பச்சிளம் குழந்தை
அம்மாவின் முகத்தைப்
பார்த்து சிரிக்கவில்லை
மேலிருந்து
பார்க்கும் அம்மா
தன் முகம் பார்த்து
தன் குழந்தை
சிரிப்பதாய்
நினைத்து
இறும்பூதெய்கிறாள்
முதல் அமுது தருபவள்
அவள்
கொஞ்சம் தவறாகவும் பெருமிதம்
கொள்ளலாம் தானே.
குழந்தை
பால் சுரக்கும்
அரைக் கோளத்தைப் பார்த்துச்
சிரிக்கிறது
அந்த அரைக்கோளம்
தான்
அம்மாவென்று
அதற்குப் பதிந்துவிடுகிறது
அதன் பின்னர்
அம்புலி
பந்து
சோற்றுக்கவளம் என
முக்கியமானவை எல்லாவற்றையும்
இந்த உலகிலிருந்து
அது ஒரு கோளமாகப்
பகுத்து பகுத்துக் காண்கிறது
அதனால் தான்
கோளத்தைத்
தொடும்போதெல்லாம்
அந்தக் குழந்தை
எல்லா வயதிலும்
தனது அம்மாவுக்குத்
திரும்பி விடுகிறது.
Comments