கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக வான்கோவின் ஓவியங்களும் அவரது வாழ்க்கை தொடர்பில் எடுக்கப்பட்ட திரைப்படங்களும் அவர் பற்றிய எழுத்துகளும் என்னைத் துரத்திக் கொண்டிருக்கின்றன. என் இன்ஸ்டாகிராம் கணக்கிலும் தினசரி, அவரது ஒரு ஓவியத்தைப் பற்றியாவது படிப்பதற்குச் சந்தர்ப்பம் வாய்த்துவிடுகிறது. லவ்விங் வின்சென்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஸ்டாரி ஸ்டாரி நைட்' பாடல் எனக்கு எல்லா வேளைகளிலும் கேட்டால் அமைதியையும் வான்கோவின் மாய உலகத்துக்கு அழைத்துச் செல்லும் அனுபவத்தையும் தொடர்ந்து தருகிறது. ஸ்டாரி நைட் பற்றி அறிஞரும் துறவியுமான நித்ய சைதன்ய யதி ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை அருமையான அவதானங்களைக் கொண்டது. அழகின் மீதான தியானம் என்று அந்தக் கட்டுரையைச் சொல்வேன். (அதைப் படிக்க : http://aranya.me/uploads/3/4/8/6/34868315/starry_starry_night.pdf))
அட் தி எடர்னிடிஸ் கேட்' திரைப்படத்தில் வின்சென்டின் கதாபாத்திரத்தை ஏற்றிருந்த நடிகர் வில்லியம் டீஃபோ, வான்கோவிடமிருந்த கிறிஸ்துவின் அம்சத்தை எனக்குத் தெரியப்படுத்தியதன் மூலம் வான்கோவும் அவரது ஓவியங்களும் எனக்கு இன்னொரு விதமாக நெருக்கமானது. வான்கோவின் காலத்தில் அவரது படைப்பு மேதமையை இனம்கொண்ட ஒரே விமர்சகரான ஆல்பர்ட் ஆரியர் அவரது ஓவியங்களைப் பற்றி எழுதிய குறிப்புகளைப் படிப்பதற்கான அறிமுகத்தை இந்தப் படம் தான் எனக்கு ஏற்படுத்தியது. அதிகபட்சம் 300 வார்த்தைகள் கொண்ட அந்தக் குறிப்பு வான்கோவின் படைப்புகளில் உள்ள அத்தனை உக்கிரத்தையும் மொழியிலும் வெளிப்படுத்திய இலக்கிய ஆவணம் அது. (ஆங்கிலத்தில் ஆரியரின் குறிப்பைப் படிக்க : http://www.vggallery.com/misc/archives/aurier.htm)
அகிரோ குரசோவாவின் ட்ரீம்ஸ் படத்தில் ஒருகதை வான்கோ குறித்தது.
ஸ்டாரி ஸ்டாரி நைட் பாடலைக் கேட்க : https://www.youtube.com/watch?v=vp5qJlr4go0
தற்செயலாக அமேசான் பிரைமில் தேடிய போது வந்த வின்சென்ட் என்னும் பெயரைப் பார்த்து ஓட்டிப் பார்த்தபோது தான் அது 'ஒரு நபர் நாடகம்' என்று தெரிந்தது. மிகுந்த அசிரத்தையுடன் தான் 1981-ல் நிகழ்த்தப்பட்ட லியானார்ட் நிமாய் நடித்த அந்த நாடகத்தைப் பார்க்கத் தொடங்கினேன்.
வின்சென்ட் வான்கோ என்ற மனிதன், ஓவிய மேதையின் உருவாக்கத்தில் அவனது வாழ்க்கையின் கடைசிவரை ஆதரவு கொடுத்த அவனது நேசனும் அண்ணனுமான தியோ தான் இந்த நாடகத்தின் ஒரே கதாபாத்திரம். வான்கோ இறந்து ஒரு வாரகாலத்துக்குப் பிறகு தனது தம்பியைப் பற்றி தியோ தனது வீட்டு அறையிலிருந்து நம்மிடம் பேசத் தொடங்குகிறார். காலம் 1890, ஜூலை மாதம்.
வான்கோ எழுதிய கடிதங்கள் வாயிலாக வான்கோவின் வரலாற்றையும் தங்களது உறவையும் பிரியம், கோபம், விமர்சனம், நகைச்சுவை, கையறுநிலை ததும்ப விளக்குகிறார். வான்கோவின் கடிதங்களைப் படிக்கும்போது மட்டுமே வான்கோவின் குரலுக்கு மாறுகிறார். மிகச் சிறிய மேடை தான். அதில் தியோவின் அறை ஒரு புறம். வான்கோவின் அறை ஈசலுடன் அவரது புகழ்பெற்ற மேஜையுடன் ஒரு புறம் உள்ளது. மேடைக்குப் பின்னே இரண்டு திரைகள். புகைப்படங்கள், கையெழுத்துகள், அந்தந்த காலகட்டத்து ஓவியங்களைக் காண்பிக்கிறது. மேடையின் ஒளியமைப்பும் வான்கோ வாழ்ந்த காலகட்டத்தையும் அவரது ஓவியங்களின் நிறம் ஒளியையும் ஞாபகப்படுத்துமாறு செய்யப்பட்டுள்ளது.
ஒரு போர் வீரனின் உக்கிரமான சண்டை போல, இயற்கையை அழகை நேசத்தை என வாழ்க்கையின் அத்தனை அம்சங்களையும் தீவிரமாக மோதித் தாக்குதல் நடத்தி நேசித்தவன் என்று வான்கோவை தியோ நமக்கு அறிமுகப்படுத்தி அவரது பிறப்பிலிருந்து தொடங்குகிறார். ஓவியராக முழுப் பயிற்சி பெற்று ஓவிய வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு முன்னர், பெல்ஜியத்தின் நிலக்கரிச் சுரங்கங்களில் கொத்தடிமை வாழ்க்கையை வாழ்ந்து வந்த ஏழை மக்களுடன் பாதிரியாராகப் பணியாற்றி அவர்களின் எளிய வாழ்க்கையை அவர்களுடனேயே பகிர்ந்துகொண்ட வான்கோவின் ஆரம்ப காலம் அவரது கோட்டுச் சித்திரங்கள் வழியாக விவரிக்கப்படுகிறது. கடும் இருட்டிலிருந்து தான் ஒளி முளைக்கும் என்கிறது வேதாகமம். சுரங்கங்களின் அந்தகாரத்தில் இருந்த ஏழைகளிடம் தான் கடவுளின் ஒளியைக் கொண்டு செல்ல வேண்டும் என்று தன் அண்ணனிடம் கடிதங்கள் மூலம் வாதிடுகிறார். இந்த இருண்ட சுரங்கங்களிலிருந்து தான் 'உருளைக்கிழங்கு தின்பவர்கள்' போன்ற மகத்தான ஓவியங்களை வரைகிறார். 1881-ம் ஆண்டு வான்கோவுக்கு அவரது ஒன்று விட்ட சகோதரியான கீயுடன் ஏற்பட்ட ஒருதலைக் காதலை முரண்நகை தொனிக்க நம்மிடம் கூறுகிறார் தியோ. மேல்நடுத்தர வர்க்க மனோபாவம், அக்காலகட்ட பாரீஸ் நகர வாழ்க்கை, பண்பாடு சார்ந்த மதிப்பீடுகள் தியோவிடம் வெளிப்படுகின்றன. கீயுடனான ஒருதலைக் காதல் சீக்கிரத்தில் பலத்த அவமானத்துக்குப் பிறகு முடிவுக்கு வருகிறது. பாரிசின் கலைஞர்கள், சீமான்கள் புழங்கும் வட்டத்தில் நுழையும் மனப்பாங்கையோ அதற்கான நாகரிகப் பழக்கவழக்கங்களோ இல்லாத நிலையில் பாரிஸ் என்ற நகரத்திலிருந்து தொடர்ந்து ஓடுபவராகவும் துரத்தப்படுபவராகவுமே வான்கோ இருந்தார் என்பதை தியோ நமக்குக் கூறுகிறார். தியோ தனது வேறுபாடுகள், வருத்தங்களோடு தம்பி புகலிடம் செல்லும் இடங்களுக்கெல்லாம் பணத்தை அனுப்பிக் கொண்டே இருக்கிறார்.
1882-ல் ஹேக் நகரத்தில் மது அடிமையும் பாலியல் தொழிலாளியுமான சியென் என்ற பெண்ணைச் சந்திக்கிறார். அந்தப் பெண்ணின் ஏழ்மை நிலையும் அவளது துயரமும் நிராதரவும் தான் வின்சென்டை அவளை நோக்கி ஈர்த்ததாக தியோ சொல்கிறார். வின்சென்ட் தன் கடிதத்தில் அவளைப் பற்றி எழுதும்போது, தான் முன்னர் காதலித்த கீயிடம் காணும் பெண்ணின் மென்மைத் தன்மை எதுவும் சியனிடம் இல்லையென்பதாலேயே அவளிடம் தான் ஈர்க்கப்பட்டேன் என்கிறார். அந்த உறவும் முடிவுக்கு வருகிறது.
மதுப்பழக்கம் வின்சென்டை ஆட்கொண்டு, புகைப்பழக்கத்தால் தொடர் இருமல் ஏற்பட்ட நிலையில் வின்சென்ட்டின் ஓவியத் திறன் வலுப்பெற்றதையும் நம்மிடம் பகிர்கிறார் தியோ. 1888-ல் அவர் வந்த ஆர்லெஸ் சிற்றூர் தான், அவரது மிகப் புகழ்பெற்ற ஓவியங்கள் நிகழ்ந்த இடமாகும். கோதுமை விதைப்பவன், செய்ண்ட் மேரிஸ் கடற்கரையில் படகுகள் நிற்கும் ஓவியம், ஆர்லசின் படுக்கையறை போன்ற ஓவியங்கள் இங்கேதான் வரையப்பட்டன. இங்கேதான் வான்கோ வானத்திலிருந்து வந்த தூதன் என்று நம்பிய ஓவியன் காகினுடனான உறவும் காது துண்டிப்புக்குக் காரணமான துயரமிக்க பிரிவும் நடைபெற்றது.
காகினை தன்னை விட மகத்தான ஓவியர் என்றும் தனது படைப்பூக்கம் அவராலேயே தூண்டப்படும் என்றும் நம்பினார். காகின் கடைசியில் அவரை பைத்தியக்காரர் என்று அவர் இறந்தபிறகும் அவதூறு சொன்னதைப் பற்றி கசப்பாக நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் தியோ. காகின் ஆர்லெஸ்சுக்கு வந்தபோது குழந்தை போல வின்சென்டிடம் ஏற்பட்ட மகிழ்ச்சியை நம்மிடம் கிண்டலுடன் சொல்கிறார் தியோ. காகின் தனது இடத்தில் வந்து தங்கும் அறையை வண்ணம்பூசி, அறைகலன்களைச் வாங்கிப் போட்டு, சுவர்களில் ஓவியங்களை மாட்டி அழகுபடுத்திய தகவலைத் தெரிவிக்கிறார்.
காகின் போன்ற சக ஓவியர்களாலும் சமூகத்தாலும் பைத்தியக்காரர் என்று கருதப்பட்ட, குழந்தைகளால் கேலிக்குரியவராக அவமதிக்கப்பட்டு விரட்டப்பட்ட, காதலுக்காகவும் நேசத்துக்காக குறைந்தபட்ச உணவுக்காகவும் சௌகரியத்துக்காகவும் அல்லாடிய வான்கோவின் வாழ்நாளில் விற்ற ஓவியம் ஒன்றே ஒன்றுதான். இறந்தபின்னர் அவர் பங்குகொண்ட இம்ப்ரஷனிச ஓவிய இயக்கத்துக்குப் பின்னர் உருவான நவீன ஓவிய மேதையாக இன்றும் கொண்டாடப்படுகிறார். கோடிக்கணக்கில் அவரது ஓவியங்களுக்கு இன்று மதிப்பு நிலவுகிறது.
வான்கோ தனது மரணம் வரை தனது ஓவியங்களை ஒட்டுமொத்தமாக காட்சிக்கு வைப்பதற்கு அனுமதிக்காத தகவலை தியோ சொல்கிறார். ஆரியரின் விமர்சனக் குறிப்பு வந்தபோதும் தனது ஓவியங்களைப் பற்றி அவர் இனி பேசக்கூடாது என்று நினைப்பதாகவும் கடிதம் எழுதுகிறார்.
ஆர்லஸ் கிராமத்தில் வின்சென்ட், அங்குள்ள குடிமக்களின் அதிருப்திக்கும் பகைமைக்கும் உள்ளாகிறார். சிறுவர்கள் அவர் போகும் இடமெங்கும், அவர் அமைதியாக ஓவியம் வரையும் வனத்துக்கும் சென்று அவரை கேலி செய்யத் தொடங்குகின்றனர். அவரது கொடூரமான நாட்கள் ஆரம்பிக்கின்றன. மருள்தோற்றங்களுக்கு உள்ளாகிறார். வலிப்பு நோயும் அதிகரிக்கிறது. அங்கு நிலவும் வெப்பமும் வான்கோவின் கோட்டிக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்ற தகவல் இந்த நாடகத்தில் சொல்லப்படுகிறது. கிராமத்துக் குடிமக்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டு வான்கோவை தனியாக ஒதுக்கி வைக்க வேண்டும் என்று நிர்வாகத்துக்கு விண்ணப்பம் அளித்த செய்தி தியோவுக்கு வருகிறது.
இரண்டு மாதத்தில் மன அமைதியைத் தேடி தானே முன்வந்து தியோவின் உதவியுடன் செய்ண்ட் பால் தி மவுசோல் மனநலக் காப்பகத்தில் வின்சென்ட் சேர்கிறார். அங்கு சக நோயாளிகளிடம் மிகுந்த பரிவையும் மதிப்பையும் உணரந்ததாக தியோவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். சில நாட்களிலேயே அவர் மனநலக் காப்பகத்துக்கு அருகே உள்ள பகுதிகளில் ஓவியம் வரைவதற்கும் அனுமதிக்கப்பட்டார். அவர் மனநலக் காப்பகத்தின் சாளரத்திலிருந்து பார்த்து வரைந்து மானுடத்துக்கு அளித்த மகத்துவமான ஓவியப் பரிசுதான் 'ஸ்டாரி நைட்' .
இயற்கையின் ரகசியப் பக்கத்தில் நடக்கும் இயக்கம், திரவ நிலை மற்றும் ஒளியின் இயக்கங்களை வான்கோ, மனத்திலுள்ள கண்ணால் பார்த்து வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தீவிரமான துயரத்திலிருந்த போது தான், இயற்கையின் புதிர்த்தன்மை கொண்ட அழகு அவருக்குப் பிடிபடவும் செய்திருக்கிறது. ஒளி உண்மையில் எப்படி நகர்கிறதோ அதே தன்மையில் தூரிகைத் தீற்றல்களும் வான்கோ போன்ற ஓவியர்களின் படைப்புகளில் இயங்குகின்றன என்கிறார்கள் இயற்பியலாளர்கள்.
வான்கோவுக்கு இருந்த கண்பார்வைக் குறைபாடும் இந்த விளைவுகளை அவரது ஓவியத்தில் கொடுத்ததாக லியோனார்ட் நம்மிடம் நாடகத்தின் இறுதி உரையில் கூறுகிறார்.
வான்கோவின் இறுதி நாட்களில் அவரது ஓவிங்கள் வரையும் வேகம் முடுக்கம் பெற்றதாக தியோ பகிர்கிறார். அவரது கடைசி இரண்டு ஆண்டுகளில் மட்டும் 200க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறார். மனநலக் காப்பகத்தில் அதிகபட்சமான கொந்தளிப்பையும் படைப்பூக்கத்தையும் அவர் உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார். அங்கு மன ரீதியாக கொந்தளிப்புக்கும் உருவெளித் தோற்றங்களுக்கு உள்ளாகிறார். காதில் சத்தங்கள் கேட்கத் தொடங்குகின்றன. விஷம் கொடுத்து யாரோ கொல்ல வருகிறார்கள் என்ற பிரமை தோன்றுகிறது.
சராசரி வாழ்க்கைக்கு சராசரி லௌகீக மதிப்பீடுகளுக்கு எதிரான ஒரு வாழ்க்கையை வாழ்ந்த வான்கோவின் துயரங்களுக்கும், 'பைத்தியக்காரத்தனங்களுக்கும்' பங்குதாரராகவும் பொறுப்பாகவும் இருந்த நிலையில் தியோவுக்கு, தனது சகோதரன் குறித்து கசப்பும் பிரியமும் விமர்சனமும் கேலியும் இருக்கிறது. ஆனால் அதேவேளையில் அவனது கலை மேதமை அவனது சகமனிதர்களிடமும் சக கலைஞர்களிடமும் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டுமென்ற வருத்தமும் வெளிப்படுகிறது. அவன் வித்தியாசமானவன் தான். அந்த வித்தியாசம் தானே நாம் போற்றும் கலைப்படைப்புகள் பிரசவிக்கக் காரணமாக இருந்தது; அதை ஏன் அந்த மனிதர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்கிறார் தியோ. வான்கோவை பைத்தியம் என்று இறந்தபிறகும் அவதூறு செய்த காகின் மேலும் அவரது படைப்புகளில் மனநிலை சிதைந்த தன்மை உள்ளது என்று விமரிசித்த விமர்சகர் மீதும் கடும் கோபத்தை நாடகத்தில் வெளிப்படுத்துகிறார். நாம் வாழும் பூமிக்கும் கடவுள் இருப்பதாக நம்பப்படும் வானகத்துக்குமான பாலமாகச் செயல்படும் அரும் படைப்புகளை அல்லவா அவன் தந்தான் என்று கூறி பாரிசின் புறநகர் பகுதியான ஓவுரெஸ்சில் கழிந்த அவனது கடைசி நாட்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். கோதுமை வயல்களின் மேல் பறக்கும் காகங்களின் ஓவியம் தான் அவரது கடைசி ஓவியம். அப்படிப்பட்ட ஒரு வயலில் தான் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார் வான்கோ.
மரணத்தின் கருப்பு, பொன் ஒளிரும் அவனது தலைக்குள் கருப்பாகப் படர்ந்துவிட்டது. அந்த ஓவியத்தில் காகங்களின் சிறகில் பேதலிப்பைப் பார்க்க முடியும்.
வான்கோவின் மரணம் தற்கொலை என்பதால் அங்குள்ள தேவாலயத்தில் அவரது இறுதிச் சடங்கு செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவரது இறுதிச் சடங்கை படிப்படியாக தியோ விவரித்து கடைசியில் அழத்தொடங்குகிறார். ஒரு பணக்காரச் சீமான் எனவும் வான்கோவின் தத்தாரி வாழ்க்கைக்கு நேரெதிரான லௌகீக சாமர்த்தியசாலி என்றும் எண்ண வைக்கும் தியோ உடைந்து அழும்போது வான்கோவுக்கு நெருக்கமான ஒரேயொரு ஆன்மா அந்த மூத்த சகோதரன் தான் என்பது விளங்குகிறது.
வான்கோ தனது அண்ணன் தியோவின் நெஞ்சிலேயே தலைவைத்து இறக்கிறார். அவர் இறந்தபிறகும் சில கணங்கள் அவரது ஆன்மா அந்த அறையில் இருந்ததாக தியோ சொல்கிறார்.
கடைசி நூறு நாட்களில் அவர் வரைந்த ஓவியங்களும் சித்திரங்களும் எழுபது.
வான்கோவின் ஓவியம், வாழ்க்கை குறித்து நான் பார்த்த சினிமாக்களில் அதிகபட்சமாக நெருங்கிச் செல்லும் சிறந்த படைப்பென்று இந்த நாடகத்தையே கருதுகிறேன்.
லியோனார்ட் நிமாய், தனது குரல் மூலம் தியோவாகவும் வான்கோவாகவும் மாறி மாறி நடித்து ஒரு நபர் நாடகம் என்ற தன்மையை மாற்றிவிடுகிறார். மிகச் சிறிய மரத்தாலான அரங்கு, தன் ஓவியத்தின் உக்கிரத்தை பார்க்கும் எவருக்கும் தொற்றவைக்கும் மகத்தான ஒரு கலைஞனின் அத்தனை குணபேதங்களையும் தன்னில் ஸ்தாபித்துவிடுகிறது.
வின்சென்ட் வான்கோவின் வாழ்க்கை சார்ந்தும் அவரது ஓவியங்கள் சார்ந்தும் பிரியம் கொண்டவர்கள் இந்தப் படைப்பைப் பார்க்க வேண்டும்.
Comments