யவனிகா ஸ்ரீ ராமின் கவிதைகளைப் பற்றித் தொடர்ந்து பேசி, எழுதி வருபவன் என்ற வகையில், அவனது கவிதைகள் பற்றி சிந்திக்க எண்ணும்போதெல்லாம் இதன் மரபு என்ன? இதன் வார்படம் என்ன என்ற கேள்வி வருவது பிரதானமானது.
1990-களின் துவக்கத்தில் ‘இரவு என்பது உறங்க அல்ல’ தொகுதியின் வழியாக அறிமுகமான யவனிகா ஸ்ரீ ராமின் கவிதைகளை, போர்ஹேயின் சிறுகதைகளைப் பற்றிச் சொல்வதைப் போன்றே ஹைப்ரிட் கவிதைகள் என்று கூறலாம். கட்டுரையின் த்வனியிலேயே வெளிப்படும் தனித்துவமான கலப்பினக் கவிதைகள் தான் யவனிகா ஸ்ரீ ராமின் தனித்துவம். யவனிகாவுக்கு முன்னால் தமிழ் புதுக்கவிதையின் முன்னோடியான க.நா.சு. இந்தக் கட்டுரைத் தன்மை கொண்ட கவிதைகளை முயற்சி செய்து பார்த்திருக்கிறார். அது சோதனை வடிவங்களே தவிர, கலையும் சிந்தனையும் சேர்ந்து வாசகனிடம் திகைப்பை ஏற்படுத்தும் அனுபவத்தைத் தரவல்லவை அல்ல.
யவனிகா ஸ்ரீ ராமின் தனித்துவமான நவீன கவிதை வெளிப்பாட்டுக்கு புதுக்கவிதையில் மரபு இருக்கிறதா என்று கேள்விக்குப் பதில் க. நா. சுவின் சோதனைகளில் நின்றுவிடுகிறது.
யவனிகா ஸ்ரீ ராம் பயன்படுத்தும் கவிதை மொழிக்கு ஒட்டுமொத்தமாக என்ன மரபு என்று யோசிப்பதற்கு, முடிவு காண்பதற்கு அல்ல, சில குறிப்புகளை முன்வைக்கலாம் என்று நினைக்கிறேன். கவிஞரும், அறிஞரும், நாட்டார் வழக்காற்றியல் அறிஞருமான ஏ. கே. ராமானுஜனை இதற்காகத் துணைக்கு அழைக்கிறேன்.
பாரதியின் வசன கவிதைகளைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையில், பாரதியின் மரபை தமிழ், இந்திய, மேற்கத்திய இலக்கியம் மூன்றின் தாக்கத்திலிருந்து ஏ. கே. ராமானுஜன் வகுக்க முயல்கிறார்.
உயிர்ப் பரிணாமத்தின் நிலைகளைப் போலவே, ஒரு குழந்தை தனது தாயின் கருப்பையில், ஒரு செல் உயிரியாகத் தோன்றி, புழுவாக, மீனாக, தவளையாக பின்னர் குரங்காக வடிவமெடுப்பது போல, பாரதி போன்ற கவிஞன் தமது இறந்தகால கலாசாரத்தின் பல்வேறு கட்டங்கள் மற்றும் வடிவங்களை தனது படைப்பில் எடுத்துரைப்பவனாகவும் மறுபரிசீலனை செய்பவனாகவும் இருக்கிறான் என்கிறார் ஏ கே ராமானுஜன்.
பாரதியைப் பற்றிப் பேசும்போதே இந்தியாவில் சமகாலத்தில் எழுதப்படும் இந்திய ஆங்கில நவீன கவிதைகள், பிராந்திய மொழியில் எழுதப்படும் நவீன கவிதைகள் பற்றிய தனது விமர்சனத்தையும் வைத்துவிடுகிறார்.
இந்திய நவீன கவிதைகள் வலிமை குன்றி, தேசலாக இருப்பதற்கு முக்கியமான காரணம் மரபோடு ஏதோ ஒருவகையில் அவை துண்டித்துக் கொண்டிருக்கின்றன என்பதை அவர் குறைபாடாகவே குறிப்பிடுகிறார். பாரதிக்கு சைவம், வைணவம், சாக்தம் சார்ந்த பக்தி கவிதை, மேற்கத்திய இலக்கியம் என வளமான தாக்கங்கள் இருந்திருப்பதைக் குறிப்பிடுகிறார்.
ஏ. கே. ராமானுஜனின் சமகாலத்தவரான கவிஞர் ஞானக்கூத்தன் என்னிடம் என் கவிதைகளைக் கொண்டு என் மரபை வகுத்துவிடலாம் என்று விளையாட்டுத் தொனியில் அச்சுறுத்தினார். என்ன மரபு நீங்கள் சொல்வது என்று நான் கேட்கும் அளவுக்கு அப்போது எனக்கு தெளிவில்லை. சமய மரபு என்ற ஒன்றை நவீன கவிதை இழந்துவிட்டது; சமயமும் தத்துவமும் செழுமைப்படுத்தும் அடிப்படைக் கேள்விகளை தமிழ் நவீன கவிதைகளில் இழந்துவிட்டோம் என்று அவர் எனக்கு கொடுத்த நேர்காணலில் புகாராகவே கூறியுள்ளார். உலகத்துக்கும் தனிமனிதனுக்கும் இடையே உள்ள கேள்விகளை, விந்தையை, திகைப்பை அவர் சமய உணர்வாகச் சொல்கிறார் என்று நான் புரிந்துகொள்கிறேன்.
000
யவனிகாவின் கவிதைகளைத் தொடர்ந்து படித்துவந்தும் அவனது மொழி மரபைக் கண்டறிவது சவாலாகவே இருந்தாலும் யவனிகாவின் கவிதைத் தொனி, உள்ளடக்கத்தின் சாயலில் எதுவெல்லாம் பிரதிபலிக்கிறது என்பதை என்னால் தொடர்ந்து பார்க்க இயல்கிறது.
வரலாறும் அரசியலும் இயற்கையும் பருவநிலைகளும் கருத்துநிலைகளும் தோற்கடித்து பூர்வ நிலங்களிலிருந்து விரட்டப்பட்ட ஒரு குடியானவனின் ஏக்கமும், கேவலும், அச்சமும், மென் ஓலமும், சகுனங்களும்தான் அவனது தொனி உள்ளடக்கம் என்று சொல்வேன். அந்தக் குடியானவனை விக்ரமாதித்யனைப் போல தமிழ் குடியானவன் என்று சொல்ல முடியுமா? சொல்ல முடியாது. இந்தியத் தன்மை கொண்டவனா அவன்? இல்லை. ஏனெனில் கரைகளில் இருக்கும் சந்தைகளில், மாறும் பாலியல் நடத்தைகளில் யவனிகாவின் கவிதைக் கண்கள் பதிந்திருந்ததே தவிர நதிகளைப் பாடவேயில்லை.
கிட்டத்தில் தெரியும் அவ்வப்போதைய மகிழ்ச்சியாக உணவையும், தூரத்தொலைவில் தெரியும் எப்போதாவது கிடைக்கும் மகிழ்ச்சியாக புணர்ச்சியையும் இரண்டு கனவுப் பொட்டலங்களாக தன் கொழுக்கொம்பில் தொங்கவிட்டபடி அலையும் ஒரு பயணி.
தமிழ்க் கவிதையில் பரத்தைப் பற்றிச் சிந்தனையே இல்லாத கவிஞன் யவனிகா. உணவும், இணையும் இருக்கும் இகமே அவனது உலகம். பரத்தின் இடத்தில்தான் மனம் யவனிகாவுக்கு. அரூபமாக இருக்கும் மனத்தை கனமான உடல்தான் சுமக்கிறதென்ற பொறுப்பையும் கடப்பாட்டையும் வைத்திருப்பது யவனிகாவின் கவிதைகள். கவிஞன் உண்டாக்கும் கவிதைகளும் ரொட்டி தயாரிப்பவன் தயாரிக்கும் ரொட்டிகளுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை என்ற பிரக்ஞையைக் கொண்டிருப்பவை யவனிகாவின் கவிதைகள்.
‘கிடக்கட்டும் கழுதை’ என்ற இத்தொகுதியிலயே தனது மதிப்பை எலும்பு நீக்கிய 55 கிலோ இறைச்சியாகவே ஒரு கவிதையில் குறிப்பிடுகிறான் கவிஞன். நாக்கு முதல் மூளை வரை அதில் என்னென்ன பயன்கள், என்னென்ன பாதகங்கள் என்று கூறும் யவனிகா, தனது இறைச்சியில் மனத்தின் கனத்தையோ நிறையையோ நமக்குச் சொல்லவேயில்லை. தன்னை பொது இறைச்சி என்றே குறிப்பிடுகிறான்.
கோதுமையாக இந்தப் பூமிக்கு வந்துவிட்டால் மாவாக அரைக்கப்பட்டு ரொட்டியாக ஆவதே தனது பயன்மதிப்பு என்பதை உணர்ந்த அபூர்வமான கவிஞன். அதிக ரொட்டிகளைச் சுடுவதால் என் பெயர் ஏன் சொல்லப்பட வேண்டுமென்று கேட்ட பெட்ரோல்ட் ப்ரெக்டின் வழிவந்த சமூக கடப்பாடுடைய கவிஞன் அல்லவா யவனிகா ஸ்ரீ ராம்.
பக்திக் கவிஞன் கபீரின் வாழ்க்கைப் பார்வைக்கு நேரெதிரான பார்வையைக் கொண்டவன் யவனிகா.
தீராத கர்மம், பிறப்பிறப்பைத் தரும் கல் திருகையில் அரைபடாமல் மோட்சத்தை எட்டுவதற்கு, திருகையின் மைய அச்சை கடவுளாகப் பற்றியிருக்கச் சொல்கிறார் கபீர். மைய அச்சுக்கு அருகிலிருக்கும் கோதுமை அரைபடாமல் தப்பித்துவிடுகின்றன.
யவனிகாவுக்கோ கல் திருகை, எஜமானர்களும் அடிமைகளும் முதலாளிகளும் தொழிலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் புதிய சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் அதி ஊதியக் கூலிகளும் முரணியக்கம் கொண்டு நகர்த்திய மனிதப் பண்பாட்டின் ஒரு நிலையில் கண்டறியப்பட்ட ஒரு உற்பத்தி எந்திரம் அவ்வளவுதான். அவனுக்கு மைய அச்சு கடவுளோ, இயற்கையோ கூட அல்ல. அரைபட்டு விடு, அரைபட்டு விடு சீக்கிரம் அரைபட்டுவிடு, இல்லையென்றால் மறுபடி மண்ணில் விதையாகி, நாற்றாகி, தானியமாகி மீண்டும் மீண்டும் கல் திருகைக்கு வருவாய் அரைபட்டு விடு அரைபட்டு விடு என்பதே அவனது தியானிப்பாகவும் கவனமாகவும் இருக்கிறது.
அதனாலேயே அவனது கவிதை உலகம் அதிக மாறுதலின்றி எந்திரம் அரைக்கும் ஒரு த்வனியிலேயே சமீபகாலம் வரை இயங்கியிருக்கிறது.இயற்கையையும் ஒரு பிரமாண்டமான எந்திரமாக கண்டவன் அல்லவா?
000
கிடக்கட்டும் கழுதை’ என்ற யவனிகா ஸ்ரீ ராமின் புத்தகத் தலைப்பிலிருந்து, கவிதைகளில் ஏற்பட்டிருக்கும் உள்ளடக்கம், தொனியின் மாறுதல்தான் அவன் உலகில் ஏற்பட்டிருக்கும் அபூர்வமான மாற்றம்.
அறிவு, கருத்து, சமூகப் பொறுப்பு என இதுவரை கனமாகப் பாவித்த உடைகளை, அச்சத்தால் பூட்டிய கவச குண்டலங்களை, அவன் இறுதியாக தனது புழக்கடைக் கொடியில் தொங்கவிட்டு, அந்தக் கொடியின் மீது அணில் மெதுவாக நடந்து வாலைத் தூக்கிக் காட்டியபடியே கடப்பதை வேடிக்கை பார்க்கும் ஏகாந்தத்தையும் ஒருவிதமான விட்டேற்றித்தனத்தையும் அவன் அடைவதற்குக் கிடைத்த அவகாசங்களைத் தெரிவிப்பதாக இந்தக் கவிதைகள் எனக்குத் தோன்றுகின்றன.
எதன் மீதும் புகார் சொல்லமுடியாத கனத்த மௌனத்தின் மீது யவனிகாவின் கண்கள் தன்னையும் உள்ளடக்கிய இயற்கையில்,எளிய அழகுகளில், ஏகாந்தத்தில் நிலைகொள்ளத் தொடங்கியிருப்பது தனிப்பட்ட நண்பனாகவும் மகிழ்ச்சி.
ஞானக்கூத்தனின் பிற்காலக் கவிதைகளில் எழுதும் தன்னிலையின் வயது குறைந்துகொண்டே வந்து கல்மிஷமில்லாத பார்வையைக் கொண்ட 12 வயதுச்சிறுவனின் கண்களை அவரது கடைசித் தொகுப்பான இம்பர் உலகத்தில் அடைந்தது. பென்சில் கோடுகள் தொகுதியிலிருந்து அந்தச் சிறுவனை நோக்கி ஞானக்கூத்தன் தன் இறுதி வரைப் போய்க்கொண்டிருந்தார்.
யவனிகாவுக்கு அப்படி ஒன்று ‘கிடக்கட்டும் கழுதை’ தொகுதியில் நடக்கத் தொடங்கியுள்ளது.
யவனிகா கண்ணுக்குத் தெரியாத வஸ்துவைப் பார்த்து உண்டாகும் பேருணர்ச்சியில் விந்தையும் வெட்கமும் படத்தொடங்கியுள்ளான் கவிதையில் முதல்முறையாக.
இது அழகிய திருப்பம்.
உடைந்த கைபேசி கவிதையின் இறுதியில்
ஆனாலும் எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன்
நைச்சியமாக
இணைக்கென சீத்தா மரத்தில் வழக்கமாய் வந்து கீச்சிடும்
இந்த அணிலுக்கு வேறு வேலைகள்
இல்லையா
போ போ அணிலே எத்தனை பழங்களைத்தான் குடைவாய்
வெட்கமாய் இருக்கிறது
சித்தாந்தம், சிந்தனை, அறிவு, தத்துவம் என்று நினைத்து நினைத்து பல பழங்களைக் குடைந்தவன் இப்போது ஓயாமல் பழங்களைக் குடையும் அணிலைப் பார்த்து வெட்கப்படுகிறான்.
யவனிகா ஸ்ரீ ராம் வெகு கால அலைக்கழிப்புக்குப் பின்னர் சந்தை இரைச்சலிலிருந்து ஜரதுஷ்டிரனைப் போல வீடு திரும்பியுள்ளான்.
உன் கவிதைக்கு ஒரு பகல் ஒரு இரவு அல்ல; நித்தியம் காத்திருக்கிறது யவனிகா!
மீந்த மதுக்கோப்பையை மலை உச்சியில் வைத்துவிட்டு
பள்ளத்தாக்கில் பாய்ந்தேன் தரையைத் தொடும் முன்
இடையே துரதிர்ஷ்டவசமாக யாரோ
உச்சுக்கொட்டுகிறார்கள் ப்ச் ப்ச்.
எதற்கும் பொறுப்பேற்க வேண்டாம். பொறுப்பினால் வரும் வலியும் கனமும் விரக்தியும் வேண்டாம். நீ கவிஞன், நீ கவிஞன், நீ கவிஞன் மட்டுமே; அந்த நம்பிக்கை உன்னைக் காப்பாற்றிவிடும். நீ உண்டாக்கிய அழகை அதன்வழியாக நீ உருவாக்கிய புனைவை நீயே தூஷணை செய்யாதே, அதை நீயே விரோதிக்காதே!
(திணைகள் இணையத் தளத்தில் வெளியான கட்டுரை)
Comments