Skip to main content

அதிகமாக விற்கும் நாவலாசிரியனின் நேர்காணலைப் படித்தபோது - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

 


அவன் எழுதுவதைப் போன்று பேசுகிறான்

அவனது முகம் புறாவைப் போன்றது, வெளிவிவகாரங்களால்

தீண்டப்படாதது.

அவனது சௌகரியமான உறுதியான வெற்றியை

வாசிக்கும்போது 

பயங்கரத்தின் சின்ன நடுக்கம் என்னில் பாய்கிறது.

“அடுத்த வருடம் ஒரு முக்கியமான நாவலை எழுதப் போகிறேன்”

என்று உரைக்கிறான்.

சில பத்திகளை விட்டுத் தாவுகிறேன்

ஆனால் அந்த நேர்காணல் இரண்டரை பக்கங்களுக்கும் அதிகமாக

நீள்கிறது.

ஒரு மேஜை விரிப்பில் பால் சிந்தியதைப் போல

டால்கம் பவுடரின் மிருதுவை ஒப்ப

சாப்பிட்ட மீனின் எலும்புகளைப் போல

வெளிறிய கழுத்து டையில் ஈரமான கறையைப் போல

அதிகரிக்கும் முணுமுணுப்பு போல.


இந்த மனிதன் மிகவும் அதிர்ஷ்டசாலி

அவன் சூப் கிச்சனில் வரிசையில் நிற்கவேண்டியதில்லை.

இந்த மனிதனுக்குத் தோல்வி என்ற கருதுகோளே தெரியாது

அதற்காக அவனுக்கு அதிக ஊதியம் தரப்படுகிறது.

நான் படுக்கையில் கிடந்து நேர்காணலை வாசிக்கிறேன்.

தரையில் செய்தித்தாளை நழுவவிடுகிறேன்.

அப்போது ஒரு சத்தம் கேட்கிறது.

ஒரு சிறிய ஈ ரீங்கரிக்கிறது. 

அது பறப்பதை

அறையை ஒழுங்கற்றுச் சுற்றுவதை

கவனிக்கிறேன்.


இறுதியாக வாழ்க்கை. 

(சூப் கிச்சன் - இலவச உணவு விடுதி)

Comments