Skip to main content

மனித அகந்தைக்கு மேலே இயற்கைபிரபஞ்சத்தின் இயக்கத்துக்கும் மனித வாழ்க்கைக்கும் இடையிலான தொடர்பை தனது சினிமாக்கள் மூலம் விசாரிக்கும் அபூர்வமான சினிமா இயக்குனர்களில் ஒருவர் டெரன்ஸ் மாலிக். அவரது சமீபத்திய படைப்பான 'எ ஹிட்டன் லைப்' எழுத்தாளர் ஜார்ஜ் எலியட்டின் வார்த்தைகளுடன் முடிகிறது.

‘உலகம் வாழ்வதற்கான இடமாக ஆவதற்கு வரலாற்று ரீதியாகப் பதிவாகாத செயல்பாடுகளும் ஒருபங்கு காரணமாக உள்ளன. உலகம் அத்தனை மோசமாக உங்களுக்கும் எனக்கும் இல்லாமல் இருக்கிறதென்றால் அதன் பாதிப் பொறுப்பு, விசுவாசத்துடன் கூடிய ஒரு வாழ்க்கையை யாருடைய கண்களுக்கும் படாமல் வாழ்ந்த தனிநபர்களையே சாரும். அதிக எண்ணிக்கையில் போய் காணப்படாத சமாதிகளில் அவர்கள் ஓய்வெடுக்கிறார்கள்.’

கொடுங்கோலன் ஹிட்லருக்கு ஆதரவான உறுதிமொழியை எடுப்பது கிறிஸ்துவுக்கு எதிரான செயல் என்று கருதி, மரண தண்டனையை அடைந்த குடியானவன் பிரான்ஸ் ஜெகர்ஸ்டாட்டர் என்ற சாதாரணனின் கதை இது.

மரணம் அவன் மீது விதிக்கப்பட்டதா? இல்லை. தான் நம்பும் சத்தியத்துக்காக அவன் மேற்கொண்ட தேர்வு அது. இயற்கையோடு சேர்ந்து வாழும் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த செயின்ட் ரேட்கண்ட் கிராமத்தின் நடுத்தர விவசாயி அவன். காதல் மனைவி, மூன்று பெண் குழந்தைகள், கால்நடைகள், வளர்ப்புப் பிராணிகள் என்று ஒரு அமைதியான வாழ்வு அவனுக்கு ஆசிர்வதிக்கப்பட்டது. ராணுவப் பயிற்சியில் குறைந்த காலம் இருந்துவிட்டு ஊர் திரும்பி மனைவி மக்களோடு ஆல்ப்ஸ் மலை தீரத்தில் விவசாயம் செய்யும் கொடுப்பினை அவனுக்கு உண்டு. இரண்டாம் உலகப் போர் முடியாமல் தொடர்ந்த நிலையில் ஜெகர்ஸ்டாட்டருக்கும் படையில் சேர அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று படையில் சேர வேண்டுமானால் முதலில் ஹிட்லருடன் இணையும் உறுதிமொழியை பகிரங்கமாக எடுக்க வேண்டும். வெறும் வார்த்தைகள் தானே என்று கிராமத் தலைவர் சொல்கிறார்; உள்ளூர் பாதிரியார் சொல்கிறார்; திருச்சபை பிஷப் சொல்கிறார்; மொத்த கிராமமும் பிரான்சையும் அவனது குடும்பத்தையும் விலக்கி வைக்கிறது. அவனது காதல் மனைவி பானி மட்டுமே கடைசிவரை அவனது தீர்மானத்துக்கு ஆதரவாக இருக்கிறாள். குடும்பத்தையும் உன் நலத்தையும் காத்துக் கொள் என்று சொல்லும் அறிவுக்கும் உள்ளுணர்வுக்கும் போராட்டக் களமாக அவனது மனம் ஆகிறது. தன் மனைவியின் ஆதரவுடன் தானே முன்வந்து பெர்லினுக்குச் சென்று கைதாகிறான்.

கிறிஸ்துவின் மனிதாபிமான நம்பிக்கையைக் கடைசிவரைக் கைவிடாத பிரான்ஸ், பானி தம்பதியினரின் கதையோடு இன்னொரு முக்கியமான கதையும் திரையில் பேச்சற்று நிகழ்கிறது.

பிரமாண்டமாக நிற்கும் மலைகளின் பின்னணியில் மனிதனின் நிச்சயங்களை மறுக்கும் பருவ காலங்களின் பின்னணியில் மனிதனுக்கு அப்பாற்பட்ட பல்வேறு உயிர்வாழ்க்கைகளின் கதை காட்சிகளின் மூலமாக நமக்கு கண்கள் அகலக் காட்டப்படுகிறது. கருணை என்பது மனிதர்களுடையது மட்டுமேயல்ல என்பது போல இயற்கையின், நிலப்பரப்புகளின், ஒளிரும் புல்வெளிகளின் காட்சிகள் உறைந்த தன்மையில் நம்முன் காட்டப்படுகின்றன. வெறுமனே புகைப்படத்துக்கு முன்னால் நிற்பதற்கான பின்னணி மட்டுமே அல்ல என டெரன்ஸ் மாலிக் காட்டும் இயற்கையின் விகாசம் நமக்கு உணர்த்துகிறது. இயற்கை கொடுப்பதை மனிதர்களே நன்மை, தீமை, ஆசிர்வாதம், சாபம் என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் டெரன்ஸ் மாலிக் சொல்லி விடுகிறார். வீடுகளிலும் சிறையிலும் வயல்களிலும் விளையாடு ஒளி நிழல்களின் விளையாட்டு இன்னொரு தனிக்கதை.

கோடிக்கணக்கான ஆண்டுகளை வயதாகக் கொண்ட மலைகளிடமிருந்து உறுதியையும் பிடிவாதத்தையும் கற்றுக்கொள்வது போல பிரான்ஸ்- பானி தம்பதியினரின் விவசாய வாழ்க்கை காட்டப்படுகிறது. நவீனம் சற்றே எட்டிப் பார்க்கத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டு ஆரம்ப காலத்திய ஐரோப்பிய கிராமப்புற வாழ்க்கையின் அத்தனை அம்சங்களும் விரிவாகக்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  பிரான்ஸ் சிறைக்குப் போன பின்னரும் பானி, தன் தாபத்தையும் நிராதரவையும் தனிமையையும் மண்ணை உழுது பாறைகளை அகழ்ந்தெடுத்து வேலிகளில் பணியாற்றி மண்ணுடனே புழங்கிக் கடக்கிறாள். அவளது கிராமத்தில் அவளுக்கு இரக்கம் காண்பிக்கும் அரிதானவன் நிலத்தை ஒட்டித் தனது அடுமனையில் ரொட்டிகளைச் சுடுபவன் தான்.

இயற்கையின் கொடூரம் எனத் தோற்றம் தரும் நாஜிக்களின் பல்வேறு விதமான கொடூரங்களை சிறையில் பிரான்ஸ் சந்திக்கிறான்.

பிரான்சின் வழக்கறிஞர் பரிந்துரைக்கும் மரண தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்பையும் மறுக்கிறான். பார்வையாளர்கள் அவனிடம் கேட்க விரும்பும் கேள்விகள் கதாபாத்திரங்களால் கேட்கப்படுகின்றன. உன்னுடைய முடிவால் உன் குடும்பத்துக்கு நீ விட்டுச் செல்வது என? உன் செயலால் வரலாற்றுப் போக்கில் எதையவது மாற்றிவிட முடியுமா? தற்பெருமை தவிர உனது செயலால் எந்த அர்த்தமாவது உண்டா?

பிரான்சின் சக கைதியான ஒருவன் சொல்கிறான். இறைவன் தன் மகனான இயேசுவைக் கூடக் காப்பாற்றவில்லை. நம்மை எப்படிக் காப்பாற்ற முடியும்? என்று கேட்கிறான்.

இத்தனை கேள்விகளுக்குப் பின்னரும் தண்டனை கொடுப்பவரைத் தவிர யாரும் திரும்ப இயலாத கில்லட்டின் அறைக்குள் பிரான்ஸ் நுழைந்து அவனது மனைவியையும் மூன்று குழந்தைகளையும் அநாதையாக்கிவிட்டு மரித்துப் போகிறான்.

ஒட்டுமொத்த சமூகமே எதிராக நின்றாலும் சரி, என்னுடைய நிலைப்பாடு சத்தியத்தின் பாற்பட்டது என்ற பிடிவாதத்தைக் கொண்ட பிரான்ஸ் போன்றவர்களின் உறுதியும் தியாகமும் தான் நம் மேல் சூழும் கொடுங்கோன்மையை எதிர்ப்பதற்கான குறைந்தபட்ச நம்பிக்கையாக உள்ளது. பிரான்ஸும் பானியும் இயற்கையிடமிருந்துதான் அந்தப் பிடிவாதத்தையும் தளராத உறுதியையும் பயின்றிருக்க வேண்டும். இவர்கள் நமக்குத் தெரியாத கிறிஸ்துகள். இவர்கள் தான் நம் மீது பேராதிக்கம் செலுத்திய காட்டுமிராண்டித் தனங்கள், அநீதிகளுக்கு எதிரான வாழ்க்கையை வாழ்ந்து இந்த உலகை நாம் வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாற்றிய சிறு தீபங்கள் அவர்கள்.

மனிதனுக்குச் சேவையாற்றுவதற்கு மட்டுமேயானதல்ல இயற்கை, அதன் நியாயம் அதற்கும் அப்பாற்பட்டது என்பதை டெரன்ஸ் மாலிக் இந்தப் படைப்பிலும் வலுவாக உணர்த்துகிறார். தாட்சண்யம், கொடூரம் என்ற நமது அர்த்தச்சுமை கொண்ட கருதுகோள்கள்களைப் பற்றிக் கவலையே படாத பிரமாண்டம் அது. மனிதனுக்கும் அமீபாவுக்கும் எந்த பாகுபாடும் அங்கே இல்லை. அந்த இயற்கை, நம்முடன் வாழ்ந்து நம்மிடம் பேசி நமது மீட்சிக்காக மரித்த கிறிஸ்துவின் அப்பனாகவோ அம்மையாகவோ கூட இருக்கலாம். அதைப்போலவே மனிதன் தனது லௌகீகத் தேவைகளுக்காக மட்டுமே படைக்கப்பட்டவன் இல்லை என்பதையும் பிரான்ஸ் எதிர்கொள்ளும் துயரங்கள் வழியாகத் தெரிவித்துவிடுகிறார். அவன் சதையால் படைக்கப்பட்டவன் தான். ஆனால் அவன் சதையின் தேவைகளுக்கு அப்பால் செல்வதற்கான பொறுப்பைக் கொண்டவன் என்கிறாரா டெரன்ஸ் மாலிக்?


Comments

Popular posts from this blog

விகடன் என்னும் ஒரு பெருநிறுவனத்துக்கு எதிராக எளியவர் பச்சோந்தி பெற்றிருக்கும் வெற்றி

கரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது.      இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் தி இந

ஒருநாள் - நகுலன்

   ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத  ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் ,  ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் .  இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை -  அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை .

நீலக்குதிரைகள் - மேரி ஆலிவர்

நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன் அது சாத்தியமாவதில் எனக்கு ஆச்சரியம் கூட இல்லை. நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது. அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது. நான் எனது கையை அதன் நீலப்பிடறியில் இட்டு கட்டிக் கொள்கிறேன். என் புளகிதத்தை அது அனுமதிக்கிறது. ஓவியன் ப்ரான்ஸ் மர்க் மூளையில் வெடிகுண்டின் உலோகத்துண்டு தாக்கி இறந்துபோனான். போரென்றால் என்னவென்று அந்த நீலக்குதிரைகளுக்கு விளக்குவதை விட நான் இறந்தே விடலாம். அவை பீதியில் மயக்கம் போட்டு விழுந்துவிடும் அல்லது அதை அவற்றால் நம்பவே முடியாது. ப்ரான்ஸ் மர்க் உனக்கு எப்படி நன்றி சொல்வது. நமது உலகம் காலப்போக்கில் கூடுதலாக அன்பானதாக ஆகலாம். அழகான ஒன்றை ஆக்கும் வேட்கை நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுளின் ஒரு சிறு துண்டாக இருக்கலாம். இப்போது அந்த நான்கு குதிரைகளும் நெருக்கமாக வந்து ரகசியங்கள் சொல்ல இருப்பதைப் போல என்னை நோக்கி தங்கள் தலையைத் தாழ்த்துகின்றன அவை பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை அவை பேசவும் செய்யாது. என்ன சொல்லக் கூடும் அவை இத்தனை அழகாக