ஓவியம்: ஆதிமூலம் ‘காந்தி – அஹிம்சையின் முடிவு’ நூலைப் படித்து முடிக்கும்போது, அசோகமித்திரன் எழுதிய சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ‘காந்தி’யின் வாக்கியம் கூடுதலாக நம்மை அறைந்து எதிரொலிக்கிறது. ‘உண்மை கசப்பானது’ என்ற வாக்கியமே அது. சத்தியத்தின் கண்ணாடியில் நெருக்கமாகத் தன் சுயத்தை, வாழ்க்கை முழுக்க பிரதிபலித்துப் பார்த்துக்கொண்டேயிருந்த காந்தியும் அவரது சமகாலத்தவருக்கு மட்டுமல்ல இன்றைய தலைமுறையினருக்கும் ஏன் வரலாற்றுக்கும் கூட, விழுங்கிச் செரிக்க இயலாத கசப்பானதொரு வியக்தியென்ற உணர்வை மீண்டும் ஏற்படுத்தும் நூல் இது. இந்திய சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் பிரிவினையின்போதும் இனப்படுகொலை என்று சொல்லப்படக்கூடிய அளவில் நடந்த இந்து – முஸ்லிம் மோதல்களைச் சுற்றி காந்தியும், அவரது அஹிம்சையும், அவர் தன் சுயத்துடன் மேற்கொண்ட அசாத்தியமான வீரமும், காந்தியை அவநம்பிக்கையை நோக்கி, துயரத்தை நோக்கி அலைக்கழிப்பை நோக்கி எப்படித் தள்ளியது என்பதைப் பகுப்பாய்வு செய்யும் நூல் இது. 000 இருபதாம் நூற்றாண்டில் உலகளவில் மூன்று இயக்கங்கள் வரலாற்றுப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தி வெகுமக்களின் வாழ்க்கை மீதும் தாக்கத்தை ஏ...