Skip to main content

(ராம் கோபால் வர்மா) சைக்கோவுக்கு 50 வயது

 தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்1960 க்கு முன்பு ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் சைக்கோ வெளிவரும்வரை யாரும் குளியலறை ஷவரில் குளிப்பதற்கு அச்சப்பட்டிருக்கவே மாட்டார்கள். அன்றாட குளியல் சடங்கை, கொலைக்கான, சரியான பின்னணியாக சைக்கோ திரைப்படம் மாற்றியது. அந்த திரைப்படம் வெளியாகி ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டாலும், அதே பாணியிலான எண்ணற்ற திரைப்படங்களை நாம் பார்த்துவிட்டாலும் ஒவ்வொரு சினிமா ரசிகனின் பிரக்ஞையிலும் சைக்கோவின் தாக்கம் இன்னும் மறையாமல் இருக்கிறது.

சைக்கோ திரைப்படம் பற்றிய எனது முதல் நினைவு இதுதான். வீட்டிலும் பள்ளியிலும் நான் செல்லும் அனைத்து இடங்களிலும் சைக்கோ பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அத்திரைப்படம் பார்த்த கிளர்ச்சியுடன், யாருக்காவது தனியாகப் பார்ப்பதற்கு துணிச்சல் உண்டா என்று ஒருவருக்கொருவர் சவால் விட்டுக்கொண்டிருந்தனர்.

 சைக்கோ வெளிவந்து 22 வருடங்களுக்குப் பிறகு சைக்கோவின் இரண்டாம் பாகத்திற்கான சுவரொட்டியைப் பார்த்தேன். அந்த சுவரோட்டியில் சைக்கோவில் வரும் வீடு ஒளிநிழலில் இருக்குமாறு  அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தலைப்பின் கீழ் துணைத்தலைப்பாக, "22 வருடங்களுக்குப் பிறகு நார்மன் பேட்ஸ் தனது வீட்டுக்குத் திரும்ப வருகிறார்" என்று எழுதப்பட்டிருந்தது.  22 வருடங்களுக்குப் பிறகும் ஆராதிக்கப்படும் நிலையில் இருந்த சைக்கோவின் புத்திசாலித்தனத்தை அப்போது எண்ணி வியந்தேன். சைக்கோவில் வரும் அந்த வீட்டையும்  உடைமையாளரான அந்த ஆசாமி நார்மன் பேட்சையும் அனைவரும் நினைவில் வைத்திருந்தனர். அதற்குப்பின்னர் 25 வருடங்களுக்குப் பிறகும் இன்னமும் எல்லாரும் அத்திரைப்படைத்தைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

இன்று சைக்கோ திரைப்படத்தை பார்ப்பவர்கள் அத்திரைப்படத்தின் தொழில்நுட்ப மாயத்தையும் கதைசொல்லும் மேதமையையும், குறைவாக மதிப்பிடுவது மிகவும் எளிதானது. ஏனெனில் சைக்கோ திரைப்படத்திலிருந்து ஏகப்பட்ட காட்சிகள் உட்பட ஆயிரக்கணக்கான தடவை பின்பு வந்த படங்களில் பயன்படுத்தப்பட்டு கேலிக்கூத்தாக்கப்பட்டுவிட்டது. இப்பின்னணியில் மூலப்படமான சைக்கோவைப் பார்க்கும்போது அதுவும் கேலிக்கூத்தாக ஒருவருக்கு தோன்றலாம்.
சைக்கோ தயாரிக்கப்பட்டபோது, கடைசி நிமிடம் வரை மறுபடப்பிடிப்பு உட்பட எண்ணற்ற பிரச்னைகளை சந்தித்தது. தணிக்கையிலும் அதற்கு பயங்கரமான சிக்கல்கள் வந்தன. சில விமர்சகர்களால் முழுமையாக புறக்கணிக்கவும் பட்டது. ஆனால் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு எல்லா காலத்துக்குமான தொடர் கொலை (சீரியல் கில்லர்) திரைப்படமாக சைக்கோ மிகஉயரிய இடத்தைப் பிடித்துள்ளது.
இத்திரைப்படம் ஜேனட் லே மற்றும் சாம் லூமிசுக்குமான  நெருக்கக் காட்சியுடன் விறுவிறுப்பாகத் தொடங்குகிறது. பிறகு ஜேனட் தனியாக வீற்றிருக்கும் பேட்ஸ் சாலை விடுதிக்கு வருகிறாள். அங்கே ஒற்றையாக இருக்கும் விடுதியின் உரிமையாளர் நார்மன் பேட்சை சந்திக்கிறாள். நார்மனின் தாயை சில்ஹவுட்டில் சிறிதுநேரம் பார்க்கிறோம். அதன்பிறகு ரத்தம் தெறிக்கும் கொடூர ஷவர் காட்சி. காதலில் ஏற்படும் விரக்தியின் பின்னணியில் ஒரு எளிய சினிமாவாக சைக்கோ தொடங்கி மனநிலை பாதிக்கப்பட்ட கொலையாளியின் கதையாக திருப்பம் கொள்கிறது.படம் தொடங்கி 45 நிமிடங்களிலேயே முக்கிய கதாபாத்தித்தை ஹிட்ச்காக் கொன்று விடுகிறார். அக்கதாபாத்திரமாக நடித்திருந்த ஜேனெட் லீ அப்போது மிகவும் வெற்றிகரமான நடிகையாக இருந்தார். பார்வையாளர்களுக்கு மிகவும் பரிச்சயமான படத்தின் முடிவுவரை வரவேண்டும் என்று விரும்பக்கூடிய கதாபாத்திரத்தை கைவிட்டு கதையை நகர்த்துவது அதுவரை வெகுஜன சினிமாவில் நடைபெற்றிராதது ஆகும். அதேபோல ஹிட்ச்காக், தனது கதையை பின்னியிருந்த விதமும், அந்த மர்ம விடுதியின் உடைமையாளர் நார்மன் பேட்ஸ் மற்றும் அவரது அம்மாவுக்குமான விளக்க இயலாத உறவும் முன்உதாரணம் இல்லாதது. சினிமாவுக்கு என்று விதிகள் ஏதும் இல்லை என்பதைத்தான் இத்திரைப்படம் மீண்டும் நிரூபித்தது. திகில் திரைப்படங்களுக்கு அத்திரைப்படம் ஒரு செயல்திட்டத்தையே எழுதிவிட்டது. பிரச்னை ஒன்றில் சிக்கிக்கொண்ட அழகியபெண், விநோதமான சூழ்நிலையில் கொல்லப்படுகிறாள் என்ற ஆரம்பமற்று இதுவரை ஒரு திகில்படம் கூட எடுக்கப்படவில்லை. 
ஹிட்ச்காக்,வன்முறையை சைக்கோவில் கையாண்ட விதத்தில் ஒரு தனித்துவமான புரட்சியை செய்திருந்தார். இத்தனை முழுமையான ஆற்றலுடன் கொலை மூர்க்கமும், கத்திவீச்சும் செல்லுலாய்டில் இதுவரை காட்டப்பட்டதே இல்லை. அதுவும் அக்காலச் சூழலில் அப்படியான காட்சியை எடுப்பது மிகப்பெரிய அத்துமீறலும் கூட. ஹிட்ச்காக், தனது ஒவ்வொரு தந்திரத்தையும் பெர்னாட் ஹெர்மனின் திகிலான இசையுடன் சேர்த்து வாழ்க்கையின் கர்ணகொடூர கம்பீரத்தை தன் சினிமாமூலம் எழுதி பார்வையாளர்களை கொண்டாட வைத்தார்.  

படம் ஆரம்பித்தபிறகு படம்பார்க்க வருபவர்களை அனுமதிக்கக்கூடாது என்ற ஹிட்ச்காக்கின் நிபந்தனையால் உலகம் முழுவதும் வரிசைவரிசையாக கூட்டம் தியேட்டருக்கு வரத்தொடங்கியது.  அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் சைக்கோ திரைப்படம் அதற்கு முன்புள்ள வசூல் சாதனைகளை முறியடித்தது. நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றது. தற்போது இத்திரைப்படம் விமர்சகர்கள், சினிமா கோட்பாட்டாளர்கள், ரசிகர்கள் என அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு விட்டது.
இத்திரைப்படம் குறித்து பேசும்போது ஹிட்ச்காக் தனக்கேயுரிய பாணியில் பணிவுடன் தனக்கேயுரிய பாணியில் பேசுகிறார். 

இத்திரைப்படத்தை அறிவார்த்தமாய் அணுகி எழுதிக்குவிக்கப்பட்ட எண்ணற்ற புத்தகங்கள் அவருக்கு பொருட்டே இல்லை.

" சைக்கோ திரைப்படம் என்னளவில் ஒரு பொழுதுபோக்குத் திரைப்படமாகவே உருவாக்கப்பட்டது என்பதை நினைவு கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை அத்திரைப்படம் ஒரு கண்ணாம்பூச்சி விளையாட்டின் உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். பொருட்காட்சியில் உள்ள பேய்வீட்டுக்கு பார்வையாளர்களை அழைத்துச்செல்வதைப் போன்ற செயல்முறையில்தான் அப்படத்தை உருவாக்கினேன்"

அந்த புகழ்பெற்ற ஷவர் காட்சியில் அந்தோணி பெர்கின்ஸ் ,மரியானை கத்தியால் மாறிக் மாறி குத்துகிறார். அக்காட்சி பல்வேறு கோணங்களிலிருந்து எடுக்கப்பட்டு  ஒருங்கிணைக்கப்படுகிறது. அக்காலகட்டத்தில் அது மிகவும் வன்முறையான காட்சி. அக்காட்சியின் கொடூரம் ஒவ்வொரு பார்வையாளனையும் தாக்கி நார்மன் பேட்ஸ் கதாபாத்திரத்தின் சிதைந்த மனக்கோலத்தை வலுவுடன் உணர்த்தியது.
ஆனால் இக்காட்சிக்கு மாறாக, படத்தில் நடைபெறும் இரண்டாம் கொலைதான் எனக்கு சில்லிடும் அனுபவத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. அந்த காட்சித்தொடர் மொத்தமும் மிகவும் வேகமாக இருக்கும். கொலை நடக்கும் அந்த கணமும், அச்சமூட்டும் இசையும் சேர்ந்து அந்த ஷவர் காட்சியை விட கூடுதலாக பார்வையாளனை பயமூட்டக்கூடியது. மர்மமாக வீற்றிருக்கும் அந்த சாலையோர விடுதியும், மழை பின்னணியும், நடிகர் நார்மன் பேட்சும் சேர்ந்து அப்படத்தை இன்றும் இணையற்றதாக ஆக்குகின்றனர். 

ஹிட்ச்காக் தனது சிறந்த படைப்பான சைக்கோ திரைப்படம் மூலம் வன்முறையின் குழப்பநிலையை கட்டவிழ்த்து விடுகிறாரா? வன்முறை நாள்தோறும் அதிகரிக்கும் நாட்டின் சூழ்நிலையை பிரதிபலிக்கிறாரா என்று சினிமா நிபுணர்கள் விவாதிக்கின்றனர். விஸ்கான்சினை சேர்ந்த தொடர்கொலையாளி எட் கீனின் வாழ்க்கைப் பின்னணியை வைத்து, சைக்கோ என்ற பெயரில் ராபர்ட் ப்ளாச்சால் எழுதப்பட்ட நாவல் ஏற்கனவே வெளிவந்திருந்தது. அப்போதுதான் அந்த கொலையாளியும் போலீசாரால் பிடிக்கப்பட்டிருந்தான்.  

இதைத்தான் ஹிட்ச்காக் திரைப்படமாக எடுத்தார். 
திகில் படப் பாணிக்கு தாய், சைக்கோ திரைப்படம் தான். அதிலிருந்து எண்ணற்ற ஆயிரக்கணக்கான திரைக்குழந்தைகள் உலகம் முழுவதும் வெவ்வேறு மொழிகளில் பிறந்துகொண்டே இருக்கின்றன. இன்னமும் அந்த பயங்கரத்தாயான சைக்கோவைப் பற்றி நாம் பேசுவதை நிறுத்தவில்லை.
நாம் அனைவரும் இறந்துபோவோம்..ஆனால் சைக்கோ எப்போதும் உயிர்வாழும்.
Comments