ஷங்கர்ராமசுப்ரமணியன்
எங்கிருந்து புறப்பட்டு நகரமெங்கும்
பரவுகிறார்கள்
இந்த விற்பனைப் பிரதிநிதிகள்
கழுத்துப்பட்டையை ஓயாமல்
சரி செய்துகொண்டு
காலை வணக்கம் ஐயா
நாங்கள் சூரிய உதயத்திலிருந்து
வருகிறோம்
எங்கள் கருவியின் செயல்பாட்டை
உங்களுக்கு நிகழ்த்திக் காட்ட
அனுமதிப்பீர்களா
சரி ஐயா
உங்கள் சிரமம் புரிகிறது
தொந்தரவுக்கு மன்னிக்கவும்
உங்கள் நாயைக் கொஞ்சம்
பிடித்துக் கொள்ளுங்கள்
நாங்கள் வெளியேறுகிறோம்
ஒரு வீட்டின் வரவேற்பறையில்
யாரோ தெரிய
வாசல்கதவை மென்மையாக
திறக்கிறார்கள்
காலை வணக்கம் ஐயா
நாங்கள் சூரிய உதயத்திலிருந்து
வருகிறோம்.
(எனது முதல் தொகுதியான மிதக்கும் இருக்கைகளின் நகரம் தொகுப்பில் இருந்து- வெளியானது 2001)
Comments