ஷங்கர்ராமசுப்ரமணியன்
பராக்கா என்னும் இந்தத் திரைப்படம் கதைப்படம் அல்ல. விவரணைகளும் இப்படத்தில் கிடையாது. மனதை உலுக்கும், நெகிழ்த்தும், சில சமயங்களில் ஓலமிடும் பின்னணி இசை மட்டுமே. இந்த இசையின் பின்னணியில் உலகம் முழுக்க பல்வேறு நிலக்காட்சிகள் நம்முன் விரிகின்றன. பெரும் இரைச்சலோடு விழும் பிரமாண்ட அருவியின் காட்சி, கடல் அலைகள் அறையும் பாறைகள், புராதன ஆலயங்கள், துறவிகள், பறவைகள், விலங்குகள், உலகெங்கும் உள்ள மரபான சமயச் சடங்குகளின் காட்சிகள் அழகாக அடுக்கப்பட்டுள்ளன.
மலைச்சிகர மடிப்புகளுக்குள் உள்ள ஒரு வெந்நீர் ஊற்றில் தியான நிலை போல கண்ணை இமைத்து மூடி, உலகத்தை அசைபோடும் குரங்கின் தனிமைக்காட்சி ஒன்றுபோதும் இப்படத்தின் தன்மையை உணர்வதற்கு.
எல்லாம் வேகமயமாகவும், எந்திர மயமாகவும் மாறிவட்ட உலகில் இன்றைய மனித வாழ்க்கை சந்திக்கும் நெருக்கடிகளை வேகமான காட்சிகளாக ஓடவிட்டு நாம் கடந்து கொண்டிருக்கும் பயங்கரம் காட்டப்படுகிறது. ஆஸ்விட்ச் வதைமுகாமில் அடுக்கப்பட்டிருக்கும் கபாலங்கள் நமக்கு பெரும் குற்றவுணர்வைத் தூண்டுகின்றன.
ஒரேமாதிரியாகத் தயாராகும் கோழிக்குஞ்சுகளின் அலகுகள், எந்திரத்தில் மழுங்கடிக்கப்படும் காட்சியும், அடுத்து பெருநகர் ரயில் நிலையம் ஒன்றில் விரையும் மனிதர்கள் ஒன்றின் காட்சியும் அடுத்தடுத்துக் காண்பிக்கப்படுகின்றன.
இயற்கையிலிருந்தும், பாரம்பரிய அறிவிலிருந்தும் மனிதன் விலகிப் போய் ஒரு எந்திரமாக அவன் மாறி நிற்பதை சொல்லாமல் சொல்கிறது பராக்கா. பிரபஞ்சத்தின் கால-வெளி வரம்புக்கு உட்பட்ட ஒரு உயிரியாக தன்னை நினைக்காமல், இந்த உலகத்தை ஆக்கிரமிக்கும் அகந்தையுடன் வளர்ந்து நிற்கும் மனிதகுலத்துக்கு ஒரு எச்சரிக்கை போல இத்திரைப்படம் உள்ளது. இந்த பூமியில் உள்ள சகல உயிர்களையும் சக ஜீவிகளாக நினைத்து, இயற்கையோடு இயைந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற செய்தியை சத்தமின்றி சொல்லும் படம் இது.
ஆறு கண்டங்கள், 24 நாடுகளில் இப்படத்தின் காட்சிகள் பயணிக்கின்றன. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரோன் பிரிக். இந்தப் படத்தின் இசைத்தொகுப்பை மிக்கேல் ஸ்டீன்ஸ் செய்துள்ளார். இந்தியாவின் சாஸ்திரிய இசைக்கலைஞர் எல்.சுப்ரமணியனும் இப்படத்தின் இசைத்தொகுப்பில் பங்குபெற்றுள்ளார். ஹோம் தியேட்டர் வசதியுடன் இருப்பவர்கள், முதலில் பார்க்க வேண்டிய திரைப்படம் பராக்கா தான்.
இயற்கையின் மீது தங்கள் பணிவை வெளிக்காட்ட மனிதகுலம் உருவாக்கிய பிரார்த்தனை வடிவங்கள் மற்றும் தொல்குடிச் சடங்குகளை படைப்பமைதியுடனும், உயிர்தன்மையுடனும் பராக்கா வெளிப்படுத்துகிறது. பூமி என்னும் விரிந்து பரந்த கிரகத்தில் காலம்காலமாக தன்னைத் தகவமைத்துக் கொண்டு வாழ்ந்து வரும் சிறு,பெரும் உயிர்களின் கண்கள் வழியாக அவை இயற்கை முன்கொள்ளும் சாந்தம் விவரிக்கப்படுகிறது. மனிதர்கள் செய்யும் பிரார்த்தனையும் உயிர்கள் இயற்கையுடன் சேர்ந்து இயங்கும் வழிமுறைகளும் வேறு வேறு அல்ல என்று உணர்த்தப்படுகிறது.
அதேவேளையில் ஒருவேளை உணவுக்காக குப்பைத் தொட்டிகளில் தேடும் மனிதர்களும், நகரத்து வீதிகளில் பொட்டலங்கள் போல உறங்கும் கூரையற்ற மனிதர்களும், காத்திருக்கும் பாலியல் தொழிலாளிகளின் விழிகளும் நம்மை அதிர்ச்சியூட்டுகின்றன.
குவைத்தில் எரியும் எண்ணைய் கிணறுகளும், எண்ணை கலந்த கடல்நீரும் மனிதனின் பேராசையை சுட்டிக்காட்டி கருணையை வேண்டிக் காட்சிகளாக விரிகின்றன.
மனிதன் குணப்படுவதன் வாயிலாகவே இந்த பூமியும் குணமடையும் என்ற செய்தியுடன் பராகா நிறைவடைகிறது.
பிரமாண்டமான இயற்கையின் முன்னும், மரணத்தின் முன்பும் மனிதன் மிகவும் சிறிய உயிர் என்று பராக்கா அறிவிக்கிறது. பராகா படத்தின் கடைசி காட்சி காசியில், கங்கைக் கரையில் எரியும் ஒரு பிணத்தின் உடலிலிருந்து, விறகு போல கால் மூட்டெலும்பு உடையும் காட்சியில் நிலைத்து நிற்கிறது. மனித வாழ்க்கையின் நிலையாமையையும், அவன் வாழ்வதற்காக மேற்கொள்ளும் சகல எத்தனங்களின் பயனின்மையையும் காசியில் எடுக்கப்பட்ட காட்சிகள் வெளிப்படுத்தி விடுகின்றன.
மனிதகுலத்துக்கு சினிமா தந்த மாபெரும் பரிசு என்றே, 96 நிமிடங்கள் ஓடும் பராக்காவைச் சொல்லலாம்.
திரைப்படத்தை மனித வாழ்க்கை குறித்த ஆன்மீகப் பரிசீலனைக்கான ஊடகமாக மாற்றியவர்கள் என்று என்று ஆந்த்ரே தார்காவ்ஸ்கி, பெர்க்மன், லாஸ்வான் ட்ரையர் போன்றவர்களைச் சொல்லலாம். அவர்களது சாதனைகளுக்கு சற்றும் குறைந்ததல்ல ரோன் பிரிக்கின் பராக்கா.
பராகா என்பது சூஃபி வார்த்தையாகும். ஆசீர்வாதம் அல்லது வாழ்வின் சாரம் என்பதுதான் இதன் அர்த்தம்.
பராகா திரைப்படத்தின் யூட்யூப் இணைப்பு: http://www.youtube.com/watch?v=fIS0-ZJ7yXA
Comments