Skip to main content

பாலசுப்ரமணியன் பொன்ராஜின் ‘சீமுர்க்’


பாலசுப்ரமணியன் பொன்ராஜின் சீமுர்க் சிறுகதைத் தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று என்று கருதும் கதையான ‘சீமுர்க்’ கதையைப் படிக்கும்போது புனைவும்,  மெய்யியலா என்ற கேள்வியை என்னால் தவிர்க்க இயலவில்லை. 

சிந்தனையும் புனைவும் விமர்சனப் பார்வையும் மேலோங்கிய பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகளை போர்ஹே கதைகளை வரையறுப்பது போல ஹைப்ரிட் கதைகள் என்று வரையறுத்துக் கொள்ளலாம்.

போர்ஹேசின் சிறுகதையொன்றில் ஒரு வாக்கியம் வரும். அவன் தன்னைப் பற்றி பிறர் கருதும்போது தனது வருங்கால சாதனைகளையும் சேர்த்து வைத்து மதிப்பிட வேண்டுமென்று விரும்புபவனாகவும், பிறரை அவர்களது கடந்தகாலச் செயல்களை வைத்து மதிப்பிடுபவனாகவும் இருந்தான் என்று போர்ஹெஸ் எழுதியிருப்பார்.

இந்த வாக்கியம் போர்ஹெசின் கதாபாத்திரத்துக்கு மட்டுமல்ல; நம்மில் பெரும்பாலானவர்களின் மனப்போக்குக்குப் பொருந்தக்கூடிய பொதுவான மனித இயல்பு குறித்த கண்டுபிடிப்பு அதில் இருக்கிறது. 

மெய்யியலும் அறிவியலும் போலவே இந்தப் பூமியில் நமது உயிர் இருப்பு என்னவாக இருக்கிறது என்பதைச் சிந்திக்கும் மாற்று முறைமைகளாகவே கவிதையும், சிறுகதையும், நாவலாக இருக்கிறது.

மூளை நரம்பியல் துறை 21ஆம் நூற்றாண்டில் பெருமளவு வளர்ந்துள்ள சூழலில், இன்றும் உலகின் தீர்க்கமுடியாத புதிர்களில் ஒன்றாக இருக்கும் மனித மூளைக்குள் உள்ள ரகசியங்களை, போர்ஹெஸ் சென்ற நூற்றாண்டில் சிறுகதைகள் வாயிலாக தொட்டுச் சென்றிருக்கிறார் என்று நரம்பியல் விஞ்ஞானி ரோட்ரிகோ குயின் ஆச்சரியப்படுகிறார். நினைவு, மறதி என்பதை தனது படைப்பின் முக்கியமான விவகாரமாக்கிய போர்ஹெஸ், தனது “funes the memorius” கதையின் மூல கதாபாத்திரம், தனக்கு நடப்பது எல்லாவற்றையும் சித்திரம் போல ஞாபகம் இருப்பதால் எதையும் மறக்க இயலாமல் அவதிப்படும் கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரத்தால் அரூபமான கருத்துருவங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள இயலாது. விஞ்ஞானி குயினும் மூளை பற்றிய தனது ஆராய்ச்சியில் இதே இடத்துக்குத்தான் வந்து சேர்கிறார். மனித மூளையில் உள்ள நியூரான்கள் அரூப கருத்துருவங்களால் தூண்டப்படுகின்றன. ஆனால் விவரங்களை விட்டுவிடுகின்றன என்று போர்ஹெஸ் எழுதிய இடத்துக்கு வந்துசேர்கிறார். மூளை நரம்பியலில் பிற்காலத்தில் அறியப்பட்ட ஒரு விஷயத்தை போர்ஹெஸ் கனவாக தனது புனைகதையில் கண்டுள்ளார்.

அந்த அடிப்படையில் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் ‘சித்தார்த்தன்’, ராபர்ட்டோ கலாஸோவின் நாவலான ‘க’, எம். வி. வெங்கட்ராமின் ‘காதுகள்’, சம்பத்தின் ‘இடைவெளி’ எல்லாம் ஒரு புனைவு மட்டும்தானா? பஷீரையும் காஃப்காவையும் சாதத் ஹசன் மண்டோவையும் ஹாருகி முராகமியையும் வெறும் புனைவெழுத்தாளர்கள் என்று மட்டும் யாராவது சொல்ல முடியுமா? 

தத்துவம், மெய்யியல் சிந்திக்கும் பாதையில் செல்வதுபோலச் சென்று, மினுங்கித் தோன்றி மறையும் கணத்தோற்றங்கள் என்று புனைவின் கண்டுபிடிப்புத் தருணங்களை நாம் வகுத்துப் பார்க்கலாம். ஜே. கிருஷ்ணமூர்த்தி சத்தியத்துக்கு ‘பாதையற்ற பாதை’ என்ற படிமத்தை வரையறுப்பதிலிருந்து கடன்வாங்கி புனைவின் வழிகளைப் பாதையற்ற பாதை என்று சொல்லிப் பார்க்கலாம்.

சீமுர்க் கதையில் பெயரில்லாமல் ஒட்டகத்தில் அலையும் அந்த ஞானி உறக்கத்தில் விழுந்த ஆழமான குளம்தான் புனைவு என்று கருதுகிறேன். விரைகளால் உருவான அன்றாடத்தின் உலகம் ஒன்றிருக்கிறது. சிமூர்க் கதையில் வரும் அந்த ஞானியோ புனைவென்னும் கனவின் விதைகளை, அன்றாடம் தந்த தனது உடலிலும் தனது ஒட்டகத்திலும் புதைத்து அதிலிருந்து ஒரு உலகத்தை உருவாக்குகிறான்.

இந்த உலகம் அழிந்தபிறகும், அதை மறுபடைப்பு செய்வதற்கான உயிர்கள், தாவரங்கள் அனைத்தையும் வைத்திருக்கும் நோவா கப்பல்தான் புனைவு.   

000 


துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை, சீமுர்க் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் வாசித்த வகையில் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் என்ற சிறுகதை எழுத்தாளனின் இடம் என்ன என்ற கேள்வியை எனக்கு நான் கேட்டுக் கொண்டு ஒரு தூண்டிலைப் போட முயல்கிறேன்.

அதற்கான பதில் ‘எத்திசை செலினும் அத்திசை சோறே’ என்ற கதையில் இருக்கிறது. சிந்திக்கிற காலத்தை எட்டி, அதன் வியர்த்தத்தையும் உணர்ந்து பாடல்களின் காலத்தில் நுழைந்துவிட்ட பிரக்ஞையைக் கொண்ட சிறுகதை எழுத்தாளர் இவர் என்று தோன்றுகிறது.

லட்சியம் நழுவிய காலத்தில், சிந்தனைகளும், ரத்தம் தோய்ந்த வரலாறுகளும் வெறும் கதைகளாக எஞ்சிவிட்ட ஒரு நூற்றாண்டுக்குள் நுழைந்துவிட்ட ஓர்மையைக் கொண்ட அபூர்வமாகிவிட்ட விமர்சனக் குரல் இவரது சிறுகதைகளில் கேட்கிறது. 

லட்சியம் என்ற ஒன்று இருந்த ஞாபகத்தை வைத்திருப்பதால் இவர் கதைகளில் சித்தரிக்கப்படும் நிகழ்வுகளுக்கும், அதை நிகழ்த்துபவனுக்கும் ஒரு இடைவெளி இயல்பாகச் சாத்தியமாகிவிடுகிறது. நடைமுறைக்கும் விருப்பத்துக்கும் லட்சியத்துக்கும் எதார்த்தத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை உணரும் அபத்த உணர்வு இவர் கதைகளின் தொனியில் தோன்றிவிடுகிறது.ந. முத்துசாமி, ராஜேந்திர சோழன்,  எம்.டி.முத்துக்குமாரசாமியின் சிறுகதைகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

சுஜாதா, சுந்தர ராமசாமி, அசோகமித்திரனின் கச்சிதம், சுவாரசியத்தில் போர்ஹேவிய கதை சாத்தியங்களை  பாலசுப்ரமணியன் பொன்ராஜில் எட்டமுடிகிறது. 

வளமான தமிழ் சிறுகதை மரபுக்கு பாலசுப்ரமணியன் பொன்ராஜ் போல ஒரு ஸ்டைலிஸ்ட் இன்றும் தேவையாக மட்டும் அல்ல நிவாரணமாகவும் ஆறுதலாகவும் உள்ளார். இன்று பல தன்மைகளில், புலங்களில் சிறுகதைகள் எழுதப்படுகின்றன. ஆனால், செம்மையாக, இலக்கு பற்றிய பிரக்ஞையுடன் எழுதும் சிறுகதை ஆசிரியர்கள் அரிதாகிவிட்டனர். தமிழின் சிறந்த புனைகதையாளர்களில் ஒருவர் என்று சொல்லக்கூடியவரின் சிறுகதைகளை அவ்வப்போது படிக்கும்போது இப்படித் தோன்றுகிறது. உங்களுக்கு எப்போது உத்தேசமோ அப்போது நீங்கள் கதையை விட்டு வெளியேறலாம் என்ற உத்தேசத்தில் அவர் கதை எழுதுகிறார். அவருக்குத் தனது கதை பற்றி குறிப்பிட்ட திட்டம் எதுவும் இல்லை என்று உணர்ந்தேன். இங்கேதான் விமர்சன உணர்வு என்ற ஒன்றை திரும்பத் திரும்ப வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஒரு அனுபவத்தை, ஒரு நிகழ்ச்சியை, ஒரு கதாபாத்திரத்தை கவிதையில், கதையில், நாவலில் எந்த விமர்சனமும் இல்லாமல், புதுமைப்பித்தனிலிருந்து தொடங்கிய ஒரு செம்மையான இலக்கிய மரபு நமது படைப்பையும் பார்த்துக் கொண்டிருக்கிறதென்ற போதமில்லாமல் எல்லாவற்றையும் மகோன்னப்படுத்திவிடுவதைக் கலை என்று கருதும் காலத்துக்கு வந்திருக்கிறோம். அங்கே கலை பரட்டைத்தன்மையை அடைந்துவிடுகிறது. 

இறந்த காலத்தையோ, வரலாற்றையோ, கருத்தையோ, காதலையோ, நவீனத்தையோ எதையும் மகத்துவப்படுத்தும் கதைகள் அல்ல பாலசுப்ரமணியன் பொன்ராஜூடையது.

கனகாம்பரம் அணியும் தமிழ் பெண்கள் பற்றி ஒரு வாக்கியத்தை ஒரு குறிப்பாக அருமையாக கடந்துவிடுகிறார் பாலசுப்ரமணியன் பொன்ராஜ். சில சிறுகதையாசிரியர்கள், சில கவிஞர்கள் கண்களில் கனகாம்பரம் தென்படக்கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன். ஒரு முடிக்கவே இயலாத சிறுகதையாக கனகாம்பரம் ஆகிவிடும். 

கவிதை எழுதுபவனின் கூர்மையான அவதானங்களுடன், மிகச் சிக்கலானதையும், சங்கடமானதையும் துல்லியமாகச் சொல்லும் பாலசுப்ரமணியன் பொன்ராஜின் மொழியும் நோக்கமும் வாசக அனுபவமும் துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை சிறுகதைத் தொகுப்பை ஒப்பிடும்போது கூடுதல் மிருதுத்தன்மையை அடைந்துள்ளது.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே லா. ச. ராமாமிர்தம், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ந. முத்துசாமி போல காதாலும் வாசிக்கக்கூடிய உரைநடையாளர்களை இழந்துவிட்டோம். எம். டி. முத்துக்குமாரசாமி போன்ற சிலர் விதிவிலக்குகள். அவரது புனைவையும் கட்டுரையையும் காதாலும் வாசிக்க இயலும். இங்கே இயங்கும் மிமிக்ரி கலைஞர்களையும், ஜிம்னாஸ்டிக் வித்தைக்காரர்களையும் நான் இங்கே கருதவில்லை.கவிதை, சிறுகதை, நாவல் என்று அவர்கள் ஏராளமாக ஆக்கிரமித்திருக்கின்றனர், இடத்தை. 

000

பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகளில் தொடர்ந்து வரும் பூனை சீமுர்க் தொகுப்பில் உள்ள ‘பனிமூடிய சிகரங்களும் நிலத்தடி வசிப்பிடமும்’ கதையில் நெகிழும் உருவகமாக மாறியிருக்கிறது. துரதிர்ஷ்டம் பிடித்த கதைத் தொகுதியில் விவரங்களின் கச்சாத்தன்மையில் நவீன பொருட்களை கதைகளுக்குள் அடுக்குவதில் உள்ள மோஸ்தரில் உணர்ந்த ஒரு இறுக்கமான அனுபவம் சிமூர்க்கில் நெகிழ்ந்திருக்கிறது.

நிகழ்ச்சிகளின் மீது விழிப்பும், அதை தனது கலைக்குள் நிகழ்த்துபவனின் நிதானமும் இணைந்திருக்கும் கதைகள் இவை. 

பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகளில் பூனையும் பெண்ணும் வசீகரமும் பேய்த்தன்மை கொண்டவர்களாகவும் தொடர்ந்து வருகிறார்கள். பெண்களின் உடைகள் வழியாக பாலசுப்ரமணியன் பொன்ராஜ் காலம் மாறுவதை அவதானிக்கிறார். மாறும் பாலியல் நடத்தைகளின் வழியாக நாகரிகங்களின் தடய எச்சங்களைப் பரிசீலிக்க முடியுமென்ற நம்பிக்கை கொண்டவன் நான்.

பாலசுப்ரமணியன் பொன்ராஜின் பூனைகளின் தன்மைகள் அவர் படைத்த பெண்களிடமும் நீட்சியடைபவை. ரகசியம், அரூபம், தர்க்கத்துக்கு எட்டாத அவர்களின் ஆழம், அதற்கும் அடியிலுள்ள தனிமை, ஆணுடன் பெண்ணும், பெண்ணுடன் ஆணும் சேர்ந்து முயங்கி முரண்பட்டு தனித்து வாழ நேர்ந்திருக்கும் விசித்திரம் இவற்றை பாலசுப்ரமணியன் தீராமல் வியாக்கியானம் செய்தபடியிருக்கிறார்.

டால்ஸ்டாயிலிருந்து மௌனி வரை பாடாய்படுத்திய பெண்கள் பாலசுப்ரமணியன் பொன்ராஜையும் காலத்திலும், காலத்துக்கு அப்பாற்பட்ட வகையிலும் தொடர்ந்து தொந்தரவூட்டுகின்றனர். 

‘விடுமுறை தினத்தில் ஒரு அனார்கிஸ்ட்’ சிறுகதையில் வரும் ஆய்வுப் பேராசிரியரின் மனைவி ஒரு பூனையைப் போலவே சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். அந்த உரையாடல் நடைபெறும் வீட்டில் அவள் அவ்வப்போதே தோன்றினாலும் அவள் சுரீரென வீடு முழுவதும் படர்ந்திருக்கிறாள்.

காலம், கலாசாரத்தின் மாற்றங்கள் சகலவற்றையும் உட்கொண்ட அதிநவீன களம்தான் பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகள் என்றாலும், அந்த மாற்றத்தின் திருப்பங்களில் வலிகளையும் உடைவையும் வாழ்க்கை முழுக்க துரத்தும் வடுக்களையும் அதனால் விளைந்த அச்சங்களையும் சுமப்பவர்கள் இவரது கதாபாத்திரங்கள். அந்த வகையில் டால்ஸ்டாய் எத்தனை நவீனமானவரோ, வள்ளலார் எத்தனை நவீனமானவரோ பாலசுப்ரமணியன் பொன்ராஜையும் அத்தனை நவீனமானவர் என்றே சொல்வேன். 

000

இத்தொகுப்பின் சிறந்த கதைகளென சீமுர்க், நீத்தார், பனிமூடிய சிகரங்களும் நிலத்தடி வசிப்பிடமும், எத்திசை செலினும் அத்திசைச் சோறே கதைகளைச் சொல்வேன்.

நீத்தார் சிறுகதை முழுமையாக உரைநடையில் எழுதியிருந்தாலும் கவிதை என்று எனக்குச் சொல்ல இயலும். பெட்ரோ ப்ரோமோ நாவலைப் போன்ற ஒரு காவியத்தன்மையை விவரணைகளின் வழியாக இக்கதைகளில் சாதிக்க முயன்றிருக்கிறார் பாலசுப்ரமணியன் பொன்ராஜ்.

000

பாலா ஒரு நாவலை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று இந்தச் சிறுகதைகளைப் பற்றி எழுதும்போது சங்கேதமாகத் தோன்றுகிறது.

வாழ்த்துகள் பாலா. 

Comments