அப்சல் குருவின் ஆத்மார்த்தமான இரண்டு நேர்காணல்களை மொழிபெயர்த்திருக்கிறேன். அந்த நேர்காணல்களின் பிரதிகள் தற்சமயம் என்னிடம் இல்லை. ஒரு பணி என்பதையும் தாண்டி ஆழ்ந்த அந்த நேர்காணல்கள் என்னைப் பாதித்தவை. அப்சல் குருவின் வார்த்தைகள் வழியாக அவர் இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில்,
தவறாக பலிகடா ஆக்கப்பட்டவர் என்று உறுதியாக நம்புகிறேன். இந்திய நாடாளுமன்றத்
தாக்குதல் சதியில் அப்சல் குரு நேரடியாக ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் எதுவும்
இல்லாமல் மக்களின் கூட்டு மனசாட்சியைத் திருப்திப்படுத்துவதற்காகவே அவருக்கு
மரணதண்டனை வழங்கியதாக உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. இந்திய நாடாளுமன்றத் தாக்குதல்
சம்பவமும் அதைத் தொடர்ந்து நடந்த புலனாய்வும், விசாரணைகளும் சந்தேகத்துக்குரியவை. கசாப்பை ரகசியமாகத் தூக்கிலிட்ட போதே, அப்சல்
குருவையும் சீக்கிரத்தில் தூக்கிலிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அப்சல் குருவின் தூக்கு இன்று
நிறைவேற்றப்பட்டுள்ளது. முன் அறிவிக்கப்படாத மரண தண்டனைகள் தொடர்வது மிகவும்
அபாயகரமானது. உரையாடல்களின் குரல்வளையை நெறிக்கும் காலத்தில் வாழ்கிறோம். அப்சல்
குருவின் மரண தண்டனை இந்திய சமூகத்தில் நிலவும் அநீதியின் சகுனம். காஷ்மீரில் காலம் காலமாக நடந்துவரும்
அரசவன்முறையின் இருண்ட, நியாயங்களே கேட்கப்பட வாய்ப்பில்லாமல் போன கதைகளில் ஒன்று
அப்சல் குருவினுடையது. அப்சல் குரு சொல்லியிருக்கும் கீழ்க்கண்ட சிறிய பதிலைப்
படிப்பவர்களுக்கு அவர் குற்றவாளி இல்லை என்பது புரியவரலாம்.
நீங்கள் தூக்கிலிடப்பட்டால் எப்படியாக
நினைவுகொள்ளப்பட விரும்புகிறீர்கள்?
நீதிக்காக
உயிர்துறந்த தியாகியாக நினைவுகூரப்பட விரும்புகிறேன். தனிமையும், தீவிர
விசாரணையும் என்னிடம் ஆழ்ந்த தரிசன உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிரகத்தில்
மனிதனின் வாழ்க்கை என்பது ஆன்மீக ரீதியாக கருப்பருவத்தில் உள்ளது. அவன் இந்த
கிரகத்தை விட்டு நீங்கும்போதுதான் பிறக்கிறான். நமது ஆன்மாதான் நமது உண்மையான
உடல். நமது உடல் என்பது ஆடைகள் போன்றதே. உலகளாவிய நிலைத்த மதிப்பீடுகளுக்காகத்
தொடர்ந்து போராடுவதன் வாயிலாகவே ஆன்மீக உணர்வை வளர்க்க முடியும். ஒரு மனித சுயம்
என்பது எவ்வளவு காலம் நிலைத்திருக்குமோ அந்த அளவுக்கு மதிப்பீடுகள் என்பதும்
நிலைத்தவை, முழுமையானவை. உன்னத மறைஞானி ரூமி சொன்னதுபோல நமது செயல்கள்
அனைத்துக்கும் தனிப்பட்ட வகையிலும், ஆன்மீக ரீதியாகவும் நம்மனைவரும்
பொறுப்பானவர்கள். "நமது செயல்களின்
விளைவுகள் குறித்து அலட்சியமாக இருக்கவேண்டாம். கோதுமை, கோதுமையையே விளைவிக்கும்.
பார்லி, பார்லியையே விளைவிக்கும்."
(2013, பிப்ரவரி)
Comments