ஷங்கர்
எழுத்தாளர் அசோகமித்திரனின் படைப்புகள் குறித்த கருத்தரங்க அறிவிப்பின்
பின்னணியில் முகநூலில் அசோகமித்திரன் ‘இனவாதி’ என்று விமர்சிக்கப்பட்டார்.
அதையொட்டி வெவ்வேறு கருத்துகள் சராமாரியாகவும், அவசரமாகவும் பரிமாறப்பட்டன.
வார்த்தை அம்புகள் குவிந்த குருட்சேத்திரத்தில் வழக்கம்போல்
அசோகமித்திரனின் படைப்புகள், அவரது பெரும்பாலான கதாபாத்திரங்களைப் போலவே
ஓரத்தில் ஒதுங்கி நின்று தேமேயென்று பார்த்துக்கொண்டிருந்தன.
அசோகமித்திரன் ‘இனவாதி’ என்பதற்கு அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அவுட்லுக்
ஆங்கிலப் பத்திரிக்கையில் தமிழகத்தில் பிராமணர்களின் நிலைகுறித்து அவர்
சொல்லியிருந்த அபிப்ராயங்கள் சாட்சியமாகக் காட்டப்பட்டன.
இத்தனை வாதப் பிரதிவாதங்களுக்கு நடுவில் 16, ஜூன் தேதியிட்ட குங்குமம் வார
இதழில் அவர் எழுதிவரும் தொடர்பத்தி கண்ணில் பட்டது. 70 ஆண்டுகளுக்கு முன்பு
வந்த சிட்டிசன் கேன் படத்தைப் பற்றியும் அப்படம் பேசிய விஷயங்கள் இன்றைய
இந்தியச் சூழலுக்குப் பொருத்தமாக இருப்பதையும் பற்றி எழுதியிருந்தார்.
ஜனநாயகம், தேர்தல்கள், ஊடகங்களுக்கு இடையிலான உறவுகள் பற்றியும் சமீபத்தில்
நடந்து முடிந்த தேர்தல் பற்றியும் அசோகமித்திரன் தன்னுடைய நுட்பமான
பாணியில் எழுதியிருந்தார். மோடி பெற்ற பெரும்பான்மை பற்றியும் சூட்சுமமான
விமர்சன ஊசிகளைச் செருகியிருந்தார் எனவும் அதை வாசிக்க இடமிருக்கிறது.
மோடியின் தேர்தல் வெற்றியை ஹிட்லருக்குக் கிடைத்த தேர்தல்
பெரும்பான்மையுடன் ஒப்பிட்டு அக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது என்றும்
ஒருவர் முடிவுக்கு வரலாம்.
அசுரப் பெரும்பான்மை விளைவிக்கும் கொடுங்கோன்மை கண்டு ஒரு சாமானியக்
குடிமகனின் அச்சத்தை அந்தக் கட்டுரையில் அசோகமித்திரன்
வெளிப்படுத்துகிறார். அவரை ‘இனவாதி’ என்று பழிப்பவர்கள் அவரது இந்தக்
குரலையும் பரிசீலனை செய்தால் அவர் மீது அவசர அவசரமாகக் குத்தப்படும்
முத்திரைகள் நிச்சயம் குழம்பிப் போகும்.
அசோகமித்திரன் கதைகளில் வருபவர்கள் பெரும்பாலும் கீழ் நடுத்தர வர்க்கத்தைச்
சேர்ந்த கதாபாத்திரங்கள்தான். வரலாறும் அரசியலும் சிறு துளி மீட்சியையும்
தராத சாமானியர்களின் அவலங்களை அவர் விதவிதமாக, வகைவகையாகச்
சித்தரித்துள்ளார்.
காலமும் ஐந்து குழந்தைகளும், புலிக்கலைஞன் போன்ற மகத்தான சிறுகதைகளிலும் தண்ணீர் போன்ற நாவல்களிலும் சாமானிய ஆண், பெண்களின் வாழ்நிலை யதார்த்தமும் காரணமேயில்லாமல் துயரங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அவர்களது அன்றாடமும் விவரிக்கப்படுகிறது. இதன் வாயிலாக மனிதனின் அவல நிலையை உலகப் பொது அனுபவாக மாற்றியவர் அவர். காப்பாற்றுவதற்குக் கடவுளோ, சாதியோ, அமைப்போ, தேசமோ எதுவும் இல்லாத கதாபாத்திரங்கள் அவர்கள்.
அசோகமித்திரன் போன்ற படைப்பாளிகளிடம் வெளிப்படும் இனவாதப் பார்வைகளை ஒரு அறிவார்த்த சமூகம் நிச்சயம் பரிசீலிக்க வேண்டும். ஆல்பெர் காம்யூ முதல் காஃப்கா வரை அத்தகைய மறுவாசிப்புகள் இன்றளவும் உலகளாவிய அளவில் உள்ளன. இத்தனை விமர்சனங்களுக்கு மத்தியிலும் அவர்களுக்கு மரியாதைபூர்வமான வாசக ஆதரவும் தொடரவே செய்கிறது.
ஆனால் தமிழில் அசோகமித்திரன் போன்ற எழுத்துக் கலைஞர்களை ‘இனவாதி’ என்று முத்திரை குத்துவதன் மூலம் அவரது படைப்புகளை வாசிப்பதற்கு எதிரான சூழல் துரதிர்ஷ்டமாக உருவாக்கப்பட்டுவிடுகிறது. ஒரு இளம் வாசகன் அசோகமித்திரனை ‘இனவாதி’ என்று ஒற்றை வார்த்தையில் கூறிவிட்டு அவர் கதைகளைக் கடந்துவிடக் கூடிய அபாயம் இங்கே நிகழ்ந்துவிடுகிறது.
ஒரு எழுத்தாளனை அவனது இறுதிநாள் வரை சமூக அடையாளம் சார்ந்தும் கருத்தியல் அடிப்படையிலும் திட்டமாக முத்திரை குத்தாமல் தொடர்ந்து பரிசீலிப்பதே வாசக சமூகத்திற்குப் பயனளிக்கும். சமூக மனிதர்களாக, சில சௌகரியங்களையும் பாதுகாப்பையும் முன்னிட்டு அசோகமித்திரன் போன்றவர்கள், ஒரு சிமிழுக்குள் அடைபடுவதற்கு நினைத்தாலும், அவர்களது படைப்புடல் அதற்கு வெளியேதான் கடைசிவரை அலைக்கழிந்துகொண்டிருக்கும்.
அந்த வகையில் புதுமைப்பித்தனின் கவிதையைப் போல அவர்கள் எப்போதும் தனியனாக தனி இருட்டில் அலைந்துகொண்டிருப்பவர்கள்தான். தன்னுடனும், தன்னைச் சுற்றியுள்ளவற்றுடனும் முரண்பட்டபடி, தொடர்ந்து கண்காணித்துச் சலித்தபடி இருப்பவைதான் அவர்களது படைப்புகள். அதற்கான சாத்தியங்களை கடைசிவரை படைப்பாளிகளுக்கு அனுமதிக்க வேண்டும்.
ஒரு கலைப் படைப்போ, ஒரு சிறுகதையோ, ஒரு நாவலோ, ஒரு கட்டுரையோகூட வெறும் பிரகடனம் அல்ல. வெறும் கோஷம் அல்ல. வெறும் நிலைப்பாடு அறிவிப்புப் பலகை அல்ல. பிரகடனங்களைப் போல, கோஷங்களைப் போல, நிலைப்பாடுகளைப் போலப் படைப்பு வேலை எளிதானதும் அல்ல என்பதை இங்கே திரும்பத் திரும்ப நினைவுறுத்த வேண்டியிருப்பதுதான் அவலமான காரியம்.
(தி இந்து தமிழ்-14.06.2014 கலை இலக்கியம் பகுதியில் வெளியானது)
Comments