Skip to main content

செத்து செத்து விளையாடும் முல்லா


உடல் குளிர்ந்து சில்லிட்டுப் போய்விட்டால் ஒருவனுக்கு மரணம் வந்துவிட்டதென்று அர்த்தம் என்று மனைவி சொன்னதைச் சோதித்துப் பார்த்தார் அல்லவா முல்லா? அதே கதையை ஓஷோ சற்று நீட்டிச் சொல்ல முயன்றிருக்கிறார்.  நீ இல்லாமல் போகும்போது, நீ தெய்வீகமாகி விடுவாய் என்பதை விளக்க, ஓஷோ அந்தக் கதையை நீட்டியுள்ளார்.

சாவென்றால் தொடை நடுங்குபவராக இந்தக் கதையில் முல்லா நஸ்ருதீன் தோன்றுகிறார்; நம்மைப் போலவே.

இத்ரிஷ் ஷாவின் கதையில் வருவது போலவே, ஒரு நாள் ஊருக்கு வெளியே உள்ள தனது பண்ணையில் வேலைபார்த்துக் கொண்டிருந்த முல்லா, தன் உடலைக் குளிர்ச்சியாக உணர்கிறார். உடனேயே இறந்து போனதாக முடிவு செய்து தரையில் கால்நீட்டிப் படுத்து பிணம் போல ஆகிவிட்டார்.
அந்தப் பண்ணையைக் கடந்த வழிப்போக்கர்கள் சடலம் போலக் கிடக்கும் முல்லாவைப் பார்க்கின்றனர். அவர்கள் தங்களுக்குள் இறந்து போன இந்த சடலத்தை என்ன செய்வது என்று பேசிக் கொண்டனர். முல்லாவுக்கு அவர்கள் பேசுவதைக் கேட்க முடிகிறது. ஆனால், அவர் தான் இறந்துவிட்டதாக நினைத்ததால் பேசாமல் கிடந்தார். முல்லாவின் வீட்டு முகவரி தெரிந்தால் அங்கே கொண்டுபோய் சடலத்தைச் சேர்த்துவிடலாம் என்று வழிப்போக்கர்கள் யோசிக்கத் தொடங்கினர்.

ஓட்டைவாயான முல்லாவுக்கோ தனது வீட்டின் முகவரியைச் சொல்தற்கு ஆசைதான். ஆனால், அவர் இறந்துவிட்டதால் அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. வழிப்போக்கர்கள் யாரவது ஊர்க்காரர்கள் வந்தால் கேட்கலாம் என்று காத்திருந்தனர். சாயங்காலம் இருட்டத் தொடங்கிவிட்டது.
இறந்த போன இந்த மனிதனின் சடலத்தை இங்கேயே விட்டுச் செல்வது மனிதாபிமானமாக இருக்காது. வீட்டுக்கோ இடுகாட்டுக்கோ எடுத்துச் செல்லவும் வழி தெரியவில்லை. என்ன செய்யலாம் என்று குழம்பியபடி காத்திருந்தனர்.

முல்லாவுக்கு வேறுவழி தெரியவில்லை. சட்டென்று எழுந்தார்.

“நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள். இப்படி செத்தவன் எழுவது இயல்பும் அல்ல. இறந்தவன் ஒருவன் பேசுவதையும் இந்த உலகின் விதிகள் அனுமதிக்காது. ஆனால், உங்களைப் பார்த்தால் எனக்குப் பாவமாக இருக்கிறது. என் வீட்டுக்கு வழியைக் காண்பிக்கிறேன். அதற்கப்புறம் எனது பேச்சை நிறுத்திக் கொள்கிறேன்". என்று ஒரு போடாகப் போட்டார் முல்லா.

நான் இல்லாமல் போய் விட்டால், நான் இல்லை என்று கூட என்னால் சொல்ல முடியாமல் போய்விடும். அப்படிச் சொல்லும் அவசியம்கூட இல்லை. ஆனால் முல்லாவுக்கோ எல்லாம் தலைகீழாக நடக்கிறது. அவர் மரணத்துக்குப் பிறகும் செயல்பட வேண்டியிருக்கிறது.

அப்படிச் செயல்பட்டாலும் முல்லாவைப் பொருத்தவரை மரணம் தான் அவரது இலக்கு.

இப்படித்தான் முல்லா வீட்டுக்கும் இடுகாட்டுக்கும் வழிகாட்டி, செத்துச் செத்து விளையாடி இல்லாமல் ஆக்குகிறார் மரணத்தை.
துயரப்படுவதற்கும் அச்சப்படுவதற்கும் காரணமே தேவையிலை. அதற்குக் காரணமான ஒரு வஸ்துவோ, உயிரோ, விவகாரமோ நம்முடையதாகக் கூட இருக்க வேண்டியதில்லை. ஒரு கருத்து நம்மைத் துயர்பட வைக்கிறது. ஒரு பொருள் நம்மிடமிருந்து தொலைந்து போகும்போது அலைக்கழிக்கிறது. ஒரு உறவு நம்மைவிட்டுப் பிரிவதற்கு முன்னாலேயே கலக்கம் தொடங்கிவிடுகிறது. ஒரு நம்பிக்கையைக் கைவிடும்போது பைத்தியம் கொள்கிறோம்.

இவையெல்லாம் நம்முடையதா என்று கேட்கும் நிலையில் தான், முல்லா இடுகாட்டுக்குச் செல்லும் வழியைக் காண்பித்து விட்டு, அதற்குப் பிறகு நான் பேசவே போவதில்லை என்று வழிப்போக்கர்களுக்கு உறுதிமொழி தந்து மீண்டும் சடலமாகத் துணிகிறார்.

எதற்கு இத்தனை பயம்?

நான் இல்லாமல் போன இடத்தில் என்ன நடந்தால் எனக்கென்ன?

அந்தக் காலிப் பகுதியில் தெய்விகம் என்ற முட்டையை இடுகிறாரா ஓஷோ?

அங்கே தான் நேசம் காதல் என்று பல முட்டைகளை இடுகிறாரா ஜலாலுதீன் ரூமி?

Comments