Skip to main content

அனோஜனின் ‘தீக்குடுக்கை’


ஈழத்தைச் சேர்ந்த இளம் சிறுகதை ஆசிரியராக எனக்குப் பெயரளவில் பரிச்சயமான அனோஜன், அகழ் இணைய இதழின் ஆசிரியர்களில் ஒருவர். நண்பர் விஷால் ராஜா வழியாக தொலைபேசியில் உரையாடத் தொடங்கி, தொடர் பேச்சுகள், சில நேரடி சந்திப்புகள் வழியாக நெருக்கத்துக்குரிய நண்பராகவும் ஆகிவிட்டவர். தனது முதல் நாவலுக்கான ஊக்கத்தை எனது கட்டுரையொன்றின் வாயிலாகப் பெற்றதாக தனது நாவலுக்கான முன்னுரைக் குறிப்பில் எழுதியுள்ளதைப் பார்த்தபோது கூடுதல் மகிழ்ச்சியை உணர்ந்தேன். எனது இணையத்தளம் போக, எனது எழுத்துகளைத் தொடர்ந்து வெளியிடும் மேடையாக இருந்துவரும் அகழ் தொடர்பிலான உறவு விஷால், அனோஜனுடனான தொடரும் நட்பு, உரையாடல், தகராறுகளின் இணைச் செயல்பாடும்தான்.

இந்தப் புத்தகத் திருவிழாவில் சால்ட் பதிப்பகம் வெளியிட்ட அனோஜன் பாலகிருஷ்ணனின் முதல் நாவலான ‘தீக்குடுக்கை’க்கு பின் அட்டைக் குறிப்பாக எழுதியது இது.

000

அகத்திலும் புறத்திலும் போர்களும் பிளவுகளும் முரண்பாடுகளும் கூச்சலிடும் ஒரு நூற்றாண்டில் கண்விழித்து, அந்தத் துர்க்கனவின் கோரத் தீண்டலுக்கும் அதனால் ஏற்பட்ட சிதைவுக்கும் உள்ளாகியிருப்பவர்கள் குழந்தைகள்தான்.மத்தியக் கிழக்கிலும் உக்ரைனிலும் வெளிப்படையான போர் என்றால், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வெறுப்பும் சமூகப் பிளவும் அதிகரிக்கும் அகப்போர்கள். இந்த யுத்தங்களின் பின்னணியில் குழந்தைகள் பெரியவர்களாகும் காதைதான் ‘தீக்குடுக்கை’. 

யுத்தம், வறுமை, மேலதிகத் தரத்திலான வாழ்க்கைக்காக சொந்த ஊர், சொந்த மொழி, பந்தங்களைத் துறந்து மனிதர்கள் பாரிய அளவில் குறுக்கும்நெடுக்குமாகப் புலம்பெயரும் நூற்றாண்டு இது.

அனோஜனின் நாவலில், பெற்றோரின் காலத்திலேயே அடையாளத்தை இழந்து லண்டனில் வளர்ந்த ஆதன், வாலிபப் பருவத்தில் தன் அடையாளம், தன் வரலாறு குறித்த உணர்ச்சியால் தீண்டப்பட்டு, தன் இனமே ஒட்டுமொத்தமாக அடையாளத்தை இழக்கப்போகும் யுத்தகளத்துக்கு வந்து ஒப்புக்கொடுக்கிறான். 

லௌகீகமாக எல்லாப் பாதுகாப்புகளும் இருக்கும் ஒருவன் அடையாளத்துக்காக ஏன் அந்த சாகசத்தைச் செய்யத் துணிகிறான்? புயலில் ஒரு தோணி நாயகன் பாண்டியன் எடுக்கும் சாகசத் தேர்வை ஞாபகப்படுத்தும் அம்சம். இது நாவலில் நிகழும் அசாதாரணம் என்றால், யுத்தம், இன அழிப்பு காரணமாக லண்டனுக்கு வரும் காந்தனோ, ஈழக்கதைக் களத்திலும் எதார்த்தத்திலும் நாம் பரவலாகக் காணும் சாதாரணம். 

வரலாற்றின் அரதப்பழசான காதல் என்ற பழுதுபட்ட கட்டுமரத்தில் கருணைக் கொடியை ஏற்றி யுத்தமுனைக்கு ஆதனைத் தேடிவரும் எரிகா. உக்கிரமான போரையும் அடையாளம் இழப்பையும் வரலாறு நமது குழந்தைகள் மீது போடும் ஆறாத கீறல்களையும் அலைக்கழிப்புகளையும் நாவல் தயக்கமின்றி குட்டிக் குட்டிக் கதைகளாகத் தொட்டுச் செல்கிறது. இத்தனை மூச்சுமுட்டலுக்கு நடுவிலும் இருள்வெளியில் மினுங்கும் ஊசிமுனை போன்ற சிறிய நட்சத்திரங்களைப் பார்ப்பது போன்ற நம்பிக்கை உணர்வை இந்தப் படைப்பு அளிக்கிறது. 

அனோஜனின் மொழி அளிக்கும் மனப்பதிவை, அனுபவத்தை மிருது என்று நான் மொழிபெயர்க்கிறேன். காத்திரமான சிறுகதை ஆசிரியராக தன் அடையாளத்தை நிறுவியிருக்கும் அனோஜனின் முதல் நாவல் என்ற வகையில் குறிப்பிடத்தகுந்த அழகிய சிறு படைப்பு இது. Coming of age நாவல்கள் தமிழில் அதிகம். 18-வது அட்சக்கோடு, என் பெயர் ராமசேஷன் போன்ற நாவல்களின் வரிசையில் ‘தீக்குடுக்கை’ நாவலை ஈழப்பின்னணியில் நான் வைத்துப் பார்க்கிறேன். இன்று, ஒண்ட ஒரு வதிவிடம் இல்லாமல் காயங்களோடு ஓடிக்கொண்டிருக்கும் பாலஸ்தீனக் குழந்தைகள் தீக்குடுக்கைகள்தானே.

Comments