Skip to main content

லீனா மணிமேகலை : நிலங்கள் மீது நீந்திக்கடக்கும் சிச்சிலி


 ஷங்கர்ராமசுப்ரமணியன்


சுதந்திரம், பாவனை, சாகசவிழைவு, வெளிப்படையான தன்முனைப்பு, திமிறல், முரண்பாடுகள்-இப்படியாக லீனாவின் கவிதைகளையும் அவரது ஆளுமையையும் நான் அடையாளப்படுத்தவும் வரையறை செய்வதற்கு முயற்சி செய்யவும் விரும்புகிறேன். லீனா மணிமேகலை, தனது ஆளுமை குறித்தும் தன் கவிதைகளுடனான பிரச்சினைப்பாடுகள் குறித்தும் பேசும் நேர்காணல் நூலான ‘மொழி எனது எதிரி நூலைப் படிக்கும்போது அவர் குறித்து உருவாகும் மனப்பதிவு இது. லீனாவின் கவிதைகளை ஏற்கனவே அவ்வப்போது படித்திருந்தாலும் முழுமையான தொகுதியாகப்  ‘சிச்சிலியைத் தான் படிக்கிறேன். தமிழ் கவிதைகளில் ஆண் நவீன கவிகள், பெண் நவீன கவிஞர்கள் இருவருக்கும் அதிகம் வாய்க்காத பகடி மற்றும் தீவிரபாவத்தைக் கவிழ்க்கும் கேலிப்பண்பு, லீனாவிடம் இயல்பாக அமைந்துள்ளது. அந்த இயல்பைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்து லீனா தொடரவேண்டும் தனது படைப்புகளில்.

 இந்த இரண்டு புத்தகங்கள் வாயிலாகவும், லீனா என்ற படைப்பு அகத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதற்கு மேலும் ஒரு தூண்டிலை இடுகிறேன்.
 குழந்தையின் பேதைமையும், எல்லாம் தெரிந்த தன்மையும் மூர்க்கமான சேட்டைக்கார ரெட்டைகளாகச் சண்டையிடும் இடமென்று லீனாவைச் சொல்வேன். அங்கிருந்து தான் லீனாவின் எந்தச் செயலும், கவிதைகளும் பிரகடனத் தொனியை அடைகின்றன. அவர் விசனப்பட்டாலும், அந்தப் பிரகடன அழுத்தம் தான், லீனா எழுதும் கவிதையின் உள்ளடக்கத்தை அவரது அனுபவமாக உடையைத் தூக்கிப் பார்க்க(அவரே இப்படியான ஒரு கூற்றை சொல்லியிருக்கிறார்) வைக்கிறது.
 அந்த அடிப்படையில் தான் பயன்படுத்தும் மொழி என் உலகத்தை விஸ்தரிக்கும் அதேவேளையில் வரையறை செய்யவும் முயல்கிறது என்றே தயங்கிக் கூறுபவனாகவும் பல மூடநம்பிக்கைகளைப் பராமரிப்பவனுமாகவே நான் இருக்கிறேன். மொழி எனது எதிரி என்று சும்மா சொல்லிப் பார்ப்பது கூட  என்னைப் பொறுத்தவரை தர்மசங்கடமானது. நான் எழுதும் தமிழ் மொழியை புனித வஸ்துவாகவெல்லாம் நான் பார்க்கவில்லை. எனக்கு முன்னும், என் சமகாலத்திலும் மொழியை நவீனமாக விஸ்தரித்த கலைஞர்களின் முன் ‘மொழி எனது எதிரி’ என்று சொல்லும் வலிமை என்னிடமில்லை என்பதே அந்த தர்மசங்கடத்திற்குக் காரணம்.      

லீனா மணிமேகலையோ ‘மொழி எனது எதிரி என்ற மோதல் களத்தை உருவாக்கித் தான் தன் உரையாடலையே தொடங்குகிறார். அவருக்கு முன்னர் எழுதப்பட்ட பெண் கவிதைகள் குறித்துக் கேட்கும்போது, சரித்திரத்தைத் துண்டிச்சிட்டு நிக்கணும்னு நினைக்கிறேன் என்று பெரிய பாறாங்கல் வாக்கியத்தை அநாயசமாகத் தூக்கிப் போடுகிறார்.  
000

லீனா மணிமேகலையின் கொஞ்சம் பெரிய நேர்காணல் ஒன்றை தீராநதியில் ஏற்கனவே படித்திருக்கிறேன். ஒரு நேர்காணல் ஒரு பெரிய curriculum vitea போன்ற அர்த்தத்தை அளிக்க முடியும் என்பது எனக்கு அப்போது பெரிய கலாசார அதிர்ச்சியாக இருந்தது. ஒரு எழுத்தாளரின் பேட்டி என்பது குறித்து எனக்கு இருக்கும் எதிர்பார்ப்புகள் வேறு. படைப்பு தொடர்பாக தனது மரபு, தான் இயங்கும் மொழியில் அவன் அல்லது அவளது தொடர்ச்சி, சிந்தனைகள், கனவுகள், அகமுரண்கள், தத்தளிப்புகள் அபிலாஷைகள், வரையறைகள் ஆகியவற்றை ஒரு பேட்டி அல்லது நேர்காணல் பகிர்ந்துகொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கை.
ஒரு தொழில்முனைவு ஆளுமையின் திட்டநிரல் போல மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருந்த அந்த நேர்காணல் எனக்குத் தோன்றியது. இப்போது எனக்கு அது அதிர்ச்சியாக இல்லை.

லீனா தன் குறித்த, நம் காலமும் குறித்த அருமையான ஒரு வரையறையை செய்யும் போது எனக்கு அது ஒரு தற்காலப் பண்பாகத் தோன்றுகிறது. அவர், தன்னை போஸ்ட் ஐடியாலஜிஸ்ட் என்று சொல்கிறார். அவர் சொல்லும் அடையாளத்துடன் நானும் என்னையும் என் படைப்புகளையும் பொருத்திப் பார்த்துக் கொள்கிறேன். அப்படியான வகையில் சகதொழிலாளனாக எஸ்.சண்முகம் மற்றும் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் நேர்காணல் செய்து தொகுத்திருக்கும் இந்தப் புத்தகம் எனக்கு அனுபவக்கொள்முதலாகவே இருந்தது. பிறர், பிற படைப்புகள் தொடர்பான இவரது கருத்துகளில் சுயமான கண்டுபிடிப்புகளோ, புலமையோ இல்லை.

 அரசியல் சரிநிலைகள், அபொலிட்டிக்கல் தன்மை, கடந்த இருபது ஆண்டுகளாக தமிழில் நடந்த இலக்கிய விமர்சனக் கோட்பாட்டாளர்களின் விவாதங்களிலிருந்து உருவான  அறிவுத்தளத் திண்ணைப் பேச்சுகள் வழியாக தொகுக்கப்பட்டிருக்கும் கற்பிதங்கள், பிரகடனங்களை இவர் தனது கருத்துகளாக வெளிப்படுத்துகிறார். அவற்றைத் தாண்டி தனது வாழ்க்கை, தனது இருப்புக்கும் படைப்புக்குமான முரண்கள், தத்தளிப்புகள், கவிதையாக்கம், சுயகேலி ஆகியவற்றையும் இந்த நேர்காணல் கொண்டுள்ளது.

ஒரு மனுஷியாக ஒரு பெண்ணாக என்னுடன் வாழும் உயிர் குறித்து மிகக்குறைந்த அறிவும் அனுபவமுமே நேர்ந்துவிட்ட எனக்கு பெண் என்ற உயிரி குறித்து அத்தியாவசியமான சில அறிதல்களை இந்த நூலில் எனக்கு லீனா பகிர்ந்திருக்கிறார். திரவநிலைக்கு நெருக்கமாகக் கவிதையைச் சொல்வது என்னை யோசிக்கச் செய்யக்கூடிய கண்டுபிடிப்பாக இருக்கிறது.

சென்ற நூற்றாண்டில் உருவான தமிழ் சிறுபத்திரிகை மரபின் தொடர்ச்சியாக லீனா மணிமேகலையைப் பார்க்கவியலாது. புதுமைப்பித்தனின் வழிவந்த தனி இருட்டில் பிறந்தவர் அல்ல லீனா. பாட்டு, பரதம், இளம்பருவத்திலேயே பேச இடம் தந்த முற்போக்கு மேடைகள், வெகுஜன சினிமா ஆளுமைகளுடனான பரிச்சயம்  என ஊடக வெளிச்சத்திலேயே வளர்ந்த தாவரம் லீனா. இன்றுவரைக்கும் அந்த வெளிச்சம் அவரைத் தொடர்கிறது. அவரே ஒரு மையமாகவும் தன்னை ஸ்தாபித்துள்ளார்.

அதிகாரம் துறப்பு, சுதந்திர வேட்கை, பால் கடந்த மொழி என்று மிகப்பெரிய கருத்தியல்களை சமத்காரமாகப் பேசும் அதேவேளையில் லீனா, தனது ஆளுமை உருவாக்கத்தில் பங்குவகித்தவர்களைப் பேசும்போது மிகவும் அடக்கமாகவே அவர்களைப் பற்றி பேசுகிறார். அம்ஷன் குமார் மற்றும் விகடன் பாலசுப்ரமணியனை அய்யா என்றே கூறுகிறார். உலக சினிமா, ஆவணப்பட ஆளுமைகளையெல்லாம் வெள்ளிடைமலையென உணர்ந்திருக்கும் லீனா, பாரதிராஜா, பாலுமகேந்திரா ஆகிய தமிழ் பிரபலங்களைப் பற்றிப் பேசும்போது குறைந்தபட்ச விமர்சனத் தொனி கூட அவர்கள் பற்றியோ, அவர்களது படைப்புகள் பற்றியோ சிறிதளவு விமர்சனங்கள் அவரிடம் வெளிப்படவில்லை. லீனா கடுமையாக எதிர்க்கும் தமிழ் சமூகத்தின் ஆதிக்க கருத்தியல்கள், மனோபாவங்களை உருவாக்கியதில் விகடன் பாலசுப்ரமணியனுக்கும் பாரதிராஜாவுக்கும் இருக்கும் பங்களிப்பை லீனா, மௌனமாகவே கடக்கிறார்.    இந்த முரண்கள் அவரது கவிதைகளிலும் இருக்கிறது.  

 பக்தி இலக்கியப் பரிச்சயம், பாடல், நடனம் சார்ந்த மரபின் தாக்கம் லீனாவுக்கு இருந்திருக்கிறது. ஆனால் அவை எதுவும் லீனாவின் கவிதைகளில் பிரதிபலிக்கப்படவில்லை. சிறுவயதிலேயே அவருக்கு ஆழமாகப் பரிச்சயமாகிய ரஷய இலக்கியங்களின் தாக்கத்தையும் அவரது கவிதை மொழியில் பார்க்கமுடியவில்லை. ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்ப்பதற்கு ஏற்ற, பொது உரைநடையொன்றையே லீனா மணிமேகலை பராமரிக்கிறார். மனோதர்மம் மற்றும் அவரது எழுதும் களம் உக்கிரம் கொள்ளும் போது அவை அருமையான கவிதைகளாகின்றன. கவிப்பொருள் சார்ந்தும், தொடர்ச்சி சார்ந்தும், மொழிபுகள் தொடர்பாகவும் பிரக்ஞைப்பூர்வமான  கவி என்றும் லீனாவைச் சொல்லமாட்டேன். அவரது சிறந்த கவிதைகளுக்கு அருகிலேயே ப்ளஸ் டூ சிறுமி எழுதுவது போன்ற ஆனந்த விகடன் சொல்வனம் பகுதியில் வெளியாகும் தன்மைகொண்ட கடிதக்கவிதைகளும் இருக்கின்றன. (‘ஈர்ப்புவிசை ஆப்பிள் விழுவதில் அல்ல...நியூட்டன் காதலித்திருக்கவில்லை) என்று எழுதி நவீன கவிதைக்குள் வைரமுத்துவையும் அதிர்ச்சியூட்டும்படி ஞாபகப்படுத்துகிறார்.

 சிச்சிலி கவிதைத் தொகுப்பின் சிறந்த கவிதைகள் என்று சுயகுறிப்பு, இருபத்தெட்டு இலைகள், ஓ காதல் கண்மணி, உலர்ந்தவை உலராதவை, இடைவெளி, டெகீலா, குட்டைப் பாவாடை, மழை போன்றவற்றைச் சொல்வேன்.     

 லீனாவின் இந்தப் புத்தகங்கள் வெளியாகும் இத்தருணத்தையொட்டி இந்த இரண்டு புத்தகங்களைப் படிப்பது எனக்கு விசேஷமான ஒரு செயல்முறையைச் செய்து பார்ப்பதற்கு அனுகூலமாக இருந்தது. வாழ்க்கை தொடர்பாக கவிதைகள் தொடர்பாக அவரது செயல்திட்டங்கள் தொடர்பாக விடுக்கும் அறைகூவல்களுக்குப் பக்கத்தில் அவரது கவிதைகளை வைத்துப் பார்ப்பது தான் அந்த செயல்முறை. லீனா தனக்கும் தன் படைப்புகளுக்கும் தன் ஆளுமைக்கும் போடப் பார்க்கும் புரட்சிகர உறைகளைக் கழற்றிவிட்டு அவை சுதந்திரமாகவும், பழந்தன்மை கொண்ட தனிமையிலும் இருக்கின்றன. உறவுவிழைதலுக்கான ஏக்கத்தோடு எளிமையாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் அவை.  

  அவரது கவிதைகளைப் பெண்மொழியின் வருகை என்று சுகுமாரன் குறிப்பிடுகிறார். அதன் உள்ளடக்கம் மற்றும் கருப்பொருள் சார்ந்துதான் அவர் அப்படிச் சொல்கிறார் என்று நான் அவதானிக்கிறேன். என் அறிவையொட்டி ஆண்மொழி, பெண்மொழி என்று பிரிப்பதற்கான தரவுகள் இதுவரை மொழி வெளிப்பாடு அடிப்படையில் கிட்டவில்லை.


உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்
 கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கும்’                 போது அதை உரைப்பவன்ஆணென்றாலும் அவன் பெண்ணாகவே என்னைப் பொறுத்தவரை இருக்கிறான்.


எனக்கு ஆண்களைவிடப் பெண்களைக் குறைந்தளவே தெரியுமாதலால், அவர்களைவிடப் பிராணிகளிடம் அதிகம் சினேகமும் பரிச்சயமும் என்பதால் தமிழ் கவிதைகளை குதிரைக் கவிதை, தவளைக் கவிதை, பறவைக் கவிதை என்று மூன்றாகப் பிரிக்கலாம் என்று நினைக்கிறேன். பறவைக் கவிதை ஒவ்வொரு கவிஞருக்கும் லட்சிய நிலையாக உள்ளது.

 குதிரையும் குதிக்கிறது. தவளையும் குதிக்கிறது. இரண்டுமே பறப்பதற்குக் குதிக்கின்றன. அந்த வகையில் உருவகமோ, காவியச் சாயலோ, மொழியிறுக்கமோ, பாடல் தன்மையோ இல்லாத உரைநடைக் கவிதைகளை தவளைக் கவிதைகள் என்று கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

குதிரைக் கவிதைகளுக்கு உதாரணமாக பிரமிள் தொடங்கி யூமா வாசுகி வரை உதாரணம் சொல்லலாம்.  ஆத்மாநாம், சுகுமாரன், யவனிகா, லீனா மணிமேகலை எழுதும் கவிதைகளை தவளைக் கவிதைகள் என்று சொல்லலாம். குதிரை உயர்ந்த உயிர், தவளை சிற்றுயிர் என்ற தரநிர்ணயம் என்னிடம் இல்லை என்பதை இப்போதும் விளக்க வேண்டியிருப்பதை துரதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். இரண்டும் என்னைப் பொருத்தவரை சம நியாயம் கொண்ட உயிர்கள்தான். 

லீனாவின் புத்தகங்கள் வாயிலாக, அவரது நேர்காணல் நூலிலும் கூட அவரது வயது குறிப்பிடப்படவில்லை. 12,13 வயதில் சோவியத் ரஷ்யாவுக்குச் சென்ற ஆண்டை வைத்துக் கணக்குப் பார்க்கும் போது அவர் என் வயதுக்குச் சற்று அருகில் இருக்கலாம் என்று கணிக்கிறேன்.

அந்த இடத்திலிருந்து பார்க்கும் போது, லீனா தனது சுதந்திரம் ருசிக்கும் படைப்புகளையும் வாழ்க்கையையும் உருவாக்க பல்வேறு போராட்டங்களையும் அனுபவங்களையும் தவறுகளையும் கடந்து அவரே சொல்வது போல ‘இந்த இடத்துக்கு வந்திருப்பதாகச் சொல்கிறார். அவருக்கு அவர் வந்திருக்கும் இடம் தெரிகிறது.

 ஒரு சிறுபத்திரிகை மரபில் வந்த எழுத்தாளனைப் பொறுத்தவரை பத்தாண்டுகளுக்கு முன்புவரை ஒரு எழுத்துக்கலைஞருக்கு ‘இந்த இடமும் கிடையாது. ‘அந்த இடமும் கிடையாது. அந்த இடத்திற்கும் இந்த இடத்திற்குமிடையே இருந்த எல்லைச்சுவர் மிகவும் வலுவானது. ஊடறுக்க இயலாதது.

இடம் அழிந்தபிறகுதான் அவர் இங்கே வருவார். இல்லையெனில், வந்தபிறகு அவரது ‘இடம்’ இல்லாமல் போகும்.   


தமிழில் மீன்கொத்தி என்றும் ஆங்கிலத்தில் கிங்பிஷர் என்றும் அழைக்கப்படும் பறவை அது. கிங்பிஷர் என்ற பெயரும், அதன் லட்சினையும் அடிப்படை மதிப்பீடுகள் கூட இல்லாமல் போன புதிய இந்திய முதலாளித்துவ முகத்தின் குறியீடும் கூட. அதன் இன்னொரு பெயரைத்தான் ‘சிச்சிலி’ என்று லீனா மணிமேகலை தன் கவிதைத் தொகுப்புக்கு வைத்துள்ளார்.    

விதவிதமான நிலப்பரப்புகளைக் கடக்கும் சிச்சிலியாக என்றும் இருக்க அவருக்கு எனது வாழ்த்துகள்.   உங்களது அனுபவங்களும் அறிவும் மேலும் அரிய கவிதைகளையும், உங்களையே பரிசீலித்து, உங்கள் முரண்பாடுகளை ஒன்றுக்கொன்று உரையாடச் செய்து, உடைத்து உடைத்துப் புத்துருவாக்கம் செய்யும் ஆற்றலையும் வழங்கும் லீனா.  

( லீனா மணிமேகலையின் புத்தக வெளியீட்டு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை, அம்ருதா, ஆகஸ்ட் 2016 இதழில் வெளியானது)

Comments