ஆசை, பயம் இரண்டையும் கவனித்துப் பார்த்தால் அது தெருவில் அடிக்கடித் தென்படும் ஒற்றைச் செருப்பைப் போல. அதற்கு ஜோடி எதுவும் தேவையல்ல; யார் காலை விட்டுப் பார்க்கிறானோ அவன் தான் அதன் ஜோடி. எளிதாக காலை நுழைக்க முடியுமென்பதாலேயே, ஒற்றைச் செருப்பிலிருந்து விடுபடுவது போன்று அத்தனை எளிதல்ல. ஒற்றைச் செருப்பு காலோடு தரிப்பதில்லை, தலை வரை ஏறிவிடும்.
அடுத்தவர்களை அச்சுறுத்துவதற்காக ஆயுதம் எடுத்தவனையும் திரும்பிக் குத்தும் ஆயுதம் பயம்; அறிவு தன் கொடுக்கை தம்மை நோக்கி நீட்டுவதைப் போலவே.
முல்லா டீச்சராக வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்துக்கு ஒரு அழகிய நடுத்தர வயதுப் பெண்மணி தனது சேட்டைக்காரப் பையனை அழைத்துக் கொண்டு வந்தாள். தன் மகனைப் பயமுறுத்தி நல்வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்று அவள் முல்லாவை வேண்டினாள்.
முல்லா, பையனை பயமுறுத்தி அவனது அம்மாவின் மனத்தையும் கவர நினைத்தார்.
“டேய், இங்கே பாரு.” என்று முல்லா அந்தப் பையனைக் கூப்பிட்டு தனது முகத்தைக் கடுமையாக வைத்துக் கொள்ள முயன்றார். கண்ணெல்லாம் சிவக்கக் கொடூரமாக முகசதைகளைத் துடிக்கச் செய்தார். அந்தப் பையன் அவரை கோமாளியைப் போலப் பார்த்தான். இது போதாதோ என்று கருதிய முல்லா, ராட்சதன் போலத் திங்குதிங்கென்று குதிக்கத் தொடங்கினார். டேய் என்று சத்தமிட்டு வகுப்பறையை விட்டு வெளியே ஓடினார். இதைப் பார்த்த அந்தப் பெண்மணிக்கு மயக்கமே வந்துவிட்டது. மயக்கம் தெளிந்து எழுந்த அந்தப் பெண்மணி முல்லாவைக் காணாமல் காத்திருந்தார்.
முல்லா, சோர்வுடன் வகுப்பறைக்குத் திரும்பிவந்தார். ‘நான் என் மகனைத்தான் பயமுறுத்தச் சொன்னேன். என்னை அல்ல’.
"அம்மணி, இதுவெல்லாம் திட்டமிட்டா நடக்கிறது. நாம் ஒன்று நினைக்கிறோம். அது வேறாக நடக்கிறது. ஒன்று நம்மை அச்சுறுத்தும் போது அது ஆளையா பார்க்கிறது?” சோர்வுடன் வகுப்பறைக்குத் திரும்பிவந்தார்.
‘நான் என் மகனைத்தான் பயமுறுத்தச் சொன்னேன். என்னை அல்ல!’ என்றார்.
ஆசையையும் அச்சத்தையும் நேரடியாகப் பார்க்கும் போது, அது போட்டிருக்கும் முகத்திரையை, இருளை விலக்கி கூர்ந்து பார்க்கும்போதே அதன் இயல்பை வெளிப்படுத்தி நமக்குப் பரிச்சயமாகி விடும் வாய்ப்புண்டு. விஷமமான குழந்தைகளோடு தோழமை உண்டாகும் போது ஏற்படும் இணக்கம் போன்றது. அவர்களை இதத்தோடு நெருங்கிப் பார்த்தால் அந்த விஷமங்களுக்குப் பின்னால் ஒரு பாங்கு இருப்பதை நம்மால் அவதானிக்க முடியும். பரிச்சயம் கொள்ளும்போது ஒரு டினோசரஸின் முகம் கூட நமது வளர்ப்புப் பிராணியின் பிரேமை கொண்ட கண்களைக் கொண்டதாகி விடுகிறது.
எந்தக் குரூரமும் எந்த அசூயையும் எந்தப் பயங்கரமும் சரியாகப் பார்க்கப்படுதலில் தான் இருக்கிறது. சரியாகப் பார்க்கப்படும் போது எதுவுமே குரூரம் அல்ல; அசிங்கம் அல்ல; பயங்கரம் அல்ல;
நிச்சயமின்மையும், அறியாததுமான அந்தகாரத்துக்குள் நடக்க விழிப்பின் விளக்கே எப்போதைக்குமான உதவி. ஆனால் நாம் ஆசையின் எண்ணை ஊற்றப்பட்ட தீபத்தின் குறை வெளிச்சத்தைக் கொண்டு நிச்சயமின்மையின் இருட்டுக்குள் குழப்படியின் காற்று சுடரை அலைக்கழிக்கப் பயத்துடன் பயணிக்கிறோம்.
பயத்தையும் அதன் முகத்திரைக்குள் சுயமுகம் காட்டும் ஆசையையும் நமக்கு நேரடியாகப் பார்ப்பதற்கு, பயத்தின் இயல்பை பல்வேறு வகைகளில் காட்டும் முல்லாவின் வேலை அத்தோடு நிற்கவில்லை.
பயமும் ஆசையும் உயிரை எரிக்கும் பொருளாக மட்டும் எதிர்மறையான பண்பில் முல்லாவின் கதைகளில் இல்லை. உயிரைத் தொடர வைக்கும் எரிபொருளாகவும் குதிரையாகவும் ஆசையையும் பயத்தையும் பயன்படுத்துகிறார் முல்லா.
பயமும் அச்சமும் ரசவாதத்துக்கு உள்ளாவது அங்கே நிகழ்கிறது. கழுதை உயிர்பயத்தை நெம்புகோலாகப் பயன்படுத்தித் தான் படிகள் தூர்ந்து போன குளத்திலிருந்து தப்பிக்கிறது.
நிலவு ஒளிரும் ஒரு இரவில் யாருமற்ற சாலையில் முல்லா நடந்து சென்றுகொண்டிருந்த போது, அவர் ஒரு குறட்டையொலியைக் காலடிக்கு மிக அருகில் கேட்டார். உடனடியாக அவரை பயம் பீடித்தது; ஓடத் தொடங்கினார். தரையில் குழிதோண்டி தவத்தில் இருந்த ஒரு துறவியின் மீது கால்பட்டுத் தடுக்கிவிழுந்தார்.
‘நீங்கள் யார்?’ என்று முல்லா நாக்கு குளரக் கேட்டார்.
‘நான் ஒரு துறவி, இதுதான் நான் தவம் செய்யும் இடம்.’
‘அப்படியா, உங்கள் குறட்டையைக் கண்டுதான் அலறிப் போய்விட்டேன். உங்கள் இடத்தை எனக்கும் இன்று இரவு பகிருங்கள். என்னால் இனிமேலும் பயணத்தைத் தொடரமுடியாது. பயமாக இருக்கிறது.’ என்றார் முல்லா.
துறவி, முல்லாவிடம் தனது போர்வையின் மறுபகுதியைக் கொடுத்து அதைப் போர்த்தி உறங்குமாறு சொன்னார்.
நஸ்ரூதீன் உறங்கிப் போனார். அவருக்கு விழிப்பு வந்தபோது, மிகுந்த தாகமாய் இருந்தது. துறவியிடம் தனது தாகத்தைத் தெரியப்படுத்தினார்.
‘இதே சாலையில் வந்த வழியிலேயே நடந்து செல். அங்கே ஒரு ஓடை வரும்.’
‘என்னால் முடியவே முடியாது. எனக்கு பயம் போகவேயில்லை.’ என்றார் முல்லா.
முல்லாவுக்குப் பதிலாகத் தானே தண்ணீரை எடுத்துவந்து உதவுவதாக துறவி எழுந்து போனார்.
‘அய்யய்யோ, போகாதீர்கள். எனக்கே என்னைப் பார்த்து இப்போது பயம்.’ என்று தடுத்தார் முல்லா.
முல்லாவின் பயத்தைப் பார்த்த துறவி, தன்னிடமிருந்த கத்தியை முல்லாவிடம் அளித்தார்.
முல்லாவுக்கு அச்சம் மேலும் பெருகிவர, யாராவது எதிரி வந்துவிட்டால், அவரை எப்படி எதிர்கொள்வதென்று கற்பனை செய்து பார்த்தார். தனது கத்தியைச் சுழற்றுவதற்கான பயிற்சியில் இறங்கிவிட்டார்.
அப்போது தண்ணீரை எடுத்துவந்தார் துறவி.
‘கிட்ட வராதே, நான் உன்னைக் கொன்றுவிடுவேன்.’ என்று துறவியை மிரட்டினார் முல்லா.
‘நான் உனக்காகத் தண்ணீர் கொண்டுவரப் போன துறவி’
‘நீ யார் என்பது பற்றி எனக்கென்ன அக்கறை- நீ வேடம் போட்டுவந்த எதிரியாகக் கூட இருக்கலாம். அத்துடன் எனக்கு இடம் கொடுத்த துறவியைப் போன்றே தலையையும் இமைகளையும் மழித்து வேறு வந்திருக்கிறாய்’ என்றார் முல்லா.
‘நான் உனக்காக தண்ணீர் கொண்டு வந்திருக்கிறேன். உனக்குத் தாகமெடுத்தது ஞாபகத்தில் இல்லையா?’
‘நல்ல வார்த்தை சொல்லி மயக்கலாமென்று நினைக்கும் உன் பாச்சா பலிக்காது பலிக்கவே பலிக்காது.’ என்றார் முல்லா.
‘எனது இடத்தில் தான் நீ இப்போது இருக்கிறாய்.’ என்றும் துறவி சொல்லிப் பார்த்தார்.
‘அது உன்னுடைய துரதிர்ஷ்டம். வேறு இடம் பார்த்துக் கொண்டு போ.’ என்று சளைக்காமல் பதிலளித்தார் முல்லா.
‘வேறென்ன செய்வது. ஒன்றுமட்டும் எனக்குப் புரியவில்லை. இதையெல்லாம் செய்யத் தூண்டுவது எதுவென்று தான் எனக்குத் தெரியவில்லை.’
‘ஒரே ஒரு விஷயம் மட்டும் உனக்குச் சொல்கிறேன். பயம் என்பது பல திசைகளில் செல்லக்கூடியது.’ என்று பக்குவமாகச் சொன்னார் முல்லா.
‘தாகத்தை விட, மன ஆரோக்கியத்தை விட, இன்னொருவனின் உடைமையை தன்னுடையதாக்கும் கேவலத்தைவிட பயம் என்பது வலிமையானது.’ என்றார் துறவி.
‘நீங்கள் துயர்படுவதற்கு அது உங்களுடையதாக இருக்கவேண்டுமென்ற அவசியம் கூட இல்லை.’ என்று அழுத்தமாகச் சொன்னார் முல்லா.
Comments