Skip to main content

முதல் ரோஜா


கண்களில்

ரத்தமேறி

குணத்துக்கு

எட்டாத தொலைவில்

எரியும் ரணம்

உறங்காமல்

விழித்திருப்பது ஏன்?

000

நான்குமுனைச் சாலையின்

நெரிசலில்

பிதுங்கும் வாகனங்களின்

சக்கரங்கள் ஏறாமல்

ஓரப்பாதசாரிகளால்

நெரிக்கப்படாமல்

இரும்பு வடிகால் துளையின் மேல்

துளிக்காயமின்றி

கிழிசலோ வாடலோ இன்றி

தூசுகூடப் படாமல்

துடித்துக் கிடக்கிறது

ரத்தச் சிவப்பில்

முன்போ பின்போ

இல்லாத

முதல் ரோஜா.

000

இங்கே

சமீபமாக

கொலையோ

சித்திரவதையோ

புணர்ச்சியோ

எதுவும் நடக்கவில்லை

நேற்று மாற்றிய

வெள்ளை படுக்கையில்

குங்குமச் சிவப்பு

மிளகாய் பழத்தின் பளபளப்புடன்

விபரீதப் பூவாய்

பூத்திருக்கிறது

ஒரு துளி.

(நன்றி: அகழ் இணைய இதழ்)

Comments