தமிழில்: ஷங்கர்
(சினிமா
இயக்குநர் மற்றும் நண்பருமான தி.ஜா.பாண்டியராஜன் நகுலன் குறித்து எடுத்த விரைவில்
வெளிவர இருக்கும் ‘நினைவுப்பாதையில் மஞ்சள் பூனை’ ஆவணப்படத்தில், நகுலனின் ஆளுமை மற்றும் படைப்புகள் குறித்து
மலையாளக் கவிஞர் அய்யப்ப பணிக்கர் ஆங்கிலத்தில் பேசியது. நகுலனின் எழுத்துக்கள் பற்றி அவர் பேசிய சூழல் இப்போதும் மாறவில்லை என்ற நிலையில்...)
திரு.டி.கே.துரைசாமி, எனக்கு 45 ஆண்டுகளாக நண்பர். நான் அவரை முதலில்
சந்தித்தபோது நகுலன் என்ற பெயரில் அறியப்படவில்லை. அவர் முதலில் ஆங்கிலத்தில்தான் அதிகமாக
எழுதி வந்தார். மும்பையிலிருந்து வெளிவந்த இதழ் அது என்று நினைக்கிறேன். தாட் என்ற
இதழில் அவர் தொடர்ந்து கவிதைகளை எழுதிவந்தார். அவரது ஆங்கில எழுத்துக்களை பிற
இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் பெரிதாகப் பொருட்படுத்தாதது ஏன் என்று எனக்குத்
தெரியவில்லை. நான் அப்போதே அவரது ஆங்கில எழுத்துகள் குறித்து பார்த்தசாரதி
போன்றவர்களுடன் பேசியுள்ளேன். ஆனால் அதற்கு போதிய கவனம் கிடைக்கவில்லை. அவரது
ஆங்கிலக் கவிதைகள் இப்போது தொகுக்கப்பட்டு புத்தகவடிவில் வந்தால் அதைப் புதிய
வெளிச்சத்தில் வாசிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படலாம்.
பிறகு அவர் தமிழில் எழுதத் தொடங்கினார். அதன் பின்னர் அவருக்கு நிச்சயமாக
அங்கீகாரம் கிடைத்ததென்று கருதுகிறேன். அவர் இப்போது தமிழில் சிறந்த
எழுத்தாளர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
நான் அவரை 1960 இல் முதல்முறையாகச் சந்தித்தேன். குருக்ஷேத்திரம் என்னும்
நெடுங்கவிதை வெளியான பிறகு அவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். கோட்டயத்திலிருந்து
வந்த பத்திரிக்கை ஒன்றில் அது வெளியாகியிருந்தது. அந்தக் கவிதையை மொழிபெயர்க்க
விரும்புவதாக கூறினார். நான் உடனடியாக சம்மதித்தேன். அந்தக் கவிதை அப்போது
மலையாளத்தில் கூட பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை. அதற்குப் பிறகு அவர்தான்
குருக்ஷேத்திரத்தை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார். தற்போதும் அவரது ஆங்கில
மொழிபெயர்ப்பு தான், பிற ஐரோப்பிய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பதற்கு ஆதாரமாகப்
பயன்படுகிறது. இப்படியாக அவர் எனக்கு சிறந்த நண்பராகவும், நல்ல புரிதல் உணர்வு
கொண்ட மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கிறார்.
அவரது கவிதைகளை எழுத்து பத்திரிக்கை பிரசுரிக்கத் தொடங்கியபோது, நாங்கள்
50களிலும்,60களின் ஆரம்பத்திலும் எழுதத் தொடங்கியிருந்த கவிதை வடிவத்திற்கு ஒருவகை
ஏற்பு உருவாகத் தொடங்கியது. அவரது கவிதைகள் என் மீதும் எனது எழுத்துகள் மீதும் வலுவான
தாக்கம் செலுத்தியிருக்கின்றன. அவர் நிச்சயமாக ஆங்கிலத்திலும் ஏற்பையும்,
அங்கீகாரத்தையும் மெதுவாகவாவது பெற்றிருக்க வேண்டும். பெங்குயின் புக் ஆப்
இந்தியன் பொயட்ரி இன் இங்கிலீஷ் போயம்ஸ் என்ற நூலை அதின் ஜஸ்வால் தொகுத்தபோது
நகுலன் மொழிபெயர்த்த ஷண்முக சுப்பையாவின் கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால்
நகுலனின் கவிதைக்கு இடம் கிடைக்கவில்லை. இப்படியாக ஆங்கில உலகில் ஒருவகை அநீதி அவரது
கவிதைகளை மதிப்பிடுவதில் நடந்தது. அவரது கவிதைகள் முதலில் வெளியானபோது நம்மால்
மதிப்பிட முடியவில்லை. வாசகர்களால் தாமதமாக வாசிக்கப்பட்டு காலம் தாழ்த்தி
ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான சிறந்த உதாரணம் நகுலன். அவர் அந்த தடைகளைக் கடந்தார்.
நான் அவரது தமிழ்க் கவிதைகளை 1960களின் ஆரம்பத்திலேயே கேட்டுள்ளேன். நகுலனின் குரல் தனித்துவமானது.
ஒரு அந்தரங்கமான, வாக்குமூலத்தன்மை வாய்ந்த கவிதைகள் அவருடையது. அவரது அந்தரங்க உலகம் சார்ந்து இருக்கும். அப்படியான ஒரு உலகம் அப்போது இந்திய ஆங்கில எழுத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. திருவனந்தபுரம் இந்திய ஆங்கில எழுத்துலகில் அதிகம் இடம்பெறவும் இல்லை. திருவனந்தபுரத்தில் இருந்து ஆங்கிலத்தில் எழுதியவர்களின் முக்கியமானவர் நகுலன்தான். அவர் படிப்படியாக
ஆங்கிலத்தில் எழுதுவதைக் குறைத்துக் கொண்டு தமிழில் கூடுதல் கவனம் செலுத்தினார்.
கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் என்று தனது படைப்பாற்றல் முழுவதையும் தமிழில்
எழுதுவதிலேயே செலவிட்டார்.
வாழ்க்கை தொடர்பாகவும், கவிதை தொடர்பாகவும் அவருக்கு இருந்த அணுகுமுறையும்,
கவிதை குறித்த அணுகுமுறையும் மிகவும் அசிரத்தையானது, கவனமற்றது போன்று தோற்றம்
கொடுப்பது. அப்படித் தோன்றுமாறு தான் அவர் எழுதினார். சம்பிரதாயமாக பல
எழுத்தாளர்களையும் போல கம்பீரமான, உறுதியான குரலில் அவர் படைப்புகள் பேசுவதில்லை.
அவர் தன்னைப் பற்றி கூர்ந்த விமர்சனம் கொண்டவர்.
எழுத்தாளர்களின் மத்தியில் அந்தக் குணம் அபூர்வமானது. பெரும்பாலான
எழுத்தாளர்கள் மற்றவர்கள் பற்றி கூர்ந்த விமர்சனத்துடன் இருப்பார்கள். ஆனால்
அவர்களைப் பற்றி அவர்களுக்கு எந்த சுயவிமர்சனமும் இருக்காது. அப்படியான விமர்சனம்
இல்லையெனில் நிழல்கள் போன்ற நாவலை எழுதமுடியாது.
அசிரத்தையான எழுத்து போன்ற தோற்றத்தில் அவர் சிரத்தையுடன் தனது அனுபவங்களை வித்தியாசமான
வடிவங்களில் கவிதைகளாக வடித்தவர் அவர். தமிழ்நாட்டில் கல்கி மற்றும் குமுதம்
படித்து வளர்ந்தவர்களுக்கு அவரைப் படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கு மேலும் காலம்
எடுக்கும். தமிழ்நாட்டில் நகுலன் எழுத்துகளுக்கு பரவலான வாசிப்புத்தளம் இருக்கிறதா
என்று எனக்கு இன்னும் சந்தேகமாகவே உள்ளது. ஆனால் இன்னமும் அவர் வித்தியாசமான
எழுத்தாளராகவே இருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். விமர்சகர்களும், அறிஞர்களும்
அவரை ஏற்றுக்கொண்டாலும் அவர் எப்போதும் தனியாகவேதான் இருப்பார். பிறரின் புகழ்
அபிப்ராயங்களில் மின்னாமல், எந்த சமயத்திலும் விலகிநின்று தன்னை சுயவிமர்சனம்
செய்துகொண்டு தன்னை எப்படி சிதறடித்துக் கொள்வது என்பது அவருக்குத் தெரியும். பாராட்டுகளிலிருந்தும்,
கரகோஷங்களிலிருந்தும் விலகிப் போவது எப்படி என்று அவர் அறிவார் . அந்தக் குணம்
வேறு எந்த இந்திய எழுத்தாளர்களுக்கும் வாய்க்காதது என்று நிச்சயமாக நம்புகிறேன்.
வருங்காலத்தில் அவரது படைப்புகள் ஆங்கிலத்தில் அல்லது பிற மேலை மொழிகளில்
மொழிபெயர்க்கப்படும் என்பதில் எனக்கு உறுதி உள்ளது. அப்போது அவருக்குத் தற்போதுள்ளதை விட கூடுதலான
புகழும் அங்கீகாரமும் கிடைக்கும்.
அவருக்கேயுரிய தனித்திணை அவரது எழுத்து. நகுலன் வெறுமனே கதைகளையோ,
சம்பவங்களையோ சொல்வதில்லை. தமிழில் ஆதிக்கம் செலுத்திய போக்கை அவர் பின்பற்றவில்லை.
அதனால் தான் தற்போதும் அவர் சவாலான
எழுத்தாளராக இருக்கிறார். எதிர்காலத்திற்குரிய எழுத்தாளர் அவர்.
இன்னும் ஒரே ஒரு விஷயம்தான் சொல்லவேண்டும். எந்த மொழியில் அவர் முதலில்
அங்கீகாரம் பெறுவதற்குத் தவறினாரோ, அதற்குக் காரணமும் அவரது எழுத்தின் தனித்துவம்தான்.
அவரது எழுத்துகள் மந்தையோடு செல்லக்கூடியதாக இல்லாமல் தனித்துவத்துடன் இருந்தன.
அதற்காகத் தான் அவர் நகுலன் என்ற பெயரையும் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். தற்போது
நகுலன் என்ற பெயர் அனைவரிடமும் அங்கீகாரம் பெற்ற பெயராக மாறியிருக்கிறது. நகுலன்
என்ற பெயர்தான் தனக்கு துரைஸ்வாமி என்ற பெயரை விடப் பொருத்தமானது என்று அவர்தான்
முதலில் உணர்ந்திருக்க வேண்டும். நகுலன், தமிழில் மாபெரும் கவிஞராகவும்,
எழுத்தாளராகவும் நினைவுகூரப்படுவார்.
டி.கே.துரைசாமி, திருவனந்தபுரத்தில் உள்ள மர் இவார்னியஸ் கல்லூரியில் ஆங்கிலம்
கற்பித்தார். அவர் சம்பிரதாயமான விரிவுரையாளர்களைப் போலன்றி மாணவர்களிடம் தனிவகையான
ஈர்ப்பை தன்பாணியில் உருவாக்கியிருந்தார். ஆனால் அவருக்கு கல்லூரி நிர்வாகத்திடம்
இருந்து சரியான முறையில் மரியாதை கிடைக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். அவரை
நன்றியோடு நினைவுகூரக்கூடிய, தொடர்ந்து வந்து சந்தித்துச் செல்லகூடிய சில
மாணவர்கள் இருந்தனர். சில மாணவர்களை ஆங்கிலத்தில் எழுத அவர் ஊக்குவித்தார். அவரின்
தாக்கமும் அந்த இளம் எழுத்தாளர்களிடம் இருந்தது. கல்வித்துறை சார்ந்த ஆளுமையாக
அவர் இல்லை. தனது எழுத்துகளில் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார்.
Comments