வண்ணமீன்களின் குழுத்திரள் தான்
தம் இயல்பென
யுவதிகள்
கைகோர்த்தபடி
குமிழ்விடும் சிரிப்பால்
வீட்டையும் சிறைகளையும்
முற்றுகையிடுகின்றனர்
ஒரு பொழுதில்
மீன்கூட்டத்தின் வெளிவடிவை
வரைந்தால்
ஒரு பெரிய மீன்
கிடைக்கலாம்
சிரிப்பற்று
அடுக்குமாடி குடியிருப்புகளில்
பால்கனிகளில்
குட்டிமகளின்
சிகையில் சிக்கெடுக்கும்போது
ஏக்கமுடன் சலிக்கும்
செடிகளாய் நிற்கின்றனர்
ஒருபொழுதில்
கசப்பில் உலர்ந்து
காய்ந்து நிற்கும்
முதிய வேம்பின் நிழலில்
காத்திருக்கிறார்கள்
அனிச்சையாக
உதிரும் இலைகளின்
கிளிநடனம்
ஞாபகத்தைப் போல்
அவர்களை அலைக்கழிக்கிறது
ஒருபொழுதில்
Comments