Skip to main content

தேவதச்சனுக்கு விளக்கு விருது




தமிழில் நவீனகவிதை என்னும் வடிவம் பலராலும் பழக்கத்தின் அடிப்படையிலும், உளநமைச்சலின் பாற்பட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நவீனகவிதையின் அழகை, பார்வையை, கோணத்தை, மொழியை தொடர்ந்து புதுப்பித்து வருபவர்கள் சொற்பமே. அவர்களில் ஒருவர் தேவதச்சன்.

தேவதச்சன் என்னும் கவிஞன் உலகத்தைப் பார்க்கும் கோணம் வாசகனுக்கு பரிச்சயம் இல்லாதது. நவீன கவிதையின் நுட்பமான வாசகர்கள் என்று கருதிக்கொள்வோரில் பெரும்பாலானவர்கள்,சமூகவியல், அறவியல், அரசியல், உறவுகள் சார்ந்த உணர்வுத் தளத்திலேயே தொடர்ந்து கவிதை என்னும் அந்த வார்த்தைக்கூட்டத்தை அர்த்தப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் தேவதச்சனின் கவிதைக் கண்ணாடி, நமது கண்களுக்குப் பரிச்சயமான இடத்திலேயே இருக்கும் நாம் பார்க்க மறந்த பொருட்களைத் தொடர்ந்து காட்டுகிறது. அர்த்தத்தின் பயனாளிகளை அது சற்றே தலை கிறுகிறுக்க வைக்கிறது.

நானும் பிரபஞ்சமும் உறவுகொள்கிறோம். நானும் பிரபஞ்சமும் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கிறோம். பரஸ்பரம் எங்களுக்குள் நடக்கும் வேதிமாற்றத்தை என்னிடம் உள்ள ஒரு நான் கவனித்துக்கொண்டே இருக்கிறது. ஆனந்தம் கொள்கிறது. அங்கே காரண, காரிய,தர்க்க, மொழி வரையறை இல்லை. அங்கே எல்லாம் மாறிக்கொண்டிருக்கிறது. ஒரே நிறத்தில் ஒன்றும் இல்லை. அங்கே சமூகவியல் வரையறுத்த உணர்ச்சிகள் மட்டும் இல்லை. லட்சம் கோடி பரவசமுனைகள், துக்கங்களை தேவதச்சன் மீட்டுகிறார்.

அவரின் வண்ணத்துப்பூச்சிகள் வீடுகள், காவல்நிலையங்கள், வதைக்கூடங்கள், சிறைகள், மருத்துவமனைகள், கடைவீதிகளின் மீதுதான் பறக்கின்றன..உட்காருகின்றன..ஆனால் அவற்றின் வண்ணங்களும் அதன் சுதந்திரமும் எங்கிருந்து தோற்றுவாய் கொள்கின்றன...அவற்றை வண்ணத்துப்பூச்சி எங்கிருந்து பெற்றது..

தேவதச்சனின் கவிதைகளைப் படிப்பவர்கள் எல்லாரும் தேவதச்சனின் மூக்குக்கண்ணாடியை அணிந்துவிடலாம்..ஆனால் தேவதச்சனின் மூக்குக்கண்ணாடிக்குப் பின்னும் கல்மிஷமின்றி சிரித்துக்கொண்டிருக்கும் தேவதச்சனின் கண்களை அணிவது அத்தனை சுலபமில்லை..


விளக்கு விருது கிட்டியிருக்கும் சமயத்தில் தேவதச்சனுக்கு வாழ்த்துகள்.


Comments