எதிர்
பிளாட்பாரத்தில்
இறந்து
இருண்டு கிடக்கும்
எலியின்
வாலருகே
மினுங்கிக்கொண்டிருக்கிறது
அன்பைவிடச்
சிறந்த உணர்ச்சி ஒன்று
க்ளிங் ளிங் என்ற ஓசையோடு
சாலையில் கால் வைக்க முடியவில்லை
முன்னும் பின்னும்
முரட்டு வாகனங்கள்
இடைவேளை இன்றி
ஒரு நாள்
ஒரு நூற்றாண்டு
பல நூற்றாண்டுகள்
திடீர் இடைவெளியில்
குறுக்காக ஓடி,
ஏறினேன்.
எதிர் பிளாட்பாரத்தில்
தவறிக் கிடக்கும்
நீர்த் தாவரத்தின்
கசிவில்
மினுங்கிக் கொண்டிருக்கிறது,
அன்பை விட
சிறந்த உணர்ச்சி ஒன்று
க்ளிங் ளிங்
என்ற ஓசையோடு.
- தேவதச்சன்
தேவதச்சன் எழுதிய இந்தக் கவிதையில் திரும்பத் திரும்ப ‘அன்பை விடச் சிறந்த உணர்ச்சி’ என்றொரு உணர்ச்சி குறிப்பிடப்படுகிறது. கவிதைக்குள் அது என்னவென்பதை தேவதச்சன் சொல்லவில்லை.அவருடனான ஒரு தொலைபேசி உரையாடலில் அன்பைவிச் சிறந்த உணர்ச்சின்னா அது மரியாதை தான் ஷங்கர் என்று போகிற போக்கில் சொன்னார்.
அரவிந்தனுடனான 30 வருடத்துக்கும் மேலான தொடர்பைப் பற்றிப் பேசுவதற்காக எங்கள் உறவைத் தொகுத்துப் பார்க்கும்போது, மரியாதை தான் அன்பைவிடச் சிறந்த உணர்ச்சி என்று கவிஞர் தேவதச்சன் உரைத்தது ஞாபகத்துக்கு வருகிறது.
அன்புக்கும் மரியாதைக்கும் வித்தியாசம் என்ன? அன்புக்கும் மரியாதைக்கும் இடையில் உள்ள பாலம் எது?
நாகரிகம் என்று எனக்குப் பதில் கிடைக்கிறது.
அன்புக்கும் நாகரிகத்துக்கும் இடையே உள்ள பாலம் அருளால் கட்டப்படுகிறது என்று கருதுகிறேன்.
அன்பெனும் எலும்பில் இன்னும் விலங்குத் தன்மையின் ரத்தமும் நிணமும் உலராமல் இருப்பதாலேயே அன்பு எப்போதும் கொலைக்கருவியாகும் வாய்ப்புகளை நாம் பார்த்துவருகிறோம்.
மரியாதை என்பது அதனால் எலும்பாக அன்புக்கும் தூரத்தில் உலர்ந்த மணல்பரப்பில் கிடக்கிறதென்று நினைக்கிறேன்.
மரியாதை துளியும் இல்லாத இடத்தில் அபரிமிதமான அன்பு நஞ்சுதான். அறிவாலும் அருளாலும் சலிக்கப்படாத அன்பு பேராயுதமாக மாறக்கூடிய வாய்ப்புடையது.
அன்பு உலர்ந்தபின்னர் மனிதர்கள் சேர்ந்து ஓரளவு சமாதானத்துடன் உய்வதற்கு உயவுப்பொருளாக மரியாதையே இருக்க இயலும்.
சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு வடமாநிலம் ஏதோவொன்றில் ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்ட அன்னதானத்தில், உணவுக்காக வந்த முஸ்லிம் கிழவியிடம் ஜெய் ஸ்ரீ ராம் சொன்னால்தான் உணவளிக்க முடியுமென்று உணவுகொடுக்காமல் துரத்தும் வீடியோ ஒன்று மிகுந்த மனத்தொந்தரவை அளித்தது
பசியைத் தவிர வேறு பிணியே இல்லை என்றும் உணவைத் தவிர வேறு கடவுளே இல்லையென்ற போதத்தையும் விதைத்த, சீவ காருண்யத்தையே ஒழுக்கமாகப் பார்த்த வள்ளலார் போன்ற ஞானிகள் பிறந்த மண்ணிலிருந்து இதுபோன்ற வெறுப்புக் குரல்கள் தேசமெங்கும் கேட்கத் தொடங்கியிருக்கும் வேளையில் அன்பென்ன? அருள் என்ன? அறிவுதான் என்ன? மரியாதை என்ன? என்பதையெல்லாம் நாம் மீண்டும் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
ஒரு இனத்தின் மேல் கொண்ட வெறுப்பால் லட்சக்கணக்கான அப்பாவி மக்களை சித்திரவதை முகாம்களில் பறிகொடுத்த யூத இனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தேசம் ஒன்று, ஆயிரக்கணக்கில் பாலஸ்தீனக் குழந்தைகள் மீது கொலை பாதகத்தை ஏவிவிட்டு, ஒண்டி இருப்பதற்குக்கூட ஒரு மூலையை அனுமதிக்காமல் துரத்திக் கொன்று கொண்டிருக்கும் காட்சிகளை தினசரிப் பார்த்துக் கொண்டிருக்கும் நமது இந்தக் கையாலாத காலத்தில்
அன்பென்ன? அருள் என்ன? நாம் இதுவரை வந்தடைந்திருக்கும் அறிவென்ன? தத்துவம்தான் என்ன? கற்றுக் கொண்ட மரியாதைதான் என்ன? என்பதை குற்றவுணர்வோடு பரிசீலிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.
000
சுந்தர ராமசாமி நாகர்கோவில் பாம்பன் விளையில் வருடம்தோறும் நடத்திவந்த நண்பர்கள் சந்திப்பில், எனது 19 வயதில் கல்லூரிப் பட்டப்படிப்பின் முதலாண்டில் அரவிந்தன், அறிமுகமானார். அப்போது இந்தியா டுடே ஆசிரியர் குழுவில் இருந்தார். யோகா உடற்பயிற்சியைச் சொல்லிக் கொடுக்கும் அளவு தேர்ந்தவர் என்பதால் அரவிந்தனின் உடல்வாகும் முகமும் கூட பெரிதாக மாறவில்லை என்பதே எனது எண்ணம்.
கொஞ்சம் ஒடுங்கியிருந்த முகம் சமீப பத்தாண்டுகளில் பூசியுள்ளது மட்டும் மாற்றம் என்று நினைக்கிறேன்.
குற்றாலத்தில் நடைபெற்ற கவிதைப் பட்டறை தொடர்பில் அவர் எழுதியிருந்த கட்டுரை ஒன்று இன்னமும் ஞாபகத்தில் உள்ளது. பெர்முடாஸ் அணிந்து இன்று வயோதிகர்களாகியிருக்கும் அன்றைய இளம் எழுத்தாளர்கள் பட்டறையில் பங்கேற்றது அதிர்ச்சிகரமாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கலக உடை என்று பெர்முடாஸுக்கு நாமகரணம் சூட்டப்பட்டிருந்தது அந்தக் கட்டுரையில். சுபமங்களாவில் வந்த ஒரு சிறுகதையையும் அக்காலகட்டத்தில் படித்திருக்கிறேன். அரவிந்தனுக்கு அப்போது திருமணம் ஆகவில்லை. பெண் பார்த்துக் கொண்டிருந்தனர். சுந்தர ராமசாமியும் கமலா அம்மாவும் அக்கறையுடன் அரவிந்தனது மணப்பெண் தேடல் குறித்துப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.
சுந்தர ராமசாமி ஆசிரியராகக் கொண்டுவந்த காலச்சுவடை நிறுத்தி 2,3 ஆண்டுகளுக்குப் பிறகு கண்ணனும் லக்ஷ்மி மணிவண்ணனும் மனுஷ்ய புத்திரனும் சேர்ந்து திரும்ப காலச்சுவடைக் கொண்டுவந்த போது அதன் தன்னார்வத் தொண்டர்களாக இருந்தவர்களில் நானும் ஒருவன். காலச்சுவடு பதிப்பகமாக, வர்த்தக நிறுவனமாக கிளைவிட்ட போது, எனது இயல்பின் அடிப்படையில் நான் அங்கிருந்து படிப்படியாக விலகி வெகுதூரம் வந்துவிட்டேன். சுந்தர ராமசாமி என்ற முதல் ஆசிரியரின் மீதான அபரிமிதமான மரியாதை, அவர் எங்கள் ஆளுமைக்கு அளித்த ஊட்டம், கமலா அம்மாவும் அவர்கள் வீடும் அந்தக் காலகட்டத்தில் கொடுத்த அடைக்கலம் மட்டுமே இப்போது எனக்கு சுந்தர விலாஸுடனான ஞாபகத் தொடர்பு.
அரவிந்தன் அப்போது தொடங்கி இப்போதுவரை காலச்சுவடின் ஓர் அங்கமாக இருக்கிறார். காலச்சுவடு கண்ணனுக்கும் நண்பர்களாகிய எங்களுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள், புகார்கள், பரஸ்பரமாகப் பகிர்ந்துகொண்ட வன்மங்கள் எல்லாவற்றையும் அரவிந்தன் அறிந்தாலும், அவற்றில் அவரது தரப்பை எங்களிடம் பகிர்ந்துகொண்டாலும் ஒருபோதும் என்னை விலக்க முயன்றதில்லை.எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார். அவர் எளிதில் பெரிய நிலைப்பாடுகளுக்குப் போகக்கூடியவர் அல்ல.
000
எனது பட்டப்படிப்பு முதலாண்டின் இறுதியிலேயே முறிந்து டிஎம்இ படிப்பதற்காக திருக்கழுகுன்றத்துக்கு வந்து படித்து முடித்து திருநெல்வேலியில் ஓராண்டு இருந்துவிட்டு வேலைக்காக தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள அன்னம்மாள் மேன்ஷனுக்குக் குடியிருக்க வந்தபோதுதான் அரவிந்தன் எனக்கு நெருக்கமானார். வேலை தேடும் முகாந்திரத்தில் தெரிந்தவர்களைப் போய்ப் பார்த்து சென்னைக்கு வந்துவிட்டேன் என்பதைச் சொன்ன இடங்களில் ஒன்று அரவிந்தன் வேலை பார்த்த டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இந்தியா டுடே அலுவலகம்.
கவிதா முரளிதரன், முரளியோடு சேர்ந்து அரவிந்தன் எனக்கு தேநீர் வாங்கித் தந்து மேற்கு மாம்பலத்தில் உள்ள வீட்டுக்கும் வரலாம் என்று சொன்னார்.
மேற்கு மாம்பலத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டைத் தாண்டி அயோத்தியா மண்டபம் போகும் வழியில் வலது பக்கம் திரும்பும் வீதியில் அரவிந்தன் திருமணமாகி ஸ்ரீதேவியுடன் இருந்த வீட்டில் தளவாய், அஜயன் பாலா போன்ற நண்பர்கள் மாலைகளில் கூடுவது வாடிக்கையாக இருந்தது. சினிமா இயக்குனரும் நண்பருமான தி ஜா பாண்டியராஜன் எழுதிய சில சிறுகதைகளும் இந்தியா டுடேவில் பிரசுரமானது. ஸ்ரீதேவியின் சமையலில் சில வேளைகள் சாப்பிட்டிருக்கிறேன். தேர்ந்த கை அவருடையது.
அரவிந்தனின் வீட்டில் தளவாய், அஜயன் பாலா சிறுகதைகளை புத்தம்புதிதாக எழுதி கொண்டுபோய் கொடுத்து சில கதைகள் சுடச்சுட இந்தியா டுடேயில் பிரசுரமாவது நடந்திருக்கிறது. அப்போது இந்தியா டுடேயில் சிறுகதை வருவது மிகவும் பெருமிதமாக கருதப்பட்டது. ஆதிமூலம், ஆர் பி பாஸ்கரன் தொடங்கி மாரிமுத்து வரையிலான நவீன ஓவியர்களின் ஓவியத்தை பிரத்யேகமாக வாங்கி அந்தச் சிறுகதைகளைப் பிரசுரிப்பது வழக்கமாக இருந்தது. இந்தியா டுடேயில் வந்த சிறுகதைகளுக்கு ஒரு தனிமதிப்பை உருவாக்கியதிலும் இந்தியா டுடேயின் இலக்கிய மலர்களின் உள்ளடக்கத்திலும் அதன் ஆசிரியராக இருந்த வாஸந்தியோடு அரவிந்தனுக்கும் முக்கியப்பங்கு இருந்தது. லா.ச.ரா, வண்ணநிலவன், சுந்தர ராமசாமி, சூடாமணி, அம்பை, கி.ரா,அசோகமித்திரன் தொடங்கி ஜெயமோகன் வரை நிறைய சிறந்த சிறுகதைகள் எனது மாணவப் பருவத்தில் அறிமுகமானது இந்தியா டுடே வழியாகத் தான்.
ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புத் தொகையும் அப்போதைய பொருளாதாரத்தில் மிகவும் அதிகமான தொகை. நான் அந்த ஆயிரத்து 500 ரூபாய்க்காகவே சில சிறுகதைகளை எழுத மிகவும் பிரயத்தனப்பட்டு முயன்றிருக்கிறேன். இந்தியா டுடேயில் சிறுகதை வருவதைக் கனவாகவும் கண்டிருக்கிறேன். எனது கதை எதுவும் பிரசுரமாகும் தகுதியை அடையவில்லை. இந்தியா டுடே இலக்கிய மலர் ஒன்றில் அரவிந்தன் என்னிடம் வாங்கிப் பிரசுரமான எனது ஆரம்பகாலத்து நல்ல கவிதைகளில் ஒன்றான ‘அம்மா நீங்கிய அறையில்’ கவிதைதான் பரவலாக என்மீது கவனத்தை ஏற்படுத்தியது.
000
என் அம்மாவிடம் சென்னைக்குப் போய் வேலை தேடிவிடலாமென்று சொல்லி வந்துவிட்டேனே தவிர ஒரு வேலை கிடைப்பது அத்தனை எளிதாக இல்லை. அரவிந்தன் மூலமாகத்தான் ஒரு டேட்டா எண்ட்ரி அலுவலகத்தில் பணி கிடைத்தது.
அப்போதுதான் அரவிந்தனுக்கு முதல் பெண் குழந்தை பிறந்தது.
000
டேட்டா எண்ட்ரி வேலை பறிபோனபின்னர் 1999 வாக்கில் சுட்டி விகடனில் சேர்ந்தபின்னர்…படிப்படியாக அரவிந்தனுடன் எனக்கு தொடர்பு குறைந்துவிட்டது…மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பிறகு 2010இல் நமது சென்னை பத்திரிகையை அவர் நடத்திக் கொண்டிருந்தபோது நானும் நிலையான வருவாய் இன்றி 50 நாட்களுக்கு மேல் ஒரு முறை சம்பளம் தரும் விசித்திர நிறுவனமான தி சன்டே இந்தியனில் பணியாற்றிக் கொண்டிருந்த போது மொழிபெயர்ப்புப் பணிகளுக்காக அரவிந்தனுடன் மீண்டும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. சுபகுணராஜன் நடத்திய காட்சிப்பிழை பத்திரிகையின் பணிக்காகவும் அரவிந்தனின் அலுவலகத்துக்குப் போய்க்கொண்டிருந்தோம்.
இந்தப் பருவத்தில் ஏற்பட்ட பணிரீதியான உறவுகள், உரையாடல்கள் மீண்டும் ஒரு நெருக்கத்தை எட்டிய இரண்டாண்டுகளில்தான் இந்து தமிழ் திசை பத்திரிகை தொடங்குவதைப் பற்றி என்னிடம்அரவிந்தன் சொன்னார். என் சுய விவரத்தை எனது அடுத்த தெருக்காரராக இருந்த அசோகமித்திரன் கேட்டு வாங்கி அவர் மகனிடம் கொடுத்திருந்த நிலையில் அரவிந்தன் முக்கியமான பொறுப்பேற்பதாகச் சொல்லி எனக்கு நம்பிக்கையை அளித்து, அழைத்தும் சென்றுவிட்டார்.
அரவிந்தன் ரெஃபரென்ஸ் செய்தபின்னர் ஆங்கில இந்துவைச் சேர்ந்தவர்கள் தீவிரமான நேர்காணல் செய்தபின்னரே என்னைத் தேர்ந்தார்கள் என்றாலும் அரவிந்தன் செய்த உதவியே எனது பொருட்படுத்தத்தக்க 10 ஆண்டு பத்திரிகைப் பணிக்கு ஆதாரமாக இருந்தது. கவிஞனாக என் அடையாளமே தெரியாமல் எனது கட்டுரைகளால் அடையாளம் காணும் பல வாசகர்களை நான் இந்து தமிழ் திசை வாயிலாகவே பெற்றேன.
இந்து தமிழ் திசையில் அரவிந்தன் பொறுப்பு வகித்த இணைப்பிதழ் பிரிவிலேயே தான் எனக்கு பணி. ஆனாலும், அரவிந்தனுடன் கூடுதல் உரிமையையும் அதனால் கூடுதல் விமர்சனத்தையும் சொல்லக்கூடியவனாகவே பக்குவமற்றே நடந்திருக்கிறேன். அவரது எல்லைக்குட்படாத விஷயங்களையும் அவரைப் பொறுப்பாக்கி நான் கடிந்திருக்கிறேன். ஒருநாள் கூட நீ செய்வது எனக்குப் பிடிக்கவில்லை என்றோ தனிப்பட்ட வகையில் பழிவாங்கும் நடவடிக்கையிலோ இறங்கியதேயில்லை.
அவர் எடிட்டோரியல் ரீதியாக ஒரு முடிவை எடுத்தபோது அந்த முடிவு என் நலன் தொடரபில்லாததாக இருந்தாலும் அந்த முடிவு சரியல்ல என்று ஒரு சந்தர்ப்பத்தில் கூறினேன. அவர் என்னுடைய தரப்பைக் கேட்டாலும் அந்த முடிவில் உறுதியாக இருந்தார். பத்து நாட்கள் அதுதொடர்பில் எங்களுக்குள் உரையாடல் நடந்துகொண்டேயிருந்தது. ஆனால் அவர் வழிக்கு வரவில்லை. நான் அதில் முரட்டுப் பிடிவாதத்துடன் தொடர்ந்தேன். ஒருநாள் முதல் மாடியிலிருந்து படியில் அதைப்பற்றி பேசிக்கொண்டே இறங்கும்போது திட்டமேயில்லாமல ஒரு காரியத்தைச் செய்தேன். அங்கே காமிரா இல்லை என்பதை மட்டும் பார்த்து அவர் கால்களில் விழுந்தேன். தயவுசெய்து இந்த முடிவை நடைமுறைப்படுத்தாதீர்கள், சரியாக வராது என்று. அரவிந்தன் என்னப்பா என்னப்பா என்று கூறி போய்விட்டார். ஆனால் எனது கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டுவிட்டார்.
அந்த நிகழ்ச்சியை நான் மறக்கவே மாட்டேன். எனது நடத்தையிலேயே இல்லாத ஒரு திருப்பம் அரவிந்தனிடம் நான் செய்த செயல். நான் ஒருவரைக் காயப்படுத்துவேன். இல்லையெனில் கசந்து விலகுவேன். ஆனால் எனது நலன் அல்லாத ஒன்றுக்காக திடுக்கென்றுதான் அந்தக் காரியத்தைச் செய்தேன்.
அது விஷயமும் அல்ல.
அவரது முடிவையே தொடர சகல உரிமையும் அதிகாரமும் இருந்தும் தனது அதிகாரத்தை எனக்காக அவர் செயல்படுத்தவில்லை. அரவிந்தனின் மேன்மை அதுதான்.
தனது நலனுக்காக மற்றவர்களின் வாழ்க்கையையே பணயம் வைக்கும் மனிதர்களை, அவர்களது கருத்துகளை துச்சமாகக் காலில் போட்டு மிதிக்கும் மேலதிகாரிகளைத் தான் நாம் அதிகம் பார்க்கிறோம்.
இந்து தமிழ் திசை நாளிதழ் இணைப்புகளில் சில இணைப்புகளுக்கு பெயர் வைத்தது அரவிந்தன்தான். ஆனந்த ஜோதி அவர் வைத்த பெயர்தான். இந்தியா டுடே இலக்கிய மலர் அனுபவத்தில் சீரியசான வகையில் தீபாவளி மலர்களை கனமான உள்ளடக்கத்துடன் கொண்டுவந்ததில் அரவிந்தனின் பங்கேற்பு முக்கியமானது. புதுமைப்பித்தனின் கபாடபுரத்தை கிராபிக் கதையாக ஆக்கலாம் என்று போகிற போக்கில் நான் கூறியதை தொடர்ந்து சட்டகங்களுக்கு வசனங்களை எழுதச் சொல்லி ஓவியர் மருதுவிடம் பணித்து அதைக் காரியமாக்கினோம். ஒரு பெரிய கட்டமைப்பிலேயே அதுபோன்ற வேலைகளை நம்மால் சாத்தியமாக்க இயலும்.
குடி, சிகரெட் என்று எந்தப் பழக்கமும் இல்லாததாலோ என்னவோ சோர்வைக் காட்டிக் கொள்வதைக் கூடுமானவரைத் தவிர்ப்பார். யோசனைகள், திட்டங்களைக் கொட்டிக் கொண்டே இருப்பது மூச்சுமுட்டும்.
மொழிபெயர்ப்பை தட்டச்செழுத்தரின் வேகத்துடன் செய்யக்கூடியவர். எனது மொழிபெயர்ப்புத் திறன் மேம்பட உதவிய வெகுசிலரில் ஒருவர் அரவிந்தன்.
அரவிந்தனுடன் வேலை பார்த்த 8 ஆண்டு காலப்பகுதியும் நான் கண்ணியமாக மரியாதையோடு நடத்தப்பட்ட காலமாக நன்றியுடன் என்னால் சொல்லமுடியும்.
நட்பு மற்றும் அன்பின் இதத்தை வேறு வேறு இடங்களிலிருந்து கொண்டு பராமரிப்பது வேறு. அதிகாரத்தில், வேலை ரீதியாக உயர்நிலையில் இருந்துகொண்டு படிநிலையில், கீழேயுள்ள உயிரை – அதுவும் என்னைப் போன்ற சிக்கலான ஒரு நபரை - மதிப்போடு நடத்துவது என்பது மிக அரிதானது.
000
இந்து தமிழ் திசை காலகட்டத்தில்தான் அவர் பயணம், பொன்னகரம் என்ற இரண்டு நாவல்களை எழுதினார். இரண்டையும் கையெழுத்துப் படியாகவே எனக்குக் கொடுத்தார்.
நான் அந்த இரண்டு நாவல்களையுமே மிகப் பழைய ஒரு மனம் எழுதியது என்று கடுமையாக விமர்சித்தேன்.
நேர்ப்பேச்சில் என்னிடம் வெளிப்படும் கூர்மையான விமர்சனம் படைப்பையும் தாண்டி நபரைக் கீறிவிடக்கூடியது என்பது மிகத் தாமதமாக இந்த வயதிலேயே எனக்குப் புரிகிறது. அரவிந்தனையும் நான் பல சமயங்களில் கீறியிருக்கிறேன். அவர் அதைப் பெருந்தன்மையாகவே கடந்திருக்கிறார்.
முதல் நாவலை விமர்சித்த பிறகும் இரண்டாவது நாவலையும் படிக்க கொடுத்தார்.
அந்த விமர்சனங்கள் எதையும் வேலை மீது காட்டியதில்லை.
000
எந்திரங்களால் உருவாக்கப்படும் இசை மனிதனின் ஆழமான உணர்ச்சிகளை எப்படித் தொடுகிறது என்று ஆந்த்ரேய் தார்க்கோவெஸ்கி வியக்கிறார். சத்தம் எப்போது சந்தமாகிறது? மொழியும் ஒருவகையில் அப்படித்தான். ஒரே காலகட்டத்தில் பொதுவான சொற்களனிலிருந்து எடுத்து படைக்கப்படும் மொழி ஒருவரிடம் எப்படி தற்காலத் தன்மையைப் பெறுகிறது? ஒருவரிடம் ஏன் பழையதாக இருக்கிறது?
உள்ளடக்கத்திலா? விமர்சனத்திலா? பார்வையிலா? அனுபவத்தைப் பார்க்கும் தொலைவிலா? மனத்தடையின்மையிலா? அராஜகத்திலா? கொந்தளிப்பிலா? கொதிப்பிலா?
சத்தம் எங்கே சந்தமாகிறது?
அன்பு எங்கே அருளாகவும் மரியாதையாகவும் நீதியாகவும் மாறுகிறது?
அரவிந்தனின் நிதானத்துக்கும் பெரிதாக அதிர்வுறாமல் தோன்றும் தன்மைக்கும் அவரது படைப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறதாவென்று பரிசீலிக்க வேண்டும்.
பாலசரஸ்வதியின் வாழ்க்கை சரிதத்தை எழுதிய டக்ளஸ் நைட்டின் நூலை மொழிபெயர்த்தது, அரவிந்தனின் நினைவுகூரத்தக்க சாதனைகளில் ஒன்று. புதுமைப்பித்தனுக்கு இணையான ஒரு கலை சாதனையாளரை எனக்கு மறக்க இயலாமல் ஆக்கியதற்கு நான் அரவிந்தனுக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்.
000
எல்லாவற்றையும் சரியாகப் பார்க்க காலவகையிலும் இடவகையிலும் தொலைவு தேவையாக உள்ளது என்ற சுந்தர ராமசாமியின் வாக்கியத்தைச் சொல்லி எனது உரையை நிறைவு செய்கிறேன். 19 வயதில் அறிமுகமான தளவாயுடன் அப்படித்தான் எனது உறவு கனிந்திருக்கிறது.
அரவிந்தனையும் அப்படிப் பார்க்க அனுமதித்த காலத்துக்கு சலாம்.
தேங்க் யூ அரவிந்தன்.
எனது கௌரவமான சென்னை வாழ்க்கையின் ஒரு அங்கம் நீங்கள். உங்களுக்கு எனது பிரியமும் அன்பும்.
இராப்பகல் இல்லாத இடத்தில் இருக்கும் வெண்ணிலா, அன்பு வெறுப்பு இரண்டுமற்ற இடத்தில் சுடரும் வெண்ணிலாதான் போல.
(டிஸ்கவரி புக் பேலஸும் பரிசல் புத்தக நிலையமும் இணைந்து நடத்திய அரவிந்தன் 60 நிகழ்ச்சியில் படிக்கப்பட்ட உரை)
Comments