Skip to main content

கடவுளின் இடத்தில் காமராக்கள்



ஷங்கர்ராமசுப்ரமணியன்

நாம் எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் நம்மை மேலிருந்து கேமராக்கள் கண்காணிக்கத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வேலை பார்க்கும் அலுவலகங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், உணவு விடுதிகள், நெடுஞ்சாலைகள் முதல் தெருமூலை பிள்ளையார் கோயில்கள் வரை மேலிருந்து பார்க்கின்றன. ஏதாவதொரு கேமராவின் கண்கள். சிறுசிலிருந்து பெரிசுவரை எலெக்ட்ரானிக், கணிப்பொறி சார்ந்த அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் சென்னையின் முக்கியக் கடைவீதியான ரிச்சி ஸ்ட்ரீட்டில், முதலாளி பணியாட்களைக் கண்காணிப்பதற்கும், கணவர்கள் மனைவிகளை வேவு பார்ப்பதற்கும், பெற்றோர் குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்குமான கேமரா ஒற்றுக் கருவிகளுக்குத்தான் தற்போது மிகவும் மவுசு. பேனா, பொம்மைகள், கதவில் ஒட்டும் ஸ்டிக்கர் பொட்டு என சந்தேகமே பட முடியாத எல்லா வடிவங்களிலும் ஒற்று கேமராக்கள் நம்மைச் சுற்றி இயங்கிக்கொண்டிருக்கின்றன. அன்றாடம் நாம் படிக்கும் தினசரிகளில் இந்த கேமராக்கள் பற்றிய வரிவிளம்பரங்களும் வருகின்றன. எல்லாருக்கும் சாத்தியமான சல்லிசான விலையில்!

சென்னையின் முக்கிய வீதிகளெங்கும் சிசிடிவி கேமராக்கள் விற்கும் நிறுவனம் ‘மேல இருக்கிறவர் எல்லாத்தையும் பார்த்துட்டுதான் இருக்கார்’ என்ற கவர்ச்சிகரமான, தமாஷான விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. சொல்லப்படும் கருத்துக்கள், எழுதப்படும் எழுத்து, இணையத்தில் தனிப்பட்ட வகையில் பகிரப்படும் அந்தரங்கம், பேச்சுகள், உண்ணும் உணவு, உடுக்கும் உடை என அனைத்தும் கண்காணிக்கப்படும் சூழலில் நாம் வாழ்கிறோம்.
தகவல் தொழில்நுட்பம் அடைந்திருக்கும் பிரமாண்ட வளர்ச்சி, மனிதகுலத்துக்குப் பல சவுகரியங்களைத் தந்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்வது அவசியமும்கூட. அதேவேளையில், தனிமனிதனின் இறையாண்மைக்குள், அந்தரங்கத்துக்குள் அத்துமீறும் தொழில்நுட்பங்களை எச்சரிக்கையுடன் பரிசீலிக்க வேண்டிய சமயம் இது. பாகிஸ்தானுக்குள் ஆளற்ற அமெரிக்க விமானங்கள் நுழைந்து நாடுகளின் இறையாண்மை கேள்விக்குள்ளானதையும் இத்துடன் யோசிக்க வேண்டும்.

‘எனது படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’ என்ற தலைப்பில் மனுஷ்ய புத்திரன் ஒரு கவிதையை எழுதியிருப்பார். இணையத்தில், குறைந்தபட்சமாக அதன் மின்னஞ்சல் சேவையை ஒருவர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டாலே போதும்; அவரது பாலினம், வீட்டு முகவரி, அலுவலக முகவரி, அவரது பயண விவரங்கள், அவர் பயன்படுத்தும் மாத்திரைகள், சைவமா அசைவமா, பாலியல் விருப்பங்கள் வரையிலான விவரங்களைச் சேகரித்துவிட முடியும். கூகுள் தேடுபொறி மற்றும் யூடியூபைப் பயன்படுத்துபவராக இருப்பின் அவரது ஆளுமை மற்றும் உளவியலுக்குள்ளேயே ஒருவரால் நுழைந்து சென்று பார்த்துவிட முடியும். நமது படுக்கையறையிலேயே நம்மை ஒற்றறியும் கருவிகளை நாமே வளர்ப்புப் பிராணிகளைப் போலப் பராமரிக்கிறோம்.

நாம் பயன்படுத்தும் கைபேசிகளின் விலையும், அதன் செயலிகளும் அதிகரிக்க அதிகரிக்க நாம் கூடுதலாகக் கண்காணிக்கப்படவும் பின்தொடரவும் படுகிறோம். இன்று இணையத்தில் தொழில்முறையில் எடுக்கப்படும் நீலப் படங்களுக்கு மவுசு இல்லை. சாதாரண மனிதர்களின் அந்தரங்க கேளிக்கைகள்தான் எம்எம்எஸ், ஸ்கேண்டல் வீடியோஸ் என்ற பெயரில் அதிகம் பேரால் பார்க்கப்படுகின்றன. கைபேசிகள், படுக்கையறைகளை நீலப்பட ஒளிப்பதிவுக் கூடங்களாக மாற்றும் அவலம் தொடங்கி 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

இதன் தொடர்ச்சிதான் தற்போது அத்தியாவசியப் பொருளாக எல்லாவற்றையும் மேலிருந்து பார்க்க நம் மீது திணிக்கப்படும் சிசிடிவி கேமராக்கள். அரசு, காவல்துறை, நிறுவனங்களின் கண்காணிப்பு ஒருபுறம் எனில், மக்கள் பரஸ்பரம் கண்காணிப்பதற்கான ‘நமக்கு நாமே’கண்காணிக்கும் இதுபோன்ற சிசிடிவி வேவுக் கருவிகள் ஒருபுறம். ஒரு சமூகமாக, ஒரு குடும்பமாக நாம் ஒருவரையொருவர் கண்காணிக்கத் தொடங்கும் நடவடிக்கை இது.
நமக்கு நெருங்கிய ஒருவரைக் கண்காணிக்கும்போது நாமே போலீஸாக மாறுகிறோம். நமக்கு நெருங்கியவரால் நாம் கண்காணிக்கப்படும்போது நாமே குற்றவாளியாக மாறுகிறோம்.
சமூக அமைப்பும் அரசியல் சாசனமும் குற்றம் என்றும் நன்னடத்தை என்றும் ஏற்றுக்கொண்டிருக்கும் பழக்கங்களுக்கிடையே வரையறுக்க முடியாத பல பழக்கங்களும், நடத்தைகளும் நம் அன்றாடத்தில் இருக்கின்றன. வீடு மற்றும் பொது இடங்களில் அதுபோன்ற நடத்தைகள் அதன் பின்னணியைக் கொண்டு ஏற்கவும் மறுக்கவும் கண்டிக்கவும் விலக்கவும் படுகின்றன.

ஒருவர் தனியாக வீட்டில் இருக்கும்போது அபானவாயுவைச் சத்தமாக விடுவது, தன்னிஷ்டப்படி இருப்பது, குரங்கு சேஷ்டை செய்வதெல்லாம் அவரது அந்தரங்கம். ஆனால், அதை ஒரு ஒற்று கேமரா பார்க்கும்போது அவமானத்துக்கு உரிய செயலின் சாயல் அதற்கு எளிதாக வந்துவிடும். அந்தப் பழக்கத்துக்கு ஒரு மனநோயின் பெயரைக்கூட விபரீதமாகக் கொடுத்துவிடலாம். ஒரு கேமராவால் ஒரு செயலை மனிதனைப் போலப் பகுத்தறிந்து விளக்க முடியாது. வசந்த பாலனின் ‘அங்காடி தெரு’ திரைப்படத்தில் பூட்டப்பட்ட ஜவுளிக்கடையில் உள்ளே மாட்டிக்கொள்ளும் காதலர்கள், ஜவுளி நிறுவனத்துக்கு எதிரான எந்தக் குற்றத்தையும் இழைக்கவேயில்லை. ஆனால், அங்கே சிசிடிவி அவர்களைக் குற்றவாளியாக்கிவிடுகிறது. கண்காணிக்கும் அமைப்பின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் ஒரு அமைப்பு, நினைத்துவிட்டால் குற்றவாளியாக்கிவிட முடியும்.

சமூகத்துக்கும், தனிமனிதர்களுக்கும், அரசுக்கும் குடிமக்கள் மீது, பிற சமூகங்கள் மீது, சகமனிதர்கள் மீது நம்பிக்கை குறையும்போதுதான் கண்காணிப்பு என்பது அத்தியாவசியமாகிறது. கேமராக்களை நான்குபுறமும் பொருத்தியிருக்கும் ஒரு பங்களா, தினசரி கள்வர்களை ஈர்த்தபடிதான் இருக்கிறது. கழிவறை வரை கண்காணிக்கும் அமைப்புகளைப் பொருத்தும் ஒரு தேசம், தினசரி குண்டுவெடிப்புகளுக்காகக் காத்திருக்கிறது. கண்காணிப்பு எப்போதும் குற்றங்களைக் குறைப்பதில்லை. குற்றங்களைக் கூடுதலாக ஈர்க்கிறது.
ஒரு திருட்டுச் சம்பவம் என்பது ஒரு குடும்பத்துக்கோ ஒரு வீட்டுக்கோ வாழ்வில் ஒருமுறையோ இருமுறையோ நடப்பதுதான். ஒரு கொலையோ, குண்டுவெடிப்போ அதுபோன்ற துர்சம்பவங்களோ எப்போதும் விதிவிலக்குகள்தான்.

ஆனால், நாம் குடும்பமாக, சமூகமாக அரசாகக் கண்காணிப்பு அமைப்புகளைப் பலப்படுத்திக்கொண்டே போவதன் வழியாகக் குற்றங்களைக் கூடுதலாக ஈர்த்துக்கொண்டிருக்கிறோம்.

கண்காணிப்புக் கேமராக்கள் அத்தியாவசியப் பொருளா வதும், தெருச்சந்தைகளில் சல்லிசாகத் துப்பாக்கிகள் தடையற்றுக் கிடைப்பதற்குச் சமானமானதுதான். தனிப்பட்டவர்களின் அந்தரங்கம் முழுமையாகப் பாதுகாக்கப்படும் மேற்கு நாடுகளைவிட, தனிப்பட்டவர் களின் அந்தரங்கம் எப்போதும் குடும்பத்தால், சமூகத்தால், சாதி அமைப்புகளால், ஊடகங்களால் கேள்விக்குள்ளாக்கப்படும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த ஒற்றுக் கருவிகள் குடிமக்களுக்கு மேலும் மோசமான பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

நமக்குத் தாங்க முடியாத துயரம் ஏற்படும்போதோ, பகுத்தறிவுரீதியாகப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியாதபோதோ, திடீர் நோய்களால் அவதிப்படும் போதோ, அதிலிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக் கொள்ள, எல்லாவற்றையும் மேலேயிருக்கிறவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான் என்று சொல்லி, நாம் சற்று ஆறுதல் கொள்கிறோம். கடவுள் இருக்கிறாரோ இல்லையோ தற்காலிகமாக நமது பாரங்களை வைக்கும் காலி பீடமாக ஓரிடத்தைக் கருதுகிறோம். அது ஒரு நம்பிக்கை.

ஆனால், தற்போது நம்மை நாமே கண்காணிப்பதற்காக நம் வழியெங்கும் நிறுவிக்கொண்டிருக்கும் கேமரா கருவி களோ அவநம்பிக்கையின் ஒட்டுமொத்த அடையாளம்!
(தி இந்து தமிழ் நாளிதழில் பிரசுரமானது)

Comments