஒருநாள்
அவளும் நானும் அவரவர் போதத்தை
உடைகளோடு உதிர்த்து
சற்றே பறக்க முயன்றோம்
தன் முலைகளைக் கடித்துப் பருக அளித்து
எனது முகம் பார்த்திருந்தாள் அவள்
இந்தச் செல்லங்களைத்
தந்துவிடு தந்துவிடு
என்று பைத்தியம் போல வாய்குளறிக் கேட்டேன்
அவளும் தலையை தலையை
அசைத்தாள்
அந்த அசைவு சன்னமாய்
நினைவில் சிறுத்துக் கொண்டிருக்கிறது.

(கவிஞர் சாகிப்கிரானுக்கு)

Comments

சாகிப்கிரான் said…
சங்கர், சில சமயங்களில் அன்பு ரகசியமான கொடூரமாக, அனுமதிக்கப்பட்ட பேதைமையாக இருக்கிறது. அருமையான கவிதை.