Skip to main content

கும்பலின் மேதைமை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி



துரோகம், வெறுப்பு, வன்முறை
போதுமெனும் அளவுக்கு உள்ளது
குறிக்கப்பட்ட நாளன்று
ஒரு ராணுவத்துக்கு 
வழங்கும் அளவுக்கு  
சராசரி மனிதனில் அபத்தம் உள்ளது

அத்துடன்
கொலைக்கு எதிராகப் போதிப்பவர்கள் எவரோ
அவர்களே அதில் தேர்ந்தவர்களாக உளர்
அத்துடன்
நேசத்தைப் போதிப்பவர்கள் யாரோ
அவர்களே வெறுப்பதில் சிறந்தவர்களாய் உளர்
அத்துடன் 
போரிடுவதில் சிறந்தவர்கள் யாரோ அவர்களே 
இறுதியில் சமாதானத்தைப் பிரசங்கிக்கிறார்கள்

கடவுளைப் போதிப்பவர்களுக்கு
கடவுள் தேவை
அமைதியைப் போதிப்பவர்களிடம்
அமைதி இல்லை
நேசத்தைப் போதிப்பவர்களிடம்
நேசம் இல்லை
போதிப்பவர்களிடம் ஜாக்கிரதை
அறிந்தவர்களிடம் ஜாக்கிரதை

புத்தகங்களை வாசித்தபடி
இருப்பவர்களிடம் ஜாக்கிரதையாய் இருங்கள்.

வறுமையைப் பழிப்பவர்கள் எவரோ
வறுமையில் பெருமிதம் கொள்பவர்கள் எவரோ
அவர்களிடம் ஜாக்கிரதையாய் இருங்கள்

உடனடியாகப் புகழ்பவர்களிடம் ஜாக்கிரதை தேவை
அவர்களுக்கு திரும்பப் புகழ்வது அவசியமாக உள்ளது

உடனடியாக எதிர்ப்பு தெரிப்பவரிடம் கவனம் தேவை
தமக்கு தெரியாதது குறித்து அவர்கள் அச்சப்படுகிறார்கள்

தொடர்ந்து கூட்டத்தைத் தேடிக்கொண்டிருப்பவரிடம்
எச்சரிக்கையாய் இருங்கள்
தனிமை உணர்வைத் தவிர அவர்களிடம் வேறொன்றும் இல்லை

சராசரி ஆண்
சராசரி பெண்
அவர்களது காதல்
ஜாக்கிரதையாய் இருங்கள்

அவர்களது காதல் சராசரியானது 
சராசரியைத் தேடிக்கொண்டிருப்பது
ஆனால், அவர்களின் வெறுப்பில் மேதைமை உண்டு
உங்களைக் கொல்வதற்கும்
எவரைக் கொல்வதற்கும் போதிய மேதைமை அது

தனிமைவாசத்தை விரும்பாமல்
தனிமை வாசத்தைப் புரிந்துகொள்ளாமல்
அவர்கள் எதையும் அழிப்பதற்கு முயற்சிப்பார்கள்
அவர்களுடையதிலிருந்து அது வேறானது

கலையைப் படைக்க இயலாத நிலையில்
அவர்களால் கலையைப் புரிந்துகொள்ள முடியாது

தங்களது தோல்வியை 
படைத்தவர்களின் 
தோல்வியாகவே கருதுவார்கள்
உலகின் தோல்வி என்பதைப் போல

முழுமையாக நேசிக்க முடியாத நிலையில்
உங்கள் நேசத்தை அபூர்ணமானது என்று நம்புவதோடு
உங்களை வெறுக்கவும் செய்வார்கள்

அத்துடன்
அவர்களது வெறுப்பு முழுமையானதாக இருக்கும்
சுடரும் வைரத்தை ஒப்ப
கத்தியைப் போல
மலையை
புலியை
ஹெம்லாக் நஞ்சைப் போல

அவர்களது மிகச்சிறந்த
கலை.

Comments