Skip to main content

நொறுங்கிக் கொண்டேயிருக்கும் காதலன்- அம்பிகாபதி
ஷங்கர்ராமசுப்ரமணியன்

பஞ்சாபில் நிலவும் துயரக் காதல் கதையான ஹீர்-ராஞ்சாவை, காசியின் களத்தில் வைத்து தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கதைதான் ராஞ்சனா. அதுதான் தமிழில், இன்னொரு காவியக் கதாபாத்திரத்தின் பெயரோடு அம்பிகாபதியாக வெளியாகியுள்ளது.
இந்தியில் ராஞ்சனா வெளியாகி நல்ல வர்த்தக வெற்றியையும், தனுஷூக்கு நல்லபெயரையும் பெற்றுத் தந்துள்ளது. ராஞ்சனா ஒருவகையில் இந்தி சினிமா உலகையும், ஆங்கிலப் பத்திரிக்கையுலகையும் ஒருவகை ‘அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதையும் அந்த எழுத்துகளின் வழியில் புரிந்துகொள்ள முடிகிறது. இன்னொரு வகையிலும் இந்தப் படம் முக்கியத்துவம் வாய்ந்தது. காதல் தவிர வேறெந்த ஈடுபாடுகளும் லட்சியமும் இல்லாமல் தீவிரமான வன்முறையால், வன்முறை வழி அன்பால் காதலியை வென்றெடுக்க முயலும், அதற்காக எல்லா அழிவுகளையும், குரூரங்களையும், நிகழ்த்தும் தமிழ் சினிமாவுக்குப் பரிச்சயமான நாயகன் இந்திய சினிமாவை நோக்கி நகர்ந்திருக்கிறான்.
அந்த நாயகனை முழுமையாக்கியவர் இயக்குனர் செல்வராகவன். அந்த நாயகன் சரியான முறையில் பொருந்தக்கூடிய  உருவாக நடிகர் தனுஷ்; ஒரே கதாபாத்திரத்தை தமிழில் பல படங்களில் ஏற்று மேம்படுத்திக் கொண்டே இருந்து வருபவர். இப்போது அதன் தொடர்ச்சியாக,  தமிழ் பையனாகவே கதையில் பொருத்தமாக வரும்படி, அறிமுகம் ஆகியிருக்கும் இடம் இந்தி சினிமா. அந்த சினிமாவின் கதை நடக்கும் நிலவெளி புனித காசி.
பாலா மற்றும் அமீரின் வன்முறை, இந்திப்பட இயக்குனர்களைப் பாதித்தது போலவே, தமிழ் சினிமாவில் இருக்கும் அதீத காதலும் தற்போது இந்தி சினிமாவை பாதித்துள்ளது. அவர்களுக்கு இது ஒரு பிரத்யேக அடர் வண்ணமாகத் தோன்றியிருக்கும்.
செல்வராகவன் திரைப்படங்களில் இருக்கும் இருள்தன்மை மற்றும் அவற்றின் வசீகரம் குறித்து நான் காட்சிப்பிழையில் ஏற்கனவே எழுதிய கட்டுரை ஒன்றில் அவரது நாயக, நாயகிகளை கல்லறை மீது பூக்கும் பூக்கள் என்று கூறியிருப்பேன்.
மரணம் காதல் கதைகளுக்கு காவியச்சாயலை வழங்குகிறது.    அன்பு, உறவுகள், மதிப்பீடுகள் அனைத்தும் நிச்சயமற்றுப் போன உலகில் அகால மரணம் மூலம் செல்வராகவன் தனது கதாபாத்திரங்களுக்கு நிலைத்த நினைவையும் தர ஆசைப்படுபவராக இருக்கிறார்
அம்பிகாபதியின் நாயகன் குந்தன் தனது அந்தஸ்து, படிப்பு, பின்னணி சார்ந்து  அவன் சிறுவயதிலிருந்தே காதலித்து வரும் சோயாவினுடைய அந்தஸ்துக்கு மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளவன். குந்தன் தனது அதீத காதல், அதுதொடர்பான அர்ப்பணிப்பு வழியாகவே சோயாவின் அந்தஸ்தை ஈடுசெய்வதற்கு முயன்றுகொண்டே இருக்கிறான். பப்பி லவ் என்று சொல்லப்படும் வானவில் போலத் தோன்றி மறைந்த ஒரு சிறார்காதல் மட்டுமே குந்தனது காதலுக்கு ஒரே அடிப்படை. அந்த சிறார் காதலே, சோயாவை பெற்றோரிடமிருந்து பிரித்து ஆக்ராவுக்கு பெரியம்மா வீட்டுக்குத் துரத்தி விடுகிறது.
அவள் கல்லூரிப் படிப்பை முடித்து மீண்டும் காசிக்குத் திரும்பும்போது, அவளுக்கு பால்யகால காதலனான குந்தன் நினைவிலேயே இல்லை. குந்தன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதும், அது அறியாப்பருவத்துக் காதல் என்ற முதிர்ச்சியை அடைந்துவிட்ட அவள் அவனை உபயோகத்துக்குரிய ஒரு நண்பனாகவே பாவிக்கிறாள் . ஆனால் குந்தன் அவளைத் துரத்துகிறான். தன்னையும் பலவிதமாக சித்திரவதை செய்து, அவளையும் வதைக்கிறான். தன்னையே நொறுக்கி அழித்து, சோயாவின் வாழ்வையும் தன் காதலின் அதீதத்தால் தாறுமாறாக சிதைக்கிறான். கடைசியில் தனது நிறைவேறாத காதலை அமர காதலாக்க மரணத்தைத் தானாகவே தேர்வுசெய்கிறான்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இறக்கும் நிலையிலும், அடுத்த ஜென்மத்திலும் அதே குந்தனாகப் பிறந்து மீண்டும் சோயாவைக் காதலிப்பேன் என்று சங்கல்பம் எடுக்கிறான். காசி நகரின் ஒரு சந்தின் வழியாக வாலிபன் குந்தன் விடைபெற்று வெளியேறுகையில், சிறுவன் குந்தன் மீண்டும் காசிக்குள் நுழைவது போன்ற காட்சியுடன் படம் முடிகிறது. அப்போதே நமது வயிற்றில் பீதி படர்கிறது. ஏனெனில் சோயா இன்னும் உயிருடன் இருக்கிறாள்.
தமிழில் சிறுகோட்டுப் பெரும்பழம் என்று குறுந்தொகையிலிருந்து, பக்தி இலக்கியங்கள், மௌனி கதைகள் வரை காதல் என்பது தாங்கமுடியாத ஒரு உணர்வுநிலையாக தீராமல் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் கதைப்பொருள் தான். மௌனி, தன் கதைகளில் உடல் உறவு என்ற எல்லையைத் தாண்டிய காதல் ஈர்ப்பின் தனிப்பிரபஞ்சத்தில் மரணம், ஜோடிகளில் யாராவது ஒருவருக்கு நேர்ந்துவிடுகிறது. அதன் பின்னர் தனித்திருக்கும் காதலருக்கு ஏற்படும் துக்கவுணர்வை, மானுடத்தின் என்றைக்குமான பிரிவுநிலையாக மாற்றிவிடுவார் மௌனி.
மார்க்வெஸின்ன் லவ் இன் த டைம் ஆப் காலராவிலும், சிறார் காதல் மரணத்தின் தீவிரத்துடன் பேசப்படுகிறது. அந்த நாவலில் வரும் காதலன் குறித்து வர்ணிக்கையில்,அவன் அசிங்கமாகவும்,சோகமாகவும் இருந்தான். ஆனால் அவன் காதலால் நிரம்பியிருந்தான்என்று கூறுகிறார்.
வாய்மொழி இலக்கியங்களிலும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் காதல் துயரக்கதைகளின் செல்வாக்கு இருப்பதற்கு ஹீர்-ராஞ்சா கதையே ஒரு உதாரணமாக இருக்கிறது. ஹீர்-ராஞ்சா காதல் கதையின் முந்தைய வடிவம் சுபமான முடிவுள்ளது என்றும், தற்போது பிரபலமாக உள்ள வாரிஸ் ஷாவின் வடிவமே துயர முடிவுடையது என்றும் கூறப்படுகிறது. நிறைவேறாத காதலை, கடவுளை நோக்கிய தீராத தேடலின் வடிவில் அவர் ஹீர்-ராஞ்சாவை மாற்றுகிறார். அந்த துயரமுடிவையுடைய வடிவமே வெகுஜனங்களிடையே வரவேற்பைப் பெற்ற வடிவமாகவும் உள்ளது.
ஒருவகையில் குற்றச் செயலுக்கு ஒப்பான அதீதத்தையும், புனிதத்தையும், மூடநம்பிக்கையையும், அ-தர்க்கத்தையும் இன்னும் காதல் மட்டுமே இந்த உலகத்தில் வைத்திருக்கிறது போலும். அதனால்தான் அம்பிகாபதி படத்தின் கதை குற்றமும், புனிதமும் சேர்ந்து முயங்கும் ஊரான காசியில் வைத்துச் சொல்லப்படுகிறது.
அம்பிகாபதியின் குந்தன் தன் காதல் வழியாக பேதங்களை இல்லாமல் ஆக்க முயல்கிறான். காதலி சோயா, பேதங்கள் எப்போதும் இருக்கும் என்பதில் நம்பிக்கையுடையவளாக இருக்கிறாள். பேதங்கள் உண்டு என்ற எதார்த்தத்தால் குந்தன் வீழ்த்தப்படும் போது, அவன் மரணம் வாயிலாகத் தப்பிவிட முயல்கிறான்.
ஒரு வகையில் தமிழ் சினிமா உருவாக்கிய காதல் தொடர்பான கற்பிதங்கள், தமிழ்வாழ்வின் வெளியில் உள்ள எதார்த்தத்தையும் குறுக்குமறுக்காக பிரதிபலிப்பதே. தமிழ் சமூக உடற்கூறில் காதல் எந்த இடத்தில் பராமரிக்கப்படுகிறது, எப்படி பராமரிக்கப்படுகிறது என்பதை பகுப்பாய்வு செய்வதற்கு, அதை வெறும் கற்பிதமாகத்தான் தமிழ் சமூகம் பராமரிக்கிறது என்ற புரிதல் போதாது.
சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய இளவரசன் மரணத்தை அடுத்து, அகம் புறம் சமூகநீதி இதழால், காதலும் சாதியும் என்ற கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்பட்டது. அதில் பேசிய பத்திரிக்கையாளர் ஞாநி அவர்கள், தமிழ் சினிமாக்களில் அதிகம் காதல் இருப்பதற்கு, தமிழ் சமூகத்தில் காதலே இல்லாததே காரணம் என்று பேசினார். காதலை கற்பனைப் புனைவாக ஹாலிவுட்டின் சயன்ஸ் பிக்சன் படங்களைப் போல தமிழ் சமூகம் திரைப்படங்களில் பார்த்து அனுபவிக்கிறது என்றும் கூறினார்.  அவர் அதைச் சொல்லும்போது, அருமையானதும் தர்க்கப்பூர்வமானதுமான ஒரு  கண்டுபிடிப்பை நிகழ்த்திவிட்டார் என்றே தோன்றியது.
ஆனால், அத்தனை எளிய தர்க்கத்தின் மூலம் காதல் தொடர்பாக நமது சமூகம் கொண்டிருக்கும் அணுகுமுறையைப் பகுத்துவிட முடியாது என்று  கூட்டத்தை விட்டு வெளியே வந்து, வீடு திரும்புகையில் தோன்றியது. இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளிவரும் பெரும்பாலான சினிமாக்கள், காதலை மாய்ந்து மாய்ந்து கருப்பொருளாகப் பேசுகின்றன. அதை எப்படிப் புரிந்துகொள்வது. ஆந்திர சமூகத்தில் காதல் இல்லை, கன்னட சமூகத்தில் காதல் இல்லை, வட இந்திய சமூகத்தில் காதல் இல்லை என்றா?
ராஞ்சனா போன்ற படம் வடக்கில் வெற்றிபெற்றிருப்பதற்கு காரணம், துரத்தியும், மிரட்டியும் காதலிப்பது போன்ற வழக்கங்கள் அங்கேயும் நடைமுறையில் இருப்பதுதான் காரணம் என்று த இந்துவில் சித்ரா பத்மநாபன் என்றொரு விமர்சகர் எழுதுகிறார். அதே நேரத்தில் இதன் இன்னொரு பக்கமோ கௌரவக் கொலைகளும், கட்டப் பஞ்சாயத்துகளும், பெண்கள் மீதான அங்கீகரிக்கப்பட்ட வன்முறைகளும் அதிகம் நடைபெறும் இடமாகவும் வடமாநிலங்களே திகழ்கின்றன.
இப்படிச் சொல்லிப் பார்க்கலாம். சாதிய, பொருளாதார பேதங்கள் அதிகம் திகழும் சமூகங்களில் ஒன்றான, காதல் மற்றும் பாலுறவின் மேல் குற்றநிலையைப் பாவிக்கும் தமிழ் சமூகம், காதலை ஒரு புனிதமான, அதீதமான, அணுகுவதற்கு அச்சப்படும் ஒரு இடத்தில் வைத்துள்ளது. ஏனெனில் அதற்கு அருகாமையில் உள்ள கிண்ணங்களில் வன்முறையும், குற்றங்களும் வண்ணப்பொடிகள் போல நிரம்பியுள்ளன. இவை எப்போது கலந்தாலும் கலவரம்தான்.
இந்தக் கலவரங்கள் வசீகரமாகவும், வண்ணமயமாகவும் இருப்பதால் தமிழ் சினிமாவும் இந்திய சினிமாவும் அதன் மீது கவனம் கொள்கிறது. சமூக எதார்த்தத்தில் காதலும், வன்முறையும் அதீதமான சேர்மானத்தை எடுக்கும்போது, துயரகரமான கொலைகளாகவும்,தற்கொலைகளாகவும் மரணங்கள் நிகழ்ந்து விடுகின்றன. ஏனெனில் பேதங்கள் இருக்கும்வரை காதல் இருக்கும். பேதங்கள் இருக்கும் வரை குற்றங்கள் இருக்கும். அதே பேதங்களின் இடத்தில் தான் படைப்பாற்றலும் எதிர்ப்புணர்வும் இருக்கிறது.
காதல் என்ற உறவுநிலை நிர்ணயமாகும் இடம் குறித்தும் நாம் பரிசீலனை செய்ய வேண்டும். இயல்பாக மலரும் காதல் என்று ஏதாவது இந்த உலகத்தில் இருக்கிறதா? இனக்கவர்ச்சி வேறு, காதல் வேறு என்று சொல்லப்படுகிறதே அதில் ஏதாவது சிறுதுளி உண்மை உள்ளதா? ஒருவர் இன்னொருவரை காதலிக்க மேற்கொள்ளும் தேர்வு, ஒருவர் இன்னொருவரைக் காதலிக்கச் செய்ய மேற்கொள்ளும் எத்தனம், இவற்றில் எல்லாம் செயல்படும் அளவுகோல்கள் தன்னியல்பானவையா? ஒருவர் தனது இணையை, காதலை நோக்கி, பாலுறவை நோக்கி ஈர்ப்பதற்கு சிறிதளவாவது வன்முறையோ,அழுத்தமோ,வலியுறுத்தலோ தேவைப்படாத நிலைமை என்பது இந்த உலகில் எந்தக் கலாசாரத்திலாவது இருக்கிறதா? இவையெல்லாம் சிக்கலான கேள்விகள். ஆனால் காதல் மற்றும் வன்முறையைச் சேர்த்துப் பேசும்போது நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் இவை. கிம் கி டுக்கின் ‘பேட் கய் போன்ற படங்கள் இந்தக் கேள்விகளை படைப்பில் பரிசீலனை செய்பவை.      
அம்பிகாபதி படத்தில் காசியில் புரோகிதம் செய்யும் ஒருவரின் மகனாகப் பிறந்த குந்தனும் இறக்கும்போது, மறுஜென்மத்திலாவது சோயாவுடன் சேரவேண்டும் என்று ஆசைப்படுகிறான். தர்மபுரியில் இறந்த இளவரசனின் கடிதத்திலும் அதே கோரிக்கைதான்.
மறுஜென்மமும் ‘நம்மைப்பொறுத்தவரை கற்பிதம் தான்.  
(காட்சிப்பிழை ஆகஸ்டு இதழ்)

Comments