Skip to main content

எளிதாக இறந்து போகும் முல்லா


உளவியல் ஆலோசகரும் நண்பரும் சினிமா விமர்சகருமான சஃபி மொழிபெயர்ப்பில் உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட முல்லா  கதைகள் தான் முல்லாவுடனான எனது இரண்டாம் பருவத்து உறவுக்கு வழிவகுத்தது. பள்ளிப்பருவத்திலிருந்து மேலோட்டமாக அறிமுகமான முல்லா கதைகள், நடுவயதுப் பருவத்தில் கூடுதல் உதவியாய் இருப்பதை உணரமுடிந்தது. முல்லா கதைகளைப் படிப்பது மட்டுமல்ல இன்னொருவருக்குச் சொல்லும்போது கூடுதலான குணம் தெரியத் தொடங்கியது; நிறைய கதைகளை நண்பர்களிடம் பகிர்ந்தேன். அச்சமும் ஆசையும் அகந்தையும் கனத்துப் பெருத்த நம் சுயத்தைத் தரையில் வீழ்த்தி சிரிக்கச் சிரிக்கப் புரட்டுபவர் முல்லா என்பது கதைகளை இன்னொருவரிடம் சொல்லிச் சிரிக்கும்போது கூடுதலாகப் புரிந்தது. நாம் மறைத்து வைத்திருக்கும் பொறாமை, பேராசை, அல்பத்தனம், சிறுமையை வெளியே போட்டு உலர்த்தி காயப்போட்டு விடுகிறார். அப்போது நம் சுயம் அத்தனை லேசாக மாறிவிடுகிறது.

முல்லா என்ற ஒரு கதாபாத்திரம் துருக்கி நாட்டில் பிறந்ததாகச் சொல்லப்பட்டாலும் அந்தக் கதாபாத்திரத்தின் ஆளுமையும் அவரது பல்வேறு குணங்களும் அவர் ஒருவர் அல்ல என்றே தோன்றவைக்கிறது. உடல் முழுக்க விஷமமும், அக்குறும்பும், நிகழ்ச்சிகள் அத்தனையையும் தலைகீழாக்கி விடும் முல்லாவின் இயல்பும், எதார்த்தத்துக்கு முகம் கொடுத்து தன் பிம்பத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் சகல வேஷங்களையும் இடும் விவேகமும் கொண்டவர் முல்லா. ஆனால், இந்த உலகின் கல்மிஷங்கள் எல்லாவற்றிலும் அவர் உடல் புரண்டாலும் அந்த அழுக்கோ அதன் நஞ்சோ ஏறாத கண்கள் முல்லாவினுடையது. ஒரு கணத்தில் கஞ்சனாகவும் ஒரு கணத்தில் திருடனாகவும் ஒரு கணத்தில் முட்டாளாகவும் ஒரு கணத்தில் தற்பெருமைக்காரனாகவும் ஒரு கணத்தில் சுயநலமியாகவும் ஒரு கணத்தில் கோழையாகவும் அவர் விழுந்து எழுகிறார். அந்தக் கணத்துக்கு மேல் எந்தக் கதாபாத்திரமும் அவசியமல்ல என்று முல்லா உணர்த்துகிறார்.மனம் சாய்வு கொண்ட, உருவகம் செய்து வைத்திருக்கும், கற்பித்து உறைந்திருக்கும், தனிச்சுயத்தின் நாற்காலியைத் தட்டிக் கவிழ்த்து மூளையைச் சுற்றி ஆக்சிஜனைப் படரவிடுபவர் முல்லா. முல்லா கதையை படிக்கத் தொடங்கும்போது இருந்தவர் படித்து முடிக்கும் போது இல்லாமல் போகிறார். அவர் இருந்த இடத்தை தன்னார்வத்துடனேயே முல்லாவிடம் அவர் சந்தோஷமாகத் தட்டிவிடக் கொடுத்து விடுகிறார். முல்லாவைப் படிப்பவர்களுக்கு முல்லா கொடுப்பது இனிமையானதொரு மரணம் என்னும் ஆசுவாசம். மனத்தின் இருண்ட அனுஷ்டானங்களுக்குள் முல்லாவின் கதாபாத்திரம் தன் விழிப்பு, விமர்சனத் துடுக்கு, விவேக ஞானத்தோடு நுழைகிறது. ஆசை, அச்சத்தின் அடிப்படையில் மனம் இறுக்கச் சேர்த்துக் கட்டியிருக்கும் சுயத்தின் மூட்டைகளை நூலாம்படைகள் கிழிய அவிழத் தொடங்குகின்றன. நூற்றாண்டுக் கணக்கில் புழுங்கிக் கொண்டிருந்த தலை திறந்து காற்று வருகிறது.

இத்ரிஷ் ஷாவுக்குப் பிறகு, முல்லா கதைகளைச் சொந்தமாக எனக்குத் தெரிந்து ஐம்பது கதைகளுக்கு மேல் உருவாக்கியிருப்பவர் ஓஷோ. முல்லாவின் கதாபாத்திரத்துக்கு இந்தோ-அமெரிக்கத் தன்மையை அவர் ஏற்றியிருப்பார். முல்லா கதைகளை உருவாக்கியவனோ உருவாக்கியவர்களோ ஓஷோ போன்ற அறிஞராகவும் ஞானிகளாகவும் தான் இருக்க வேண்டும். எனது ஆயுளில் ஒரே ஒரு முல்லா கதையை உருவாக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது. அது அத்தனை சாதாரணமானதல்ல என்று தெரிந்தாலும்.

முல்லா நமக்கு சிகிச்சையாக ஒரு குணமூட்டியாக உதவ முடியும் என்ற பார்வையை சஃபி தான் உருவாக்கினார்.

மரணத்துக்குப் பிறகு பேயாகாமால் முல்லாவாகவே, முல்லா மிஞ்சும் கதைகளை இங்கே முதலில் எடுத்துக் கொண்டிருக்கிறேன். மரணம் என்ற அனுபவத்தின் மேல் இந்த உலகம் வைத்த அத்தனை மூட்டைகளையும் தளர்த்தி கல்லறைக்குள் சடலமாகப் போய்விட்டு வந்தவராக முல்லா இந்தக் கதைகளில் உள்ளார்.

முல்லாவை நோக்கி நெருங்கிப் புரிவதற்குத் தூண்டுதல் தந்த சஃபிக்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும். முல்லா கதைகளோடு இருக்க,  அவரது கதைகளைத் திரும்ப மொழிபெயர்ப்பு செய்ய வேண்டுமென்று தோன்றியது. நானும் எனது அலுவலக நண்பர் கௌரியும் அவ்வப்போது அவர் கதைகளை இத்ரிஷ் ஷாவிலிருந்து செய்தோம். கௌரி கணிசமாக எண்ணிக்கையில் செய்தார். இந்தக் கட்டுரைத் தொடரில் பகிர்ந்துகொள்ளப் போவது இருவரும் செய்த அந்த மொழிபெயர்ப்புக் கதைகளைத்தான்.   

குருக்களுக்கும் ஞானிகளுக்குமான வழிபாட்டு தினமான வியாழக்கிழமையன்று முல்லா கதைகள் குறித்த இந்தத் தொடரை எழுதத் தொடங்கியிருப்பது தற்செயல்தான். மரணத்தின் மீதான பரிசீலனை, மரணத்தின் மீதான தியானத்தின் உருவகமாகவே உலகெங்கும் மூத்தோர்களின் கல்லறைகள் வழிபடும் இடங்களாக மாறியுள்ளன. மரணத்துக்குப் பிறகு, அடைந்த மரணத்தைப் பார்க்கவும் பார்த்துச் சிரிக்கவும் முடியும் மரணம் அது என்று, அத்தனை எளிமையாக இந்த உலகத்துக்குச் சொன்னவர்களில் ஒருவர் முல்லா. அதனால் மரணமடைந்த முல்லா, தனது மரண அனுபவத்தைச் சொல்லும் மூன்று கதைகளிலிருந்து இதைத் தொடங்குகிறேன்.

'ஒட்டகங்களைத் தொந்தரவு செய்யாதே' கதையில் மரணத்தைக் கற்பனை செய்கிறார் முல்லா. மரண தேவதையும் உடனடியாக அங்கே வந்துவிட்டாள். அவளைப் பார்த்து ஓடத்தொடங்குகிறார் முல்லா.  ஓடும்போது ஒட்டகங்களின் வரிசையில் புகுந்து அதன் உரிமையாளர்களிடம் அடி வாங்குகிறார் முல்லா. மரணமடைந்தாலும் அது ஒட்டகம் வராத இடமாக இருக்க வேண்டுமென்ற ஞானத்தை முல்லா தனது மனைவியிடம் பகிர்ந்துகொள்கிறார். இனி கதை.

ஓட்டகங்களைத் தொந்தரவு செய்யாதே

முல்லா இடுகாட்டில் உலவிக்கொண்டிருந்தார். அப்போது கால்தவறி ஒரு பழைய கல்லறைக்குள் விழுந்துவிட்டார். இறந்துவிட்டால், எப்படியிருக்கும் என்பதைக் கற்பனைசெய்யத் தொடங்கினார். அப்போது திடீரென்று ஒரு சத்தத்தைக் கேட்டார். கடைசித் தீர்ப்பெழுதும் தேவதை தன்னை நோக்கிவருவதைப் போல அவர் மனதில் தோன்றியது. ஆனால், அப்போது ஓர் ஓட்டகக் கூட்டம் மட்டுமே அந்தப் பக்கம் சென்றுகொண்டிருந்தது.கல்லறையில் இருந்து துள்ளிகுதித்தெழுந்த முல்லா, அருகிலிருந்த சுவரின் மீது மோதி விழுந்ததுடன் பக்கத்தில் சென்றுகொண்டிருந்த ஓட்டகங்களின் மீது விழுந்து அவற்றையும் தொந்தரவுக்குள்ளாக்கினார் . ஓட்டகக்காரர்கள் அவரைத் தங்கள் கைகளில் வைத்திருந்த கம்புகளால் அடித்தனர்.அவர் அங்கிருந்து வலியுடன் வீட்டுக்கு ஓடிச்சென்றார். அவர் மனைவி, என்னவாயிற்று, எதனால் தாமதம் என்று கேட்டார்.
‘நான் இறந்துபோயிருந்தேன்’, என்று சொன்னார் முல்லா.ஆர்வம் அதிகமாகி, இறந்துபோயிருந்த போது எப்படி இருந்தது என்று முல்லாவிடம் கேட்டார் அவர் மனைவி.
‘அப்படியொன்றும் மோசமான அனுபவமில்லை, ஆனால், ஓட்டகங்களை மட்டும் தொந்தரவு செய்யக்கூடாது. ஏனென்றால், ஓட்டகங்களைத் தொந்தரவு செய்தால் அடி விழும்’ என்று சொன்னார் முல்லா.


இறக்கப் பயந்து உயிர்க்காமல் வாழ்பவர்களே நம்மில் பெரும்பாலானவர்கள். மிகச் சிலர் தான் இறப்பதற்குத் துணிந்து இறந்து இறந்துபோனது போலத் தெரிந்தாலும் மறுபடி உயிர்த்து உயிர்த்து வாழ்கிறார்கள். அப்புறம் ஒரு அனுபவத்தின் சௌகரியம் அத்தனையும் வேண்டும், அதன் பக்க விளைவுகள் கூடாது என்று நினைப்பவர்களின் மேல் முல்லாவின் பரிகாசம் படர்கிறது. லட்டு வேண்டும் லவ்டா வேண்டாமென்றால் எப்படி? லட்டு வேண்டுமென்றால் லவ்டாவும் சேர்ந்துதான் என்று கதாபாத்திரத்துக்கு ஒப்புக்கொடுக்கிறார் முல்லா. மனிதனுக்கு அத்தனை சுதந்திரமான தேர்வோ விருப்போ இல்லை என்கிறார். நிகழ்ச்சியின் போக்குக்கு அங்கே ஒப்புக்கொடுக்கிறார் முல்லா. அதனால்தான் அவர் கழுதையைக் கூட அவரால் காப்பாற்ற முடியவில்லை. லட்டுக்கும் லவ்டாவுக்கும் தொடர்பு உண்டு.

நான் யாரென்று காட்டியிருப்பேன்!

ஒருநாள் முல்லா, ‘சில பேர் இருக்கிறார்களே, அவர்கள் உயிரோடு இருக்கும்போதே இறந்துவிடுகிறார்கள். இன்னும் சிலரோ, இறந்துபோனது போல் தெரிந்தாலும் உயிரோடு இருப்பார்கள். ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்பதை எப்படிச் சொல்வது?’ என்றார்.
கடைசி வரியை மட்டும் மீண்டும் சத்தமாகச் சொன்னதால், அதை  அவர் மனைவி கேட்டுவிட்டார்.


‘அட, முட்டாள் மனுஷா! ஒருவனோட கைகளும் பாதங்களும் ஜில்லென்று ஆகிவிட்டால், அவன் இறந்துவிட்டான் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்’ என்று முல்லாவிடம் சொன்னார் அவர் மனைவி.

 
சில நாட்களுக்குப்பிறகு, முல்லா காட்டில் விறகு வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு நிலவிய கடுங்குளிரால் அவரது உறுப்புகள் அனைத்தும் ஜில்லென்று ஆகிவிட்டதை அவர் உணர்ந்தார்.


‘அய்யோ, மரணம் சமீபத்தில் வந்துவிட்டது. இறந்தவர்கள் மரம் வெட்டமாட்டார்கள்; அவர்களால் இயங்கமுடியாது என்பதால், அவர்கள் அமைதியாகப் படுத்துகொள்வார்கள்’ என்று நினைத்துக் கொண்டார்.


அவர் மரத்தின் கீழே படுத்துகொண்டார்.
அப்போது, கடுங்குளிரால் பாதிக்கப்பட்டு அந்தப் பக்கமாக வந்த ஓநாய்க் கூட்டம், அங்கே படுத்திருந்த மனிதன் இறந்துவிட்டான் என்று நினைத்து, முல்லாவின் கழுதையை அடித்துத் தின்றன.


‘இதுதான் வாழ்க்கை! ஒன்றோடு ஒன்று எப்படி தொடர்பு கொண்டதாக இருக்கிறது. நான் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், உங்களால் என் கழுதையிடம் இப்படி உரிமை எடுத்துகொண்டிருக்க முடியாது’ என்று நினைத்தார் முல்லா.


அச்சம் மரணத்தை நோக்கித் தான் முல்லாவை அடிக்கடி துரத்துகிறது. ஆனால், அவர் விவேகமான பதிலைச் சொல்லிக் கொண்டு எழுகிறார். அது சாமர்த்தியமான பதில் போல உள்ளது. அதில் உண்மையும் உள்ளது. பஞ்சதந்திரத்தில் கமல் நாகேஷைப் பார்த்துச் சொல்லும் வசனம் ஞாபகத்துக்கு வருகிறது. கேள்வி கேட்கறது ஈசி மாமா? என்று சொல்வார். எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பில் இருப்பதால் தான், முல்லா சில வேளைகளில் சவக்குழியில் இருக்க வேண்டியிருக்கிறது.

நாம் ஏன் இங்கே இருக்கிறோம்?

முல்லா, ஒரு நாள் மாலை, ஆளரவமற்ற சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சில குதிரைகளில் ஆட்கள் அவர் எதிரே வந்ததைப் பார்த்தார். அவரது கற்பனை வேலைசெய்யத் தொடங்கியது. அவரை அடிமையாகப் பிடிக்கத்தான் குதிரையில் ஆட்கள் வருகிறார்கள் என்று நினைத்தார்.
வந்த வழியே ஓடிச்சென்று, ஓரத்தில் இருக்கும் சுவரொன்றில் ஏறி, இடுகாட்டில் குதித்தார். அங்கே காலியாக இருந்த குழியில் போய் கால்நீட்டிப் படுத்துக் கொண்டார். முல்லாவின் புதிரான செய்கையைப் பார்த்த குதிரைப் பயணிகள் அவரைப் பார்த்து பரிதாபப்பட்டு பின்தொடர்ந்து சென்றனர். குழியில் படுத்துக் கிடந்த முல்லாவைப் பார்த்து, “நீங்கள் இங்கே வந்து ஏன் படுத்துக் கிடக்கிறீர்கள். எங்களைப் பார்த்து ஏன் ஓடிப்போனீர்கள். ஏதாவது உதவி தேவையா?” என்று கேட்டனர்.
“நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்க முடிவதாலேயே அதற்கு நான் நேரடியான பதிலை அளித்துவிட முடியாது. எல்லாம் உங்களது பார்வையில் உள்ளது. எப்படியாக நீங்கள் கேட்டாலும் இதுதான் என் பதில். உங்களால் தான் நான் இங்கே இருக்கிறேன். என்னால் தான் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்.”


முல்லா கதைகளில் அபூர்வமான இந்தக் கதையில் முல்லா இருக்கிறார். கழுதையும் இருக்கிறது. ஆனால், இதில் வரும் முல்லா முல்லா அல்ல. கழுதைதான் முல்லா. இங்கே உயிர் பயத்தை, தூண்டுதலாக ஆற்றலாகப் பயன்படுத்திக் குளத்துக்குள் விழுந்த கழுதை கரையேறி விடுகிறது. இந்தக் கதையில் வரும் முல்லா தாராள மனம், நன்றி உணர்வு படைத்தவராகத் தெரியவருகிறார். ஆனால், இந்தக் கதையில் முல்லாவின் குணலட்சணங்களைக் கொண்டது கழுதைதான். கறை நல்லது என்பது போல, உயிர் பயமும் சில இடங்களில் நல்லது. இங்கே உயிர்பயம் ஆற்றலாக மாறிவிடுகிறது.

விபத்து அதிர்ஷ்டமானது


முல்லாவின் கழுதை தாகத்தால் ஒரு குளத்தில் இறங்கி  தண்ணீர் குடித்தது. ஆனால், படிக்கட்டுகள் செங்குத்தாக இருந்த நிலையில்  தடுமாறிக் குளத்துக்குள் விழுந்தது. கழுதை விழுந்த நிலையில் அங்கிருந்த தவளைகள் அதீதமாகச் சத்தமிடத் தொடங்கின. தவளைகள் போட்ட சத்தத்தால் பயந்துபோன கழுதை, தறிகெட்டுப் போய் குளத்திலிருந்து வேகவேகமாக மேலேறி வந்து விட்டது. இதைப்பார்த்த முல்லாவுக்கு கழுதை திரும்பக் கிடைத்தது.  மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ‘நீங்கள் எனக்கு ஒரு நல்ல திருப்பத்தைக் கொடுத்தீர்கள். மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று முல்லா தனது அங்கியிலிருந்து நாணயங்களை எடுத்து குளத்தில் எறிந்துவிட்டுத் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.


(முல்லாவின் தொடர்ச்சி பஷீர் கட்டுரையைப் படிக்க : https://www.shankarwritings.com/2017/08/blog-post_23.html)

Comments