Skip to main content

மரணத்தைக் கலையாக்கிய காந்தி

ஓவியம்: ஆதிமூலம்

‘காந்தி – அஹிம்சையின் முடிவு’ நூலைப் படித்து முடிக்கும்போது, அசோகமித்திரன் எழுதிய சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ‘காந்தி’யின் வாக்கியம் கூடுதலாக நம்மை அறைந்து எதிரொலிக்கிறது. ‘உண்மை கசப்பானது’ என்ற வாக்கியமே அது.

சத்தியத்தின் கண்ணாடியில் நெருக்கமாகத் தன் சுயத்தை, வாழ்க்கை முழுக்க பிரதிபலித்துப் பார்த்துக்கொண்டேயிருந்த காந்தியும் அவரது சமகாலத்தவருக்கு மட்டுமல்ல இன்றைய தலைமுறையினருக்கும் ஏன் வரலாற்றுக்கும் கூட, விழுங்கிச் செரிக்க இயலாத கசப்பானதொரு வியக்தியென்ற உணர்வை மீண்டும் ஏற்படுத்தும் நூல் இது. இந்திய சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் பிரிவினையின்போதும் இனப்படுகொலை என்று சொல்லப்படக்கூடிய அளவில் நடந்த இந்து – முஸ்லிம் மோதல்களைச் சுற்றி காந்தியும், அவரது அஹிம்சையும், அவர் தன் சுயத்துடன் மேற்கொண்ட அசாத்தியமான வீரமும், காந்தியை அவநம்பிக்கையை நோக்கி, துயரத்தை நோக்கி அலைக்கழிப்பை நோக்கி எப்படித் தள்ளியது என்பதைப் பகுப்பாய்வு செய்யும் நூல் இது.

000

இருபதாம் நூற்றாண்டில் உலகளவில் மூன்று இயக்கங்கள் வரலாற்றுப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தி வெகுமக்களின் வாழ்க்கை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. பொருள்முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டு வர்க்கப் போராட்டமாக எழுந்த ரஷ்யப்புரட்சி ;இனத்தூய்மையை அடிப்படையாகக் கொண்டு ஹிட்லரை அடையாளமாகக் கொண்டெழுந்த இனவாத அடிப்படையிலான நாஜிகளின் எழுச்சி. இந்த இரண்டும் வன்முறையையும், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்ககளின் படுகொலையையும் நியாயப்படுத்தியவை. மூன்றாவது இயக்கம் இந்திய சுதந்திரத்துக்குக் காரணமான காந்தியின் அஹிம்சைப் போராட்டம்.

காந்தியின் வெற்றிகரமான சம்பாரன் போராட்டம், கேதா சத்தியாகிரகம், உப்பு சத்யாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு போராட்ட நிகழ்வுகள் குறித்து இந்நூல் கவனம் குவிக்கவில்லை. காந்தியின் சத்யாகிரகமும், அஹிம்ஸை தத்துவமும் ஒவ்வொரு நாளும் குத்தி கிழிக்கப்பட்டு, அவரது நடைமுறைகளையெல்லாம் பரிசோதிக்க வைத்த, விரக்தி கொள்ளச்செய்த இருள்சூழ்ந்த காலகட்டத்தை இந்த நூல் பேசுகிறது. வரலாற்றில் முதலும் முடிவுமாக அப்படியான ஒரு வன்முறையற்ற போராட்டம் நடந்து முடிந்துவிட்ட துயரக் கதைதான் இது என்பதைத் தலைப்பே தெரிவித்துவிடுகிறது.

காலனிய ஆட்சிக்கு அடிமைப்பட்டிருந்த மக்களுக்கு வன்முறை வாயிலான போராட்டம் பலனளிக்காது என்று காந்தி நம்பினார். தேசியப் போராட்டத்தில் வன்முறை நுழைந்தால் சுதந்திரத்துக்கான கோரிக்கையே பறிபோகலாமென்று நம்பினார். அதிகாரத்தின் மாற்றமென்பது சமூக ஒழுங்கின் மாற்றமென்று கருதிய அவர், சமூக ஒழுங்கு குலையும்போது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இந்தியாவைத் தொடர்ந்து ஆள்வதற்கு பரிபூரணமான ஒரு காரணத்தை வன்முறை தந்துவிடுமென்று அஞ்சினார். அந்த அடிப்படையில்தான், அஹிம்சை போராட்டங்களின் வாயிலாக இந்தியா சுதந்திரத்தை எட்டிவிட இருந்த நிலையில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான மோதலும் ஆயிரக்கணக்கானவர்களின் பலிகளும் அவரை மோசமாகப் பாதித்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் தங்களுக்குள் ஒழுங்கை அமைதியைப் பராமரிக்க இயலாதபோது சுதந்திரம் கிடைத்து என்ன ஆகப்போகிறது என்ற விரக்திக்கு அவர் வந்துசேர்ந்தார். ஆனாலும், அத்தனை வன்முறைகளுக்குமிடையிலும் அவர் அஹிம்சை என்ற உடைந்துபோன பாத்திரத்தைக் கைவிடாமல் தன்னந்தனியனாக, நவகாளிக்கும், பீகாருக்கும், கல்கத்தாவுக்கும், டெல்லிக்கும் அலைந்த சித்திரம்தான் இது.

மறுதரப்புடனான(எதிர்தரப்பு என்று சொல்லத் தயக்கமாக உள்ளதால்) திறந்தமனதுடனான ஈடுபடுதல் என்பது மரணத்துக்கு ஒப்பான அபாயம் என்று காந்தி கூறுகிறார். மறுதரப்புக்கான பொறுப்பை ஏற்பதுவே சத்தியாகிரகம் என்று குறிப்பிடும் அவர், அந்தப் பொறுப்பை மறுதரப்பு மறுத்தாலும் அந்தப் பொறுப்பை ஏற்கவேண்டுமென்று வலியுறுத்துகிறார். தன்னை நிந்திக்கும் தரப்புக்கு தன்னைத் திறந்து ஒப்புக்கொடுப்பதன் மூலமே, மனமாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்பதே காந்தியின் சத்தியாகிரகக் கொள்கையாக இருந்தது. காந்தியின் அந்த நம்பிக்கை சில இடங்களில் அற்புதம் போல பலிக்கவும் செய்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கலவரக் காடாக ஆன கல்கத்தாவில் செப்டம்பர் மாதம் உண்ணாவிரதம் இருந்த காந்தியால் கலவரத்தில் ஈடுபட்டிருந்த இந்துகள், முஸ்லிம்களிடம் அமைதி திரும்பியதாகவும், ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் தனிநபராக வன்முறையைத் தடுக்கும் சக்தியாக காந்தி இருந்தார் என்றும் மௌண்ட்பேட்டன் நள்ளிரவில் சுதந்திரம் நூலில் குறிப்பிடுகிறார். 1946 ஆம் ஆண்டு முகம்மது அலி ஜின்னாவின் அழைப்பின் பேரில் கல்கத்தாவில் 4 ஆயிரம் அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு முன்னணியில் நின்று செயல்பட்ட வங்காளத்தின் முதலமைச்சராக இருந்த சுஹரவர்த்தியை, 1947 சுதந்திர வேளையில் ஏற்பட்ட கலவரங்களை அமைதிக்குக் கொண்டுவரும் தூதுவராகவும் காந்தியால் மாற்றமுடிகிறது. ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் மரணத்துக்கு நானும் பொறுப்பு என்று ஒரு சாதாரணர் முன்னால் வாக்குமூலம் அளிக்கவைக்கிறார் காந்தி.

000

இந்தியாவில் முஸ்லிம்களுடன் தந்திர உபாயமின்றி நட்பு மூலமாக இணக்கத்தை மேற்கொள்ள முயன்ற முதலும் கடைசியுமான அரசியல் ஆளுமையும் காந்தியே. பிரிட்டிஷ் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே  இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாளும் சூழ்ச்சி செயல்பட்டிருப்பதை காந்தி உணர்ந்திருந்தார்.

இந்து மதத்தை நாம் காப்பாற்ற வேண்டுமானால் முஸல்மானோடு பேரம் பேசக்கூடாது என்பதையே முதல் நிபந்தனையாகச் சொல்கிறார். பசுப் பாதுகாப்பு உட்பட எந்த நிபந்தனையையும் கிலாபத் இயக்கத்துக்கு ஆதரவு தரும்போது காந்தி, அலி சகோதரர்களுடன் பேசவில்லை. அத்துடன் அரசியலில் மதம் நுழைந்து எண்ணற்ற தப்பிதங்களுக்குக் காரணமாகிவிட்ட பின்னர், மதத்தையும் சேர்த்தே அரசியலைப் பார்க்கவேண்டுமென்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் காந்தி. அரசியலை மதமயமாக்கும் பார்வையல்ல காந்தியினுடையது. நவீனகால உணர்வுகளுக்கும், இரண்டு சமூகங்கள் சேர்ந்து வாழத் தேவையான புதிய சவால்களையும் எதிர்கொள்வதற்கும், புதிய அறமொன்று அவசியமென்று கருதியதால், அவர் மதத்தை அரசியல்படுத்த முயன்றிருக்கிறார். சமய ஆன்மிக மரபுகளிலிருந்தே அறவியல் ரீதியான வளங்களைப் பயன்படுத்துவதே அவரது நோக்கமாக இருந்துள்ளது.

அதனாலேயே கிலாஃபத் இயக்கத்துக்கு ஆதரவாக முஸ்லிம்களோடு நின்றபோது இந்துக்களுக்கு எந்தச் சலுகைகளையும் கோருவதை காந்தி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்கிறார் ஆசிரியர்.

தெரிதாவைத் துணைக்கழைக்கும் ஆசிரியர் தோழமையுறவின் விதிகள், அரசியல் விதிகளுக்கு அப்பாற்பட்டது என்று இந்து-முஸ்லிம் நல்லிணக்கம் தொடர்பான காந்தியின் கடப்பாட்டை ஒப்பிட்டுச் சொல்கிறார். சுயராஜ்யம் என்பது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான நட்புறவின் உத்தரவாதத்தில் நிறுவப்படவேண்டுமென்று காந்தி விரும்பியிருக்கிறார்.

நீதி என்பது அளவிட இயலாதது; அளவிட முடியாத நீதியால் அளவிடப்படுவது சட்டம் என்ற தெரிதாவின் வரையறையை வைத்து முஸ்லிம்களுடனான உறவை காந்தி நீதிக்கான வழிமுறையாகப் பார்த்திருக்கிறார். இந்தப் பெருந்தன்மையான நட்புக்கர நீட்டலில் பேரத்துக்கோ, லஞ்சத்துக்கோ வழிகிடையாது என்பதில் தெளிவாக காந்தி இருந்துள்ளார். கிலாஃபத் இயக்கத்துடன் காந்தி இணைந்தது குறித்து அம்பேத்கர் பாராட்டுணர்வுடனேயே குறிப்பிடுகிறார்.

‘திரு. காந்தி கிலாபத் இயக்கத்தினரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்ல. அவர்களின் வழிகாட்டியாகவும் நண்பராகவும் செயல்பட்டார். திரு. காந்தி ஒருவரே முஸ்லிம்களுடன் சேர்ந்த ஒரே இந்து.”

காந்தியின் போராட்ட வழிமுறையில் எதிர்மறைகள் இணைகின்றன என்று ஸ்பானிய கவிஞர் ஆக்டோவியா பாஸ் கூறுகிறார். எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ளும் சமாதானமும் அரசியலும் இணையும் அற்புதம் காந்தி என்று  குறிப்பிடும் ஆக்டோவியா பாஸ் 20 ஆம் நூற்றாண்டு போராட்ட வரலாற்றில் காந்தியினுடைய அஹிம்சை வழி, தனித்துவமான பங்களிப்பு என்கிறார்.

1940-களின் ஆரம்பத்தில் பாகிஸ்தான் என்ற கோரிக்கையை முஸ்லிம் லீக் எழுப்பத் தொடங்கிய நிலையில், காந்தி இந்தியா பிரிக்கப்பட வேண்டுமென்ற முடிவை கடைசிவரை ஆதரிக்கவேயில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு சுதந்திர அரசு வேண்டுமானால் அந்த முடிவுக்கு வரலாமென்று கடைசியாக கேட்கிறார்.

1940களின் துவக்கத்தில் காங்கிரஸூக்கு எதிராக முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் சேர்ந்து ஒரு கூட்டணியை உருவாக்க தந்தை பெரியாருடன் சேர்ந்து அம்பேத்கர் ஜின்னாவைச் சந்திக்கத் தொடங்கியதிலிருந்து பாகிஸ்தான் நியாய, காரணங்களை நோக்கி பாபாசாகேப் அம்பேத்கர் ஆராயத் தொடங்குகிறார். ஒருகட்டத்தில் ஜின்னாவின் அரசியலில் உள்ள இரட்டைத் தன்மையை உணர்ந்து ஜின்னாவின் மீது அவநம்பிக்கை கொள்கிறார்.

ஆனாலும் இந்தியா ஒரு தேசமா? என்ற கேள்வியிலிருந்து தொடங்கி தொடர்ந்து ஆராய்கிறார்.

கலாசார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் இந்து,முஸ்லிம்களிடையே மேலோட்டமான ஒற்றுமைகள் இருந்தாலும், இந்தியாவின் மத்தியகால வரலாறு மிக வலிமிகுந்த நினைவாக, இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமிடையே பெரும் சுவராக, உளவியல் ரீதியாக எழுந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார். அத்துடன் ஆங்கிலேயரின் காலத்திலேயே முஸ்லிம்கள் , அரசு, நிர்வாக, நீதித்துறை மாற்றங்களில் புறக்கணிக்கப்படத் தொடங்கிவிட்டனர் என்பதையும் அம்பேத்கர் காண்கிறார். இந்த மாற்றங்கள் வழியாக முஸ்லிம்கள் மேல் பெரும் தாக்குதல் தொடுக்கப்பட்டுவிட்டதென்றும், தனிநாடு வேண்டுமென்ற உளவியல் புரிந்துகொள்ளப்பட வேண்டியதென்றும் வாதம் செய்கிறார்.

பிரிட்டிஷாரின் பெரும் பொருளாதாரச் சுரண்டலால் உருவான பெரும் வங்கப் பஞ்சத்தில் உணவு கிடைக்காமல் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கல்கத்தாவின் ஏழை முஸ்லிம்கள் என்பதை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். 1946 இல் நடைபெற்ற நேரடி நடவடிக்கை தினம் கலவரத்தில் குடியானவ முஸ்லிம்களிடம், இந்துக்கள் மீதிருந்த வெறுப்புக்கு, வங்கப் பஞ்சத்தால் அனுபவித்த துயர நினைவுகளும், உணவுப் பற்றாக்குறையும் காரணமாக இருந்திருக்கின்றன என்பதை நூலாசிரியர் குடியானவ மக்களுக்கும் கலவரங்களுக்குமிடையிலான உறவு குறித்துப் பேசும்போது குறிப்பிடுகிறார்.

1946க்கு முன்னரே, பத்ரலோக் என்று அழைக்கப்பட்ட உயர்சாதியைச் சேர்ந்த படித்த நடுத்தர, பணக்கார வர்க்கத்தினரிடம், இந்து மதவாதம் படிப்படியாக வளர்ந்து வந்ததைக் குறிப்பிடுகிறார். ஆனால், மதவாத மனோபாவம் கொண்ட நடுத்தர மக்களோ, உயர்குடியினரோ கலவரங்களில் ஈடுபடவில்லை. ஏழை முஸ்லிம்கள், இந்துக்களே மதமோதல், வன்முறைகளில் ஈடுபட்டதைக் குறிப்பிடுகிறார். மதவாத மனநிலைக்கும் மதவாத வன்முறைக்குமிடையிலான இணைப்பும் இடைவெளியும் இதன்மூலம் தெரியவருகிறது. வர்க்கவாதமும், மதவாதமும் சந்தித்துப் பிரியும் புள்ளியை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். குஜராத் கலவரத்திலும் சூரத்துக்கு அருகேயிருந்த மலைப்பகுதிகளிலிருந்து வந்த பழங்குடிகள், சமவெளிப் பகுதியைச் சேர்ந்த தலித்களே கலவரங்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.

2002-ஆம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்துமுடிந்த போது, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் உயர்வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள், கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடிசைப்பகுதிகளை சுற்றுலா போல கார்களில் போய் பார்வையிட்ட காட்சிகள் ஞாபகம் வருகிறது. அஹமதாபாத்தைச் சேர்ந்த கோடீஸ்வர சமூக குழுமமான போஹ்ரா முஸ்லிம்களும் இக்கலவரத்தில் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது (நஜ்மா ஹெப்துல்லாவின் சுயசரிதைக் குறிப்பிலிருந்து).

தன்னுடைய சமயத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஒருவர் மதவாதத்தைக் கையிலெடுத்தே ஆக வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிடும் நூலாசிரியர், அரவிந்தர், விவேகானந்தர் போன்ற ஆளுமைகளை அதற்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறார்.

1946 ஆம் ஆண்டு குளிர்காலத்திலிருந்து 1948 ஜனவரி மாதம் 30 ஆம் தேதி காந்தி, கோட்சேயின் குண்டுகளுக்குப் பலியாவது வரையிலான காலகட்டத்தை ஆழமாக பகுப்பாய்வு செய்கிறார் ஆசிரியர். காந்தியின் பேச்சுகள், மனுபென்னின் குறிப்புகள், அந்தரங்கச் செயலாளராக இருந்த பியாரிலாலின் எழுத்துகள் முதல்நிலை ஆவணங்களாக இந்த நூலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அரிஸ்டாட்டிலிலிருந்து பூக்கோ வரை, சல்மான் ருஷ்டியிலிருந்து ஆக்டோவியா பாஸ் வரை பலரின் சிந்தனைகளும், மேற்கோள்களும் காந்தியின் நடவடிக்கைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு தாராளமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

காந்தியின் சுயராஜ்யம் என்பது சுயாட்சி, சுயகட்டுப்பாடு இரண்டையும் சேர்த்தே பார்ப்பது. எண்ணம், வார்த்தை,செயல் மூன்றிலும் கட்டுப்பாட்டை அந்தரங்கத்திலும், பொதுவெளியிலும் நிறுவுவதே அவரது சத்திய சோதனை. தன்னைச் சுற்றி அதிகரிக்கும் வன்முறை மோதல்கள் பெருகுவதற்கு தன்னிடமே குறைபட்டுக்கொண்டவர் காந்தி. தனது பாலுறவு வேட்கையை அவர் இயல்பானதாகப் பார்க்காமல், பாலுறவில் வன்முறையின் அம்சம் இருப்பதைப் பார்த்து அதிலிருந்துதான் வெளியிலும் முரண்பாடுகள் மூர்க்கம்பெறுவதாக அவர் நம்பினார். அதனுடன் சம்பந்தப்பட்டதாகவே அவரது பாலியல் பரிசோதனைகளும் இருந்துள்ளன.

நவகாளியில் பேத்தி உறவில் உள்ள மனுபென்னுடன் அவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் பாலியல் பரிசோதனையில் மனுபென்னின் நிலைபற்றி காந்திக்கு எந்தப் பரிசீலனையும் இல்லாததை நூலாசிரியர் கேள்விக்குள்ளாக்குகிறார். காந்தியின் மறைவுக்குப் பின்னால் மனுபென் தனது வாழ்க்கையை முழு ரகசியமாக்கிக் கொண்டு வாழ்ந்து மறைந்ததையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.மனுபென்னின் நாள்குறிப்புகள் கூட 2012 இல் தான் அவர் மறைவுக்குப் பின்னர் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், காந்தி மனுபென்னுடனான உறவை மறைபொருளாக்கவில்லை. மனுபென்னை தினசரி நாள்குறிப்புகள் எழுதவும் தூண்டியுள்ளார்.

அஹிம்சையை ஒரு தத்துவமாக, கருத்துருவமாக, தொகுப்புவதற்கு அவரது இறுதி ஆண்டுகள் அவரை அனுமதிக்கவேயில்லை. வரலாற்றின் பெரும்சுழியில் தீமையின் இருட்டோடு ஒவ்வொரு நாளும் விடிவதை அமைதியிழந்து நிராசையுடன் பார்த்துக்கொண்டிருந்தவர் அவர்.

போருக்கே தேவையற்ற செல்வப் பின்னணியிலிருந்தாலும் மரணத்தை நேரடியாக எதிர்கொள்ள தத்துவவியலாளர் விட்கன்ஸ்டைன் முதலாம் உலகப் போரில் பங்கேற்றது போலத்தான் காந்தியின் நவகாளி பயணம் இருக்கிறது. சாவிலும் ஒரு சுகம் உண்டு என்று நகுலன் உரைப்பது போல, சாவதும் ஒரு கலை என்று நவகாளிக்குப் பயணம் புறப்படும்போது காந்தி, ஹரிஹர் சர்மாவுக்கு கடிதம் எழுதுகிறார்.

அழகாகச் சாவதற்கு முழுமையான வாழ்வை ஒருவன் வாழவேண்டுமல்லவா? என்ற கேள்வியைக் கேட்கிறார் நூலாசிரியர். வன்முறைக்கு எதிரான அரசியல் நடவடிக்கையாக தனது உடலையும் உயிரையும் பணயம் வைக்கும் விளையாட்டை காந்தி கையில் எடுக்கிறார்.

வன்முறை, வன்முறையைத் துறப்பது உலகின் இருபெரும் சாத்தியங்களாக காந்தி முன்னால் திகழ்கின்றன.

நவகாளியிலும் பீகாரிலும் வன்முறையிலிருந்து தப்பித்து ஆண்கள் வேறு இடங்களுக்கு ஓடுவதைவிட மரணமடைவதே சரியான நடவடிக்கை என்று காந்தி நம்பினார். பெண்கள் மானபங்கப்படுவதை விட, போராடி இறப்பதே மேலானது என்று கருதுகிறார். இவற்றையெல்லாம் ஆசிரியர் நியாயப்படுத்தவில்லை.

ஆனால் இந்த ஒட்டுமொத்த அனுபவங்கள் மூலமாகவும் வலியை, வன்முறையை, மரணத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டிருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது.  

காந்தியுடன் நவகாளியில் மனுபென்னும் வந்து சேர்கிறார். காந்தியின் பாலியல் பரிசோதனை தொடர்பான சில குறிப்புகளை மனுபென்னுடனான உரையாடல், பயணம் தொடர்பான பக்கங்களில் பார்க்க இயல்கிறது. காந்தியுடன் உறங்குவதால் ஆசிரமத்தில் மற்றவர்களின் சங்கடமான பார்வைக்கு, கேள்விகளுக்கு இலக்காகும் துயரத்தை மட்டும் சிறுமி மனுபென் எதிர்கொள்ளவில்லை. பிரார்த்தனைக் கூட்டத்தில் இந்து மகாசபை இளைஞர்கள் இருக்கிறார்களென்றும், குரானை வாசிக்க மறுத்தும் மனுபென்னை சங்கடத்தோடு குரானை ஓதச் சொல்லித் தொல்லை அளித்தவர். ஒரு நாள் அதிகாலையில் நவகாளி பகுதியில் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்துக்கு காந்தியும் மனுபென்னும் ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து பயணத்தைத் தொடங்குகிறார்கள். காந்தி அந்தப் பகுதிக்கு வரக்கூடாது என்பதைத் தெரிவிக்கும்பொருட்டு குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் மலம் இருக்கவைத்துள்ளனர். முன்னேறுவதற்கு பாதையே இல்லாத நிலையில் கைகளாலேயே வரிசையாக கழிக்கப்பட்டிருக்கும் புது மலத்தை அள்ளி எறிந்துகொண்டே முன்னேறுகிறார் காந்தி. மனுபென்னுக்கு அந்தச் சோதனையைச் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார். மகாத்மாவை மரணம் மட்டுமல்ல; மலமும் துரத்திய காட்சியைப் பார்க்கிறோம்.

நவகாளியில் பெரும் இனப்படுகொலை நடந்த கிராமங்களைப் பார்வையிட நடந்தே செல்கிறார். தெருவெங்கும் எரிந்த வீடுகளைக் கடக்கிறது காந்தியின் குழு. வீடுகளைச் சுற்றியிருந்த பாக்கு, தென்னை மரங்கள் கூட எரிக்கப்பட்டிருக்கின்றன. அங்கே அலைந்துகொண்டிருந்த வேட்டை நாய் ஒன்று முனகியபடி காந்தியின் கவனத்தைக் கவர்வதற்கு முயல்கிறது. சில அடிகள் முன்சென்று காண்பித்து மீண்டும் காந்தியிடம் வந்து குரைக்கிறது. காந்தியைச் சுற்றியிருந்தவர்கள் அதைத் துரத்த நினைத்தபோது, காந்தி அந்த நாய் ஏதோ நம்மிடம் சொல்ல நினைக்கிறதென்று கூறுகிறார். நாய் அவர்களைக் கூப்பிடும் வழியில் பின்தொடர்கிறார்கள். அங்கே மூன்று எலும்புக்கூடுகள் ஒன்றன் மேல் ஒன்று கிடத்தப்பட்டு கிடக்கின்றன. சுற்றி நான்கு எலும்புக்கூடுகள்.

காஃப்காவின் ‘ஒரு நாயின் புலனாய்வுகள்’ கதையை நூலாசிரியர் உதாரணம் காட்டுகிறார். மனிதனுடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உடன் பயணித்த அந்த நாய், தான் கைவிடப்பட்டதின் துயரநிலையை பேசமுடியாவிட்டாலும், தன்னிடமிருக்கும் இயற்கையான திறன்களைக் கொண்டு காந்திக்குச் சொல்ல முயன்றிருக்கிறது. வெறுமனே மனிதனுக்கும் விலங்குக்குமான பரிமாற்ற பந்தத்தை அந்த விலங்கு தாண்டிவிடுகிறது. காரணமேயற்ற மனிதனின் பைத்தியக்கார வெறியாட்டத்தை, நாயால் கூடத் தொகுத்துப் புரிந்துகொள்ள இயலவில்லை.

ஆறு வாரங்கள் நவகாளியில் காந்தி தங்கி ஒவ்வொரு கிராமங்களாகப் புரிந்த யாத்திரை அங்கே அமைதியைக் கொண்டுவருகிறது. இருண்ட ஒரு தருணத்தில் மக்களின் காயங்களைக் குணப்படுத்த வந்த ஒரு தூதனைப் போல காந்தி அங்குள்ள மக்களுக்கு மட்டுமல்ல காவல்துறை அதிகாரிகளுக்கும் தோன்றினார். காந்தியின் வருகையை ஆரம்பத்தில் விரும்பாத முஸ்லிம்களின் குடியிருப்புகளிலிருந்து ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் எல்லாம் கூடி பழங்களுடன் காலை நடை செல்லும்போதும், மாலை நடை செல்லும்போதும் வரவேற்கும் நிகழ்ச்சிகளை பியாரிலால் பதிவுசெய்துள்ளார்.

000

நவகாளியில் முஸ்லிம்கள் நடத்திய கொடூரங்களுக்கு இணையாக பீகாரில் இந்துக்கள் படுகொலைகள் நடத்திவரும் செய்திகள் தொடர்கின்றன. முஸ்லிம்கள், இந்துக்கள் இருவர் நடத்திய பயங்கரங்களும் காந்தியைக் கண்கலங்க வைக்கின்றன. பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற பஞ்சாபிலிருந்து பிணங்கள் ரயிலில் வரத்தொடங்குகின்றன. சாவு ரயில்கள் புதிதாகக் காவப்பட்ட இரு தேசங்களுக்கும் பரிமாறப்படுகின்றன.  

படிப்படியாக காந்தியை மக்களும், அரசியல் தலைவர்களும் புறக்கணிக்கின்றனர். அவர் சிறுமைப்படுத்தப்படுகிறார். அவரது பேச்சுக்குத் தாக்கம் குறைவதை உணர்கிறார். இனி யாரும் என் பேச்சைக் கேட்கமாட்டார்கள். நான் மிக சிறியவன் என்று பேசுகிறார். அவரது பிடியிலிருந்து இந்திய அரசியல் நழுவிப்போகிறது. அஹிம்சை, வழிகாட்டு நெறியாக இருந்து வழுவிவிட்டது. காங்கிரஸார் அதைப்பற்றி அக்கறையே கொள்ளவில்லை. இந்து வலதுசாரிகளும் இடதுசாரிகளும் அகிம்சையைக் கடைபிடிக்கவேயில்லை. முஸ்லிம் லீக் கட்சியினரோ அஹிம்சைக்கு சாவுமணி அடித்துவிட்டனர்.

குறைந்தபட்சம் வெற்றியையும் அதிகபட்சம் தோல்வியையும் காந்தியின் அஹிம்சை சந்தித்தது.

ஆனால், முஸ்லிம்கள், இந்துக்கள் இருதரப்பினருமே நம்பி உரையாடக்கூடிய தார்மீக பீடமாக காந்தி இருந்தார். நவகாளி, பீகார் இரண்டு இடங்களிலுமே காந்தி சொல்வதைக் கேட்பதற்கு இரு சமயத்தவர்களும் தயாராக இருந்தனர். இரண்டு சமூகத்தினருமே தங்கள் தலைவர்களால் வீடுகளை உறவுகளை இழந்து துயரங்களுக்குள்ளாகி அச்சத்துக்குள்ளாக்கப்பட்டிருந்தனர். ஆனால் 78 வயதிலிருந்த நலிந்த ஒரு கிழவர், ஊக்கத்துடன் அவர்களது கவலைகளைக் கேட்டார். பல சமயங்களில் அவர்களது கோபம், தூற்றலையும் எதிர்கொண்டார்.

காந்தியின் அரசியல் மற்றவர்களுக்கு செவிகொடுப்பதோடும் சேர்ந்தது. 11 ஆண்டுகள் பத்திரிகையாளர்களையே பார்க்காத, இந்தியர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சனைகளையே கேட்காத ஒரு தலைமையைப் பெறுவதற்கு, இந்தியாவுக்கு ஒரு நூறாண்டு கூட காத்திருக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டம்தான்.

“துயர்பட்டவர் ஒருவருக்கு கவனம் கொடுக்கும் திறன் மிக அரிதானது என்பதோடு சிக்கலானதும் கூட. அது பெரும்பாலும் அற்புதம், ஆமாம், அற்புதம்.” என்ற சைமன் வீலின் வார்த்தைகளை அர்த்தப்படுத்திய இந்தியாவின் கடைசி அரசியல் தலைமை காந்தி.

காந்தியின் உண்ணாவிரதம், காந்தியுடன் பல முரண்பாடுகள் ஆரம்பமாகியிருந்த நேருவிடமும் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது. நேரு ரகசியமாக உண்ணாவிரதம் இருந்த அரிய செய்தியை இந்த நூலில் குறிப்பிடுகிறார் பட்டாச்சார்ஜி. நேருவின் உண்ணாவிரதம் நாம் அறியாத செய்தி. 

எத்தனை மகத்தான மனங்கள் இருந்த இடத்தில், அத்தனை சீக்கிரத்தில் ஏன் இத்தனை சிறுமைகள் என்று வருந்தாமல் இருப்பது சாத்தியமில்லை.

காந்தி, நவகாளி தொடங்கி டெல்லியில் மூன்று தோட்டாக்களுக்கு இரையாகியது வரை அஹிம்சையின் அஸ்தமனத்தையே அகத்திலும் வெளியிலும் பார்த்தே மறைகிறார். காந்தியின் அஹிம்சைப் போராட்டத்தை மழுங்கடித்த சக்திகள் மீண்டும் 80 ஆண்டுகள் இடைவெளியிலேயே எழுச்சிபெற்றிருக்கும் காலகட்டத்தில், அடையாளம், மத ரீதியான வன்முறைகள், சந்தேகம், அச்சத்தை அடிப்படையாகக் கொண்ட அச்சங்களை மக்களிடம் தூண்டி பெரும்பான்மைவாத அரசியல் இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் நிலையில் இன்று நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளுக்கான காரணிகளையும் இந்த நூல் வழியாகத் தெரிந்துகொள்கிறோம்.

இந்தியாவுக்கு சுதந்திரம் எப்படிக் கிடைத்தது என்று ஆஷிஸ் நந்தி உரைத்ததையும் நாம் பொறுப்போடு ஞாபகத்தில் வைத்திருத்தல் வேண்டும்.

“தெற்காசியாவுக்கு ஒற்றையாக அடையாளம் காணக்கூடிய நிகழ்ச்சியாக இந்திய சுதந்திரம் 1947 இல் கிடைக்கவில்லை. அப்படித்தான் நிறைய தெற்காசியர்கள் நினைவுகூர விரும்புகின்றனர். பெரும் கல்கத்தா கலவரம் தொடங்கி பஞ்சாபில் இனப்படுகொலை வரை நடந்துதான் மிக மிக மெதுவாக, பெரிய வலியை அளித்துதான் பிரிட்டிஷ் இந்தியா கழன்றது.”

ஆஷிஸ் நந்திக்கு பெரும் கல்கத்தா கலவரம் நடக்கும்போது வயது 9. தந்தையுடன் ஒஎம்சிஏ கட்டிடத்தில் வசித்தபடி அந்தச் சம்பவங்களைப் பார்த்த சாட்சியத்தைக் கட்டுரையாக எழுதியுள்ளார் என்பது கூடுதல் தகவல். அதன் தலைப்பு ‘ஒரு பேரரசின் மரணம்’. (https://southasia.ucla.edu/history-politics/independent-india/death-empire-ashis-nandy/)

கோழைகள், சந்தர்ப்பவாதிகள் காந்தியை, காந்தியத்தை சமகாலத்தில் பேசும்போது அது முகமூடியாகத் தெரிந்துவிடுவதும் காந்தி என்ற மகத்தான தீரத்தின் உருவகம் நமக்கு அளித்திருக்கும் புரிதலின் அடிப்படையில்தான்.

அஹிம்சை, சத்தியத்துக்கு முன்னால் வந்தது என்று ராபர்ட்டோ கலாஸ்ஸோ, ‘க’ நாவலில் நம் உபநிடதங்களை மேற்கோள் காட்டிச் சொல்வதையும் நினைவில் கொள்வோம்.

‘இன்று வரை ஏற்பட்டுள்ள துன்பியல் காவியங்களில் எது மகத்தானது? இராமன் கதையா? தருமனா? ஈடிபஸ்ஸா? ஒதெல்லோவா, லியர் அரசனா, டாக்டர் ஃபாஸ்டஸ்ஸா? இல்லை, காந்தியல்லவா? களங்கம் நிறைந்த புறவாழ்க்கையை வெறுத்து ஒதுக்காமல், தன் வரையிலாவது சாதிக்க வேண்டும் என்று பரிசுத்தத்தையே நாடிச் சென்ற தீரன் காந்தி அல்லவா?’

அசோகமித்திரனின் காந்தி சிறுகதையில் விவரிக்கும் சித்திரத்தை பரிபூரணமாக நெருங்கும் அபுனைவு நூல் GANDHI THE END OF NON-VIOLENCE.


(நன்றி: அகழ் இணைய இதழ்)


Comments