Skip to main content

தமிழ் புரோட்டா



நீங்கள் என்னைத் தூள்தூளாக்குங்கள்
நீர் ஊற்றிச் சேர்த்து
உருட்டிப் பிசைந்து
உங்கள் மூர்க்க பலத்தால்
அடித்துத் துவைத்தெடுங்கள்
பாலியஸ்டர் துணிபோல்
என்னை நெகிழ்வாக்கி
நீட்டி விசிறியடித்து
காற்றுத் தங்கும் பலூன் பந்துகளாக
மேஜையில் அடுக்குங்கள்.
அப்போது கடவுள் போல்
நான் ஒளிர்வேன்.
பின்னர் மீண்டும் தட்டி மடித்து
வட்ட சதுர முக்கோணங்களாக
எண்ணைய் கொதிக்கும்
வாணலியிலோ
கல்லிலோ இட்டுப் பொறித்தெடுங்கள்
உங்கள் அரும்பசிக்குச் சுவையான
உணவாய் நான் மாறுவேன்...
உங்கள் வரலாறு
மூர்க்கம்
ஆசைகள்
காமம்
மூட்டம்
வலி
அரசியல்
துயரங்கள்
நெருக்கடி
உழைப்பு
உங்கள் மாமிசமும் சேர்ந்த
குழம்பில்
நான் மிதந்தூறிக் கொண்டிருக்கிறேன்.
மீண்டும்
மடிப்புமடிப்பாக
தூள்தூளாகக் கரைந்துபோகக்
காத்திருக்கும்
தமிழ் புரோட்டாதான்
நான்.

Comments