தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்
(ஈரானைச் சேர்ந்த தத்துவவாதி ராமின் ஜகன்பெக்லூவுடன் அசீஸ் நந்தி நடத்திய
உரையாடல் நூலான Talking India விலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.
அசீஸ் நந்தி 1937 இல் பிறந்தவர். சமூகவியல் படித்து உளவியல் மருத்துவராக பயிற்சி
செய்தவர். அரசியல் உளவியலாளர் என்று தன்னைப் பற்றி கூறுகிறார். மனித இயல்பிலும்,
பொதுவாழ்க்கை தொடர்பாகவும் தனக்கு இருக்கும் ஆழ்ந்த விருப்பத்தை அரசியல்
உளவியலாளர் என்ற பெயரே நியாயம் செய்வதாக கருதுகிறார். காந்தியை மறுநிர்மாணம்
செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர் அசீஸ் நந்தி.
வெவ்வேறு அறிவுமுறைகள் மற்றும் கலாசாரத் தரப்புகள் வெறுப்போ,விலக்கமோ இல்லாமல்
உரையாடுவதை அவர் தொடர்ந்து வலியுறுத்துகிறார். இன்று வெவ்வேறு அடையாளத்
தரப்புகளும், அதன் தர்க்கங்களும் பரஸ்பரம் மூர்க்கமாக மறுப்பதும்,
விலக்குவதுமாகவும், வெறுப்பதாகவும் மாறியுள்ள இன்றைய சூழலில் அசீஸ் நந்தியின்
உரையாடல் இயல்பை நாம் பரிசீலிப்பது அவசியமானது.
வெகுமக்களின் வாழ்க்கை முறை, விழுமியங்கள் மற்றும் நம்பிக்கைகள் மேல்
கொண்டுள்ள ‘உண்மையான’ விருப்பை
வெளிப்படுத்துகிறார் அசீஸ் நந்தி. சிலேட் செப்டம்பர்-நவம்பர் 2012 இதழுக்காக
மொழிபெயர்க்கப்பட்டது. இது முடிவுப்பகுதி)
ஒருவிதத்தில் நவீன பகுத்தறிவின் சடங்குகள், மரபை அழித்துவிட்டன. இருப்பினும்
மரபு, நவீன வாழ்க்கையின் ஒரு பகுதியாக கிராமப்புறங்களிலும் அறிவுஜீவிகளின்
சொல்லாடல்களிலும் நுண்மையாக மறுவருகை புரிவதைப் பார்க்கிறோம். நீங்கள் அப்படி
நினைக்கிறீர்களா?
நானும் அப்படியே நினைக்கிறேன். ஆனால் கிராமங்களில் அல்ல, நகரங்களில் தான் மதச்சார்பின்மை
அதிகம் புலப்படுகிறது. இதை இரண்டு அல்லது மூன்று மட்டங்களில் பரிசீலிக்கலாம்.
பகுத்தறிவு, மனித வாழ்வு முழுமையையும் பகுத்தறிவு பொறுப்பில் எடுக்கமுடியாது
என்பதால் மரபு மீண்டும் மேலெழுகிறது. பகுத்தறிவு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து
தோற்கிறது. காரண-காரிய அறிவால் மட்டும் வாழ நினைக்கும் குறிக்கோள் என்பது
போலியானது. 19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவால் ஊக்குவிக்கப்பட்ட நோய்க்கூறு என்று அதை
வகைப்படுத்தலாம். மக்கள் தங்கள் உணர்வுகள், ஆசாபாசங்கள் மற்றும் உள்ளுணர்வுகளால்
வாழ்கிறார்கள். பகுத்தறிவுரீதியாக கிறிஸ்துமஸ் ஒரு பண்டிகை மட்டுமே என்றும் அதற்கு
மதரீதியான முக்கியத்துவம் எதுவும் இல்லை என்றும் அவர்கள் உணரலாம். ஆனாலும்
அவர்களது மனதின் ஒரு மூலையில், கிறிஸ்துமஸ் குறித்த பழைய ஞாபகங்கள் உறுதியாக
இருக்கும். இதனாலேயே, மதப்பிடிப்பு இல்லாத கிறிஸ்தவர்கள் கூட தற்போது அந்தப்
பண்டிகை, வெறுமனே நுகர்வுக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டதற்கு
வருத்தப்படுகின்றனர். அந்தப் பண்டிகை வெறுமனே சந்தை நிகழ்வாகப் போய்விடக்கூடாது
என்று கருதுகின்றனர். முழுமனதோடு இல்லாவிடினும் அவர்கள் கிறிஸ்துமசின் ஆதி
உத்வேகத்துக்கு புத்துயிர் கொடுக்க முயற்சிக்கின்றனர். அப்படியான முறையில் மரபு
மீண்டும் வருகிறது.
இரண்டாவது வகையில் பார்க்கப்போனால் மரபுகள், இளங்கலை மாணவர்களுக்கான எளிய
பாடப்புத்தகங்கள் போல வாழ்க்கைக்கான
குறுக்கு வழிகாட்டியாக உள்ளன. அத்துடன்
எல்லாரும் வாழ்க்கையின் அனைத்து தளங்களையும் கற்றறிந்து, முழுமையான தர்க்க
அறிவுடன், பகுத்தறிவுரீதியாக இருப்பது சாத்தியம் அல்ல. அவர்கள் சில
பிராந்தியங்களில் வேரோடிய எதிர்வினைகளுக்கும், உள்ளுணர்வுகளுக்கும், உடனடித்
தீர்மானங்களுக்கும் அவர்கள் ஆட்பட வேண்டும். மரபு,
வார்படக்கருத்துருவங்கள்(ஸ்டீரியோடைப்ஸ்) வழியாகவே நுழையும். உதாரணத்திற்கு
நமக்குத் தெரியவே தெரியாத சமூகக்குழுவிலிருந்து வரும் அந்நியரைச் சந்திக்கும் போது
வார்ப்படக் கருத்துருவங்கள் கொண்டே சந்திப்பதை உதாரணமாகச் சொல்லலாம்.
வார்படக் கருத்துருவங்கள் சில சமயங்களில் கையடக்கமான நாட்டார் சமூகவியலாகவோ,
தொழில்ரீதியான தன்மையை துறந்த கலாசார மானுடவியலாகவோ பயன்படலாம். அதுபோலவே மரபுகள்
அன்றாட வாழ்வில் எளிமையான குடியானவனின் வாழ்க்கைத் தத்துவமாக நுழைகிறது. நீங்கள்
அறிவுப்பூர்வமாக எங்கே முழுமையாக ஒருங்கிணைக்கப்படவில்லையோ அங்கே அது
எட்டிப்பார்க்கிறது. நீங்கள் இயற்பியல் வல்லுனராக இருந்தால் நீங்கள் இயற்பியல்
மரபுகளின்படி நடப்பீர்கள். வாழ்க்கையின் பிற பகுதிகளில் சமூக மரபுகளுக்குக்
கட்டுப்படுவீர்கள். அது முரண்பட்டதல்ல. குவாண்டம் விசையியல் ஐன்ஸ்டீனுக்கு
அசௌகரியம் தந்தது. அதனால், பகடைக்காய்களை கடவுள் உருட்டவில்லை என்று அவர்
சொல்வதற்கு செவ்வியல் இயற்பியலை நாடினார். ஏனெனில் அது அவருக்குப் புதிய
பிராந்தியமாக இருந்தது. அவரால்
உணர்வுப்பூர்வமாக அதைப் பற்றிப்பிடிக்க முடியவில்லை. காரண காரிய அறிவை
திருப்திப்படுத்தக்கூடிய வழிகாட்டியாகவும் அவர் கருதவில்லை. அதனால் அவர் மீண்டும்
மரபில் விழுந்தார். பலசமயங்களில் இதுதான் மரபுகளின் பலமான ஆதாரமாக உள்ளது.
ஆயத்தமான, முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட்ட, முழுமையாக சிந்திக்கப்பட்ட, பட்டறிவு
சார்ந்த எதிர்வினைகளைச் செய்யமுடியாத பரந்தபகுதிகள் வாழ்க்கையில் உள்ளன. அங்கே
நீங்கள் மரபுகளில் விழுந்துதான் ஆகவேண்டும். அப்படியான நிலையில், மரபு உங்கள் முன்
உள்ள விருப்பத் தேர்வுகளுக்கு ஒரு
வரம்பைக் கட்டுகிறது. மரபை ஒரு எதிர்ப்பு வடிவமாகவோ அல்லது மறுப்பின்
அடிப்படையாகப் பார்க்கும் எனது தனிப்பட்ட புரிதலை நான் ஏற்கனவே சொல்லியிருப்பதற்கு
நான் மேற்சொன்னது கூடுதலாக வலுசேர்ப்பதாகும்.
ஏ.கே.குமாரசாமி அல்லது செயத் ஹோசீன் நாசர் போன்றவர்களின் மரபு தொடர்பான
ஆன்மீகவாதத்துக்கும் உங்களது எழுத்துகள் மற்றும் சமூகச் செயல்பாடுகளுக்கும்
மரபுவாதம் தொடர்பாக நீங்கள் எங்கே வித்தியாசப்படுகிறீர்கள்?
உண்மையில் அந்த சிந்தனைப் பள்ளி மேல் நிறைய மரியாதை உள்ளது. ஆனால் மரபைப்
பார்க்கும் அந்த குறிப்பிட்ட வழியிலிருந்து வேண்டுமென்றே என்னைத் தொடர்ந்து
தொலைவுபடுத்திக் கொள்ள முயன்றும் வருகிறேன். மரபு தொடர்பான எனது கருத்து என்பது
அன்றாட வாழ்க்கையையும், சாதாரண மனிதனையும் கொண்டாடுவதுதான். அதன்வழியாகவே ஏனெனில்
சாதாரண மக்களின் வாழ்வாதார அமைப்புகள் மற்றும் வாழ்க்கை முறையின் மீது தொடர்ந்து
தாக்குதல் நடத்தும் நவீனத்துவக் கருத்தாக்கத்தையும் விமர்சிக்கிறேன். இந்த
ரீதியில் மரபு சார்ந்த கருத்துக்கு துல்லியமான அரசியல் வாய்ப்பு உள்ளது. அந்த
அரசியல் வாய்ப்பு எனக்கு மிகவும் முக்கியமானது.
சாதாரண மக்கள் தங்கள் விருப்பத் தேர்வுகளை உருவாக்குகிறார்கள் எனில் அவர்கள்
போதிய அறிவற்றவர்களாக இருக்கிறார்கள் என்றோ, மூடநம்பிக்கை கொண்டு, பகுத்தறிவற்று இருக்கிறார்கள் என்றோ அர்த்தம்
அல்ல என்பதே மரபுவாதமாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் பல நூற்றாண்டுகளாகவும்,
தலைமுறைகளாகவும் சேகரிக்கப்பட்ட ஞானம் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் தங்கள்
தேர்வுகளை உருவாக்குகிறார்கள். இந்திய மரபு பற்றி நான் பேசும்போது, இந்திய
நேற்றின் 3000 ஆண்டுகள் என் மனதில் உள்ளது. அது சாதாரண இந்தியர்களின் ஆளுமையாகவும்
ஆசாபாசங்களாகவும் உள்ளது. சாதாரண இந்தியர்களின் ஆசாபாசங்கள் மற்றும் ஆளுமையையை
நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவற்றுக்கு மரியாதை அளிக்கக்
கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த அனுபவங்கள், நூற்றாண்டுகளாகச் சேகரமான,
வாழ்வின் மீது பரிசோதிக்கப்பட்ட கூட்டு அனுபவங்கள்.
மரபு தொடர்பான எனது அணுகுமுறையின் மற்றொரு அம்சத்தை நான் இந்த உரையாடலில்
இதுவரை தொடவேயில்லை. இந்த மரபுகள் எல்லா இடங்களிலும் தேக்கத்தில் இருப்பதை நான்
அறிந்தே இருக்கிறேன். வாழ்க்கை என்பது மேலதிகமாக தொழில்தன்மை வாய்ந்ததாக உருமாறி
வருகிறது. அதன் களங்கள் மேலும் மேலும் நிபுணர்களின் மேலாண்மைக்குள்
வந்துகொண்டிருக்கின்றன. இப்படியான சூழ்நிலையில் அதிகாரமற்றதிலிருந்து தனது
சக்தியைப் பெற்றுக்கொள்ளும் எந்த எதிர்ப்பும், மரபுகளுடன் உரையாடக் கற்றுக்கொண்டே
ஆகவேண்டும். மகத்தான படைப்பெழுத்தாளர்கள் இதை புரிந்துகொண்டே இருக்கின்றனர்.
அப்படியான ஒரு எதிர்ப்பு வடிவத்தைப் பார்த்து அச்சம் கொள்வது கல்வித்துறை
அதிகாரத்துவமாகும். தீவிர எதிர்ப்பின் வடிவத்தை வரையறுக்கும் தங்கள் உரிமை
சுருக்கப்பட்டு விடுமோ என்று அவர்கள் பயப்படுகின்றனர். மறுப்பின் புதிய மொழியை
அவர்களால் புரிந்துகொள்ளவோ கட்டுப்படுத்தவோ இயலாது. இதுதான் பிராமணிய அச்சம்.
தொடர்ச்சி என்பது இருப்பதாலேயே தான் நாம் மரபுக்கு மரியாதை அளிக்கிறோமா?
அதற்கு தொடர்ச்சி இருப்பதால் மரியாதை அளிக்க வேண்டியதில்லை. ஆனால் தலைமுறை,
தலைமுறையாக வந்த ஞானத்துடன் தோய்ந்திருக்கும் மொழியைப் போன்றது மரபு. அப்படி
இருப்பதாலேயே எப்போதும் சரியானதாக இருக்கும் என்றும் அர்த்தம் அல்ல. அதை நாம்
மறுக்கும் நிலையில் கூட, தீவிரமாக அதனுடன் உரையாட வேண்டியிருக்கிறது. நீங்கள்
தலையீடு செய்யவோ, மாற்றத்தை விழையவோ, ஜனநாயகப்பூர்வமாக புதிய ஒன்றை
அறிமுகப்படுத்தவோ நினைத்தால், மக்கள் மீது போலீஸ் முறைகளைப் பயன்படுத்தி உங்கள்
கருத்துகளைத் திணிக்கக் கூடாது என்று எண்ணினால் அவர்களது வாழ்வியல் பரப்புக்குள்
நீங்கள் நுழைந்தே ஆகவேண்டும்.
மரபே ஒடுக்குமுறை இயல்புள்ளதாக மாறும்போது என்ன நடக்கிறது?
மரபான வடிவத்தில் இருப்பினும் சரி, அப்படி இல்லாமல் இருப்பினும்,
ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவே செய்யவேண்டும். ஆனால் அப்படியான போராட்டத்துக்கு
நீங்கள் மக்களைத் திரட்ட வேண்டுமெனில் அது வேறுவகையான ஆட்டநெறிகளைக்
கோருகிறது. நாடாளுமன்றம், பாலங்கள், ரயில்
தண்டவாளங்கள் போன்றவற்றின் அடியில் வெடிகுண்டுகள் வைத்து நவீன அரசமைப்பையும்,
முதலாளித்துவத்தையும் நசுக்கிவிடலாம் என்று எண்ணுபவராக நீங்கள் இருப்பின்,
உங்களுக்கு மரபுகள் தேவையே இல்லை. மக்களின் ஒத்துழைப்பு மற்றும் ஊக்கமான
பங்களிப்புடன் ஒரு ஒடுக்குமுறை அமைப்பை அகற்றுவதைப் பற்றி நீங்கள் நினைத்தால்,
அவர்களது மனதைப் புரிந்துகொள்ளவும், அவர்கள் சிந்திக்கும் வழிமுறைகளைத்
தெரிந்துகொள்ளவும், அவர்களது நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் பெறுவதற்கும்
அவர்களது மரபுகளுக்குள் நுழைந்தே ஆகவேண்டும். தங்கள் சொந்த நலன்களைக் காரண காரியப்பூர்வமாக
கணக்கிட்டு மக்கள் கலகத்தில் இறங்குவதில்லை. அதனால் தான் நீங்கள் விரும்பினாலும்,
இல்லாவிட்டாலும் அவர்களது மரபுக்குள் நுழைய நீங்கள் கற்றுக்கொள்ள
வேண்டியிருக்கிறது. அவர்கள் பேசும் மொழியைப் பேச நீங்கள் அந்த மொழியைக்
கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள் மொழியைக் கற்றுக்கொள்ள இன்னமும் நீங்கள்
தீர்மானிக்கவில்லையெனில் உங்களது இலக்குகளை நவீன ஆயுதங்கள் கொண்டோ, அரசின் கொடும்
அடக்குமுறை கொண்டோ அடைந்துவிடலாம் என்றோ உங்களது நம்பிக்கை இருக்கலாம். ஆனால்
அவர்களது கலாசார மொழிவழக்கை நீங்கள் பேசாதவரை அவர்களது ஒத்துழைப்பை நீங்கள்
ஒருபோதும் பெறவே போவதில்லை. ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அதுதான்.
(முற்றும்)
(முற்றும்)
Comments