Skip to main content

எனது புதிய புத்தகம் - ‘இகவடை பரவடை’ குறுங்காவியத்துக்கு நான் எழுதிய முன்னுரை

 என் அம்மா இங்கே மண்ணில் காற்றில் நீரில் பேதமற்று கலந்து கிடப்பதால் எதையும் வேண்டும் வேண்டாமென்று நான் ஒதுக்கமுடியாது என்ற போதம் வந்திருக்கும் இந்தக்கட்டம் அத்தியாவசியமானது. எனது அகக்கடைக்கும் புறக்கடைக்கும் இடையே இப்போது சுவர் இல்லை; அழுக்கும் பிசுக்கும் மட்டுமே திடமேற்றிய ஒரு கிழிந்த துணித்திரை, மழையிலும் காற்றிலும் அடித்து, வெளியே ஒரு கொடுங்காலத்தின் வருகையை எனக்கு உரைப்பதைப் போன்றுள்ளது.

நானும் இதுவரை சேகரிக்கப்பட்ட அறிவுகளும் நீதியற்று நாதியற்று நாற்சந்தி சாலையில் நிற்கும் ஒரு சித்திரம்தான் வந்து சேர்ந்திருக்கும் இடம்.

பிறந்த இடமாகவும் பால்ய பிராயகால நினைவுக்கிடங்காகவும் திருநெல்வேலி; ஆளுமையும் உலகப் பார்வையும் ருசிகளும் விரிவுகொண்ட சென்னை; இரண்டையும் நிழல் சித்திரங்களாக ஆக்கியிருக்கிறேன். உயிர், உணவு, மொழி, ரசனையை அளித்து மறைந்துவிட்ட அம்மா; என் வாழ்க்கையின் நடுப்பகுதியில் தற்செயலாய் வந்து நினைவில் மின்னும் ஒரு பருவத்தைப் பரிசாகத் தந்து, என்னை மறுபடி சிருஷ்டித்து, உருக்குலைத்து, நீங்காத பைத்தியத்தை, அழலை, அடங்காத தீயை, அது அளிக்கும் உயிர்ப்பைத் தந்துவிட்டு நீங்கிப்போன அவள்; இரண்டு பேரும்தான், இதுவரைக்குமான எனது அனுபவக்கல்வியின் – இந்தப் படைப்பின் - மூல ஆசிரியர்கள். சத்தமாக, மௌனமாக இந்தப் படைப்புக்குள் தமது ரேகைகளைப் பதித்திருப்பவர்கள் நகுலன், விக்ரமாதித்யன். எனது தனி அனுபவச் சேகரத்தை, ஒரு நெடிய மானுட வரலாற்றுப் பரப்பில் வைத்துப் பார்க்கும் ஒரு மூலகம், திராவிடவியல் ஆய்வாளரான ஆர் பாலகிருஷ்ணனின் ‘ஒரு பண்பாட்டின் பயணம் : சிந்து முதல் வைகை வரை’ நூலில் பணியாற்றியபோது கிடைத்தது.

எனது டெஸர்ட் ரோஸ் செடி, பல மாதங்களாகப் பூக்காமலிருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு ஒரு கருஞ்சிட்டு வந்து உலுக்கிவிட்டு விருட்டென்று மேலேறிப் பறந்துபோனது. அடுத்தநாள் மொட்டுவிட்டது. அந்தப் பூப்பை நல்நிமித்தமாக்கிக் கொண்டு ‘இகவடை பரவடை’யைத் தொடங்கினேன்.

சென்ற நவம்பர் மாதம் எழுதத் தொடங்கி ஏழு மாதங்களில் அவ்வப்போது இடைவெளிகள் விட்டு இதை எழுதினேன். நண்பர்கள் கௌதம், வே நி சூர்யா, வரதன், ந. ஜயபாஸ்கரன், இன்பா, சசிகலா ஆகியோரிடம் அவ்வப்போது எழுதுவதைத் தொடர்ந்தோ விட்டுவிட்டோ பகிர்ந்துவந்தேன் – எனது தங்கை தெய்வானையிடமும். சற்றே முழுமையடைந்தவுடன் வாசித்து ஊக்கம் அளித்தார் விக்ரமாதித்யன். பழைய பாடல் இசையமைப்பாளர்களும்,  இளையராஜாவும், ஏ ஆர் ரஹ்மானும், கண்ணதாசனும், வாலியும், வைரமுத்துவும், முத்துக்குமாரும் இதற்குள் மறைந்திருக்கின்றனர். அம்மா நீங்கியபிறகு, முன்னர் சார்பு கொள்ளாமல் இருந்த, மொழியின் ஓசை லயத்துக்குள் நான் அடைக்கலம் கொள்கிறேன் போல.  

வே நி சூர்யா தான் இந்தக் குறுங்காவியத்தை ஒரு வரிசையில் கொண்டுவந்திருக்கிறார். என்னால் தூரத்திலிருந்து அதைச் செய்திருக்க முடிந்திருக்காது. ‘ஆயிரம் சந்தோஷ இலைகள்’ தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் வெளியான பின்னர், அதன் தாக்கம் என்னவென்று வெளியிலிருந்து இரண்டு கட்டுரைகளை எழுதி என்னிடம் திடத்தை ஏற்படுத்தி நண்பர்களாகவும் ஆனவர்கள் விஷால் ராஜா மற்றும் ஏ வி மணிகண்டன். விஷால் ராஜா, அகழ் இதழுக்காக என்னிடம் மேற்கொண்ட நேர்காணலில்தான் நெடுங்கவிதை உருவம் சார்ந்து எனது ஆசையையும் முதல்முறையாக வெளிப்படுத்தினேன். விஷாலுக்கும் ஏ வி மணிகண்டனுக்கும் இந்த குறுங்காவியத்தை சமர்ப்பணம் செய்கிறேன்.

எனது ஓரத்தில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் சிறுவனும் விரும்பும் வண்ணம் எனது குறுங்காவிய நூல், சித்திரங்களுடன் இடம்பெற வேண்டுமென்பது எனது ஆசை. வரதன், நிவேதிதா, சுஜா, ஆனந்தின் படங்கள் அதை நிறைவேற்றியிருக்கின்றன. வேரல் புக்ஸ் லார்க் பாஸ்கரனுக்கும், அம்பிகாவுக்கும் எனது நன்றி.
 இகவடை பரவடை

குறுங்காவியம்

விலை : ரூ. 140

வேரல் புக்ஸ் வெளியீடு

டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும்.

 தொலைபேசி எண் : 087545 07070, 9578764322 

Comments