Skip to main content

ஜெயமோகன் ஏன் மறுக்கவேண்டும்?




ஷங்கர்ராமசுப்ரமணியன்

பத்மஸ்ரீ விருது என்பது பாஜக அரசு கொடுக்கும் விருது அல்ல; இந்தியா என்ற தேசம் கொடுக்கும் விருது. ஆனாலும் அவதூறுகளுக்கு அஞ்சி அதை மறுக்கிறேன் என்று ஜெயமோகன் கூறியிருக்கிறார். அதுதான் எனது புரிதலும் கூட. 

அத்துடன் இந்த விருது குறித்த அனைத்து விவரங்களும் நடவடிக்கைகளும் எனக்குத் தெரியுமென்றும் ஜெயமோகன் கூறியிருக்கிறார். உயர் அதிகார மட்டத்தில் இருக்கும் நண்பர்களும் ஜெயமோகனுக்கு பத்மஸ்ரீ அங்கீகாரத்தை ஜெயமோகனுக்கு வாங்கிக் கொடுப்பதில் ஆர்வமாக இருந்ததாக அவரே தனது இணையத்தளத்தில் தெரிவித்தும் உள்ளார்.

இதுகுறித்த எனது அபிப்ராயம் என்னவெனில், பத்மஸ்ரீ விருதை இந்தியாவின் குடிமகனாக அவர் வாங்கியிருக்க வேண்டுமென்பதே. பத்மஸ்ரீ விருது மட்டுமல்ல, பத்ம்பூஷன், பத்மவிபூஷன், பாரதரத்னா என்று எத்தகைய விருதுகளுக்கும் அவர் தகுதியானவர் என்பதே என் போன்ற தமிழ் வாசகர்களின் நிலைப்பாடும் கூட.

பெனடிக்ட் ஆண்டர்சன் போன்றவர்கள் வழி என்னைப் போன்ற 'சிறிய' குடிமக்களைப் பொறுத்தவரை தேசியம் என்பது கற்பிதம் தான். யாரோ ஒருவரது கற்பனையில் இதெல்லாம் நடக்கிறது. தேசியம் என்பதை தொடர்ந்து உறுதிசெய்ய சல்மான் ருஷ்டி சொல்வதைப் போல தொடர்ந்து ரத்தபலிகளும் தேவைப்படுகின்றன. ஆனால் ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் உண்மையிலேயே தேசத்தின் அகண்டத்தையும் அது தரும் நல்லுணர்வையும் அடைந்தவர்கள். தேசம் என்னும் கருத்தாக்கத்தை வலுவூட்டத் தொடர்ந்து தங்கள் எழுத்துகள் மூலமாகப் பாடுபடுபவர்கள். அவர்களுக்கு இதுபோன்ற விருதுகள் உண்மையில் ஊக்கமருந்துகள்.  

எத்தனை கண்டனங்கள் எதிர்ப்புகள் வந்தாலும் ஜெயமோகன் இந்தியாவின் முக்கியமான படைப்பு மற்றும் கருத்துலக சக்தி என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. இந்தியா முழுவதும் ஜெயமோகனைப் போல தற்கொலைப் படை வைத்திருக்கும் ஒரு எழுத்தாளனையும் நாம் காணவே இயலாது. அது மனித ஆற்றல் தொடர்பான காரியமும் அல்ல. 

தமிழ் எழுத்தாளர்களில் எனக்குத் தெரிந்து இந்திரா பார்த்தசாரதியும் ந.முத்துசாமியும் பத்மஸ்ரீ விருது வாங்கியுள்ளார்கள். 

ஜெயமோகன் எத்தனை அளவுக்கு அரசு விருதுகளுக்குத் தகுதியானவரோ அத்தனை அளவுக்கு அதிகார செல்வாக்கும் உள்ளவர். முன்னாள் காங்கிரஸ் தலைவர் மூப்பனாரிலிருந்து அவரது செல்வாக்கு மிகவும் பரந்துவிரிந்தது என்பதை அவரே தொடர்ந்து நமக்குக் கூறிவருகிறார்.

 காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னேற்ற கூட்டணி ஆட்சியில் இருந்தபோதே ஜெயமோகனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதற்கான முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன என்பதை அவரே கூறுகிறார். வழக்கம்போல அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் தாமதமாகியிருக்கின்றன. அவ்வளவுதான். 

விருதுகள் மற்றும் அங்கீகாரங்களை ஒருவர் தன் படைப்புகளால் ஈர்ப்பது வேறு செயல்முறை. அங்கீகாரங்களுக்காக நடக்கும் நடவடிக்கைகளைத் தெரிந்துகொண்டே மௌனமாக ஊக்குவிப்பது இன்னொரு செயல்முறை.
ஜெயமோகன் நினைத்த நேரத்தில் பத்மஸ்ரீ வரவில்லை. அவருக்குப் பாதகமான சூழ்நிலையில் வந்துவிட்டது என்பதே அவரது தரப்பு என்று நான் புரிந்துகொள்கிறேன்.

ஜெயமோகன் எப்போதும் எத்தனை கண்டனத்துக்குரிய நிலைப்பாட்டை எடுத்தாலும் அதில் தர்க்கத்தெளிவு இருக்கும். பத்மஸ்ரீ அங்கீகாரத்தை மறுப்பதற்கான தர்க்கத் தெளிவு ஏதும் அவரிடம் இல்லை. 
--------------------------
ஒரு சிறிய விளக்கம்

ஜெயமோகன் பத்மஸ்ரீ அங்கீகாரத்தை மறுத்தது தொடர்புடையதாக முகநூல் விவாதத்தில், நாகர்கோவிலைச் சேர்ந்த நெய்தல் கிருஷ்ணன் வழங்கும் ‘சுந்தர ராமசாமி விருதை நான் மறுத்தது குறித்து எனது நண்பரும் மதிப்புரியவருமான லக்ஷ்மி மணிவண்ணன் சில  சந்தேகங்களை முகநூலில் எழுப்பியிருக்கிறார். 

‘சுந்தர ராமசாமி பெயரால் வழங்கப்படும் விருதை முதலில் லக்ஷ்மி மணிவண்ணனுக்கே தரவேண்டும் என்பது எனது நிலைப்பாடாக இருந்தது. அத்துடன் காலச்சுவடு நிறுவனம் பின்னிருந்து இயங்கும் விருதாக எனக்குப் பட்டதால் அந்த விருதை நான் மறுத்தேன். அதை பட்டவர்த்தனமாகச் சொல்லும் அளவுக்கு எனக்கு அதிகாரமோ செல்வாக்கோ இல்லையென்பதால் அதை பகிங்கரமாக்க விரும்பவில்லை. அது லக்ஷ்மி மணிவண்ணனுக்கும் தெரியும். 

விரல்விட்டு எண்ணும் அளவில் உள்ள நண்பர்களுக்குச் சொன்னேன். எனக்கும் எனது படைப்புகளுக்கும் அவர்களுடன் நேரடித் தொடர்பு உண்டென்பதால் சொன்னேன். லக்ஷ்மி மணிவண்ணனிடமும் பகிர்ந்துகொண்டேன்.

எனது தந்தைக்கு இடமில்லாத ஒரு திருமண விருந்தில் எனக்கும் இடமில்லையென்பதை லக்ஷ்மி மணிவண்ணனுக்கும் எனக்கும் சேர்ந்துதான் சுந்தர ராமசாமி பேசியிருக்கிறார்.

நான் அவர்களின் மேடையில் எப்போதும் ஏறமாட்டேன்.
நாகர்கோவில் என்ற ஊரில் ‘லக்ஷ்மி மணிவண்ணன் என்ற சுந்தர ராமசாமியின் முதன்மை மாணவர்களில் ஒருவரும், சிறந்த படைப்பாளியும் அங்கீகரிக்கப்படாத மேடையில் நான் ‘சுந்தர ராமசாமி விருதை வாங்கக் கூடாது என்று நினைத்தேன். சுந்தர ராமசாமி விருது உருவாக்கப்பட்ட தருணத்தில் அவர் நாற்பது வயதைக் கடக்கவில்லை என்பதே எனது ஞாபகம்.

அத்துடன் சுந்தர ராமசாமி பெயரால் வழங்கப்படும் விருதை நான் ஏற்காமல் இருப்பதை சுந்தர ராமசாமி என்ற மூத்த ஆசிரியனின் ஆன்மா புரிந்துகொள்ளும் என்றும் நினைத்தேன். நெய்தல் கிருஷ்ணனிடம் அதைச் சொல்லவும் செய்தேன். இந்த விருது அறிவிப்பே அவரது ஆசிர்வாதம் என்று நெய்தல் கிருஷ்ணனிடம் சொன்னேன்.

சுந்தர ராமசாமியின் ஆசிர்வாதம் நம் எல்லாரையும் காக்கவேண்டும்.

Comments