ஷங்கர்ராமசுப்ரமணியன்
சித்திரக்கதி பாணியில் மகாபாரதக்
கூத்தின் நிகழ்வுகள் வரையப்பட்ட படங்களுக்கு கவிதைகள் எழுதவேண்டுவம் என்று
நண்பர்கள் பாலாஜியும், காந்தியும் சொன்னார்கள். அந்தக் கவிதைகள் படத்திற்கான விளக்கங்களாகவோ, உரைகளாகவோ இல்லாமல் சமகாலப் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்பது அவர்களது ஆசையாக
இருந்தது. படத்தின்
உள்ளடக்கத்தை ஒட்டியும் ஒட்டாமலும் நவீன கவிதைகளாக அவை இருக்க வேண்டும் என்பது
அவர்களது எதிர்பார்ப்பு. இந்தக்
கவிதைகளின் த்வனியை, மூத்தக் கவிஞர்களான நகுலன், ஞானக்கூத்தன், விக்கிரமாதித்யன்
ஆகியோரின் கவிதைகளிலிருந்து அமைத்துக் கொண்டேன். கவிதையில் நீதி
மற்றும் செய்தி அம்சம் இருக்கக்கூடாது என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் நீதி அம்சம் சில கவிதைகளில் தூக்கலாக
இடம்பெற்றுவிட்டது. 'பொன்மொழிகளும்' விரவிவிட்டிருக்கின்றன. நவீன கவிதை தொடர்பாக நான் கொண்டிருக்கும் எண்ணங்களோடு இந்த அம்சங்கள் சண்டை இடக்கூடியவை. இந்தப்
படங்களிலுள்ள கதாபாத்திரங்களின் நிறமும், உடல்பாவங்களும், கண்களும் அதீத
உணர்வுகளை என்னிடம் எழுப்பின. அது மகாபாரதத்தில் உள்ள அதீதம் தான். அந்த அதீதம் இந்தக் கவிதைகளையும் தீண்டவேண்டும் என்று
ஆசைகொண்டிருந்தேன். இந்தக்
கவிதைகளை நான் எழுதும் போது தொடர்ந்து ஞானக்கூத்தனின் அழிவுப்பாதை கவிதையில்
வரும் 'சொல்லப்பட்டது போல் இல்லை இந்த அழிவுப்பாதை' என்ற தொடர் நினைவில் மேலேறி வந்தபடி இருந்தது.
மகாபாரதம் தொடர்பான நினைவும், இந்தப் படங்களில் உள்ள பாரதக் கூத்து நிகழ்வுகளும், அதை வரைந்தவர்களின்
கதாபாத்திரங்களும், நிறங்களும், தமிழ் புதுக்கவிதை மரபின்
வளமும் , இதை எழுதியவனின் பிரக்ஞையும், போதாமையும் சேர்ந்து வெளிப்படுவதற்கு அனுமதித்த பொம்மைதான் நான்.
ஆடு
மேடை தீரும் வரை
நன்மை தீமையின்
போதமற்று
தன் நிச்சயத்தில்
திளை
பிறனுக்கு
துளிகூட இடம் வைக்காமல்
அகன்று ஆக்கிரமி
மலைகள், நீர்நிலைகள்
எதையும் விட்டுவைக்காதே
வலைகளை நீட்டு
ஏகபோகம் செய்
சுயஅருவருப்பு வேண்டாம்
பசியில்லையெனினும் புசி
புணர்
வலியவன் வாழ்வான்
என்று
வித்தகம் பேசு
0000
செயல் விழுந்தது
செயல் தன் மூச்சை விட்டது
செயல் தன் ஆசை நீத்தது
செயலின் ரத்தம் உறையப்போகிறது
செயலின் பதற்றம் தணிந்தது
தீமையும் நன்மைக்கும் இடையே
செயல் முயக்கம் கொண்டது
மடிந்த செயல் மண்ணில் உரமாகும்
அவன் செயல் அவனை அமரனாக்கியது
அம்மாவுக்கு
முன்னால்
நிர்வாணம் காண்பிக்க
உனக்கு என்ன வெட்கம்...
இலை கொண்டு
பூ கொண்டு
அவளிடம்
மறைக்க முடியக்கூடியதா
பிள்ளை நிர்வாணம்
நீ சிசுவாக வாழைப்பழம் போல
அவளிடம் தானே இருந்தாய்
ஞாபகம் இல்லையா
நீயும் உண்டாயா
அந்த விலக்கப்பட்ட கனியை?
எதிரியை
வெளியிலே
பாவித்துக்கொண்டால்
தெருத்தெருவாய்
ஓடித் துரத்தி
கடைசிவரை
வேணும்
(லலித்கலா அகாதமியில் நடைபெற்று வரும் இன்னர் ஃப்ளோ கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் மீனாட்சி மதனின் ஓவியங்கள் மற்றும் என் கவிதைகளில் சில)
Comments