Skip to main content

பூக்களால் ஆன வரலாற்றின் சல்லாத்துணி

  ஷங்கர்ராமசுப்ரமணியன்



  வாள்கள்  காகிதங்கள்
 துப்பாக்கிகள் எந்திரங்கள்
 அந்நியரின் பாதம்படாத
 நிலங்கள் 
 குதிரைகள்
 ரயில்கள் விரையும்
 புழுதிபடர்ந்த
 நெடுஞ்சாலையின்
 ஒவ்வொரு நிறுத்தத்திலும்
 நாகரிகம் இளைப்பாறுகிறது
 அந்தரங்க அறைகளில்.

 பூக்கள் வரையப்பட்ட
 வரலாற்றின்
 சல்லாத்துணி வழியேதான்
 உனது முகம் தெரிகிறது
 உனது காயத்தையும்
 இறுக்கத்தையும்
 கண்ணீரையும்
 விரக்திப் புன்னகையையும்
 அழகாக  
 அந்த சல்லாத்துணி
 காண்பிப்பது துயரம்தான்
 அதன் வழியே
 உன் வடுக்களேறிய உடலைக் கண்டு
 நாக்கைச் சப்பும்
 அல்பப் பூனை
 எனது காமம்
 எனினும்
 நானும் சேர்ந்து புனையமுயலும்
 கதைகளை நீக்கி
 உன்னைப் புரிந்துகொள்ள முயல்கிறேன்
 நான் உன்னை நேசிக்கிறேன்

 இந்தப் புளித்துப் போன வார்த்தைகளால்…

(Once Upon a Time in the West திரைப்படத்தின் நாயகியான  க்ளாடியா கார்டினலுக்கு) 

Comments