Skip to main content

பாஷோவின் பெண் பூனைகள்

ஷங்கர்ராமசுப்ரமணியன்


மிகச் சமீபத்தில்தான் என் இடத்துக்குள் பூனைகள் வரத் தொடங்கியுள்ளன. ஒருவரின் தனியிடத்துக்குள் வரும்போதுதான் பொருட்கள், உயிர்கள், நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவமும் உண்டாகிறது.
பூனைகள் என்று பன்மையில் சொன்னேன். ஆனால் உள்ளடக்கம் ஒரு பூனைதான். ஒரு பூனை வழியாகப் பல பூனைகள் அங்கிங்கெனாதபடி பரவிவிட்டன. அந்த ஒரு பூனை முதலில் என் மகளின் வழியாகத்தான் என்னிடம் வந்தது. நான் வழக்கமாக எல்லாவற்றையும் உள்ளே அனுமதிப்பதற்கு எதிர்ப்பதைப் போலவே அதையும் வேண்டாம் என்றேன். அவள் அதற்கு உணவிட்டாள். சீராட்டினாள். ஒருகட்டத்தில் நானும் அது வரும் வேளைகளில் கவனிக்கத் தொடங்கினேன். அது தெருப்பூனைதான்.
அதிகாலை நடைப்பயிற்சிக்குக் கதவைத் திறக்கும்போது அது வாலை உயர்த்தியபடி கால்களைத் தேய்த்துக்கொண்டு உள்ளே வருவதையும் வாசல் திரைச்சீலையின் அடிப்பாகத்துடன் சண்டை போடுவதையும் ரசிக்கவும் ஆரம்பித்தேன். அதற்குப் பால், பிஸ்கெட்டுடன் பால்கோவாவும் சுவைக்கத் தந்தேன். அதன் முகம் என்னில் கனியத் தொடங்கியபோது என் கருப்பை கசிய ஆரம்பித்திருக்க வேண்டும். நான் பேணிவரும் பாதுகாப்புக் கவசங்களை எல்லாம் விரைவில் உதிர்த்துவிட்டேன். அலுவலகம் விட்டு வரும்போது எனது கால்சட்டையில் தனது ரோமத்தை தேய்த்து உதிர்க்கப் பழகியிருந்தது. அதன் கொட்டாவியை அதன் வாயின் மேலண்ணம் வரை ஆழ ரசித்தேன்.
சில நாட்கள் வராமல் இருந்தபோது அதைத் தேடவும் ஆரம்பித்தோம். சில நாட்கள் கழித்து உடலில் காயத்துடன் வந்தபோது மிகவும் ஆழத்தில் நாங்கள் வதைபட்டோம். காயம் ஆறி மீண்டும் சவுந்தர்யம் துளிர்க்கும்போது சந்தோஷமாக இருந்தது. ஒருகட்டத்தில் முகங்களிலேயே காயத்துடன் வந்தது. அதற்காக வருந்துவதில்லை; தேடுவதுமில்லை; வரும்போது வெறுப்பதுமில்லை என்ற மனநிலைக்கு வந்த பிறகு வீடு மாற்ற வேண்டி வந்தது. எல்லா சாமான்களையும் ஏற்றிய பிறகு தற்செயலாக விடைகொடுப்பதைப் போல அது வந்தது. அதைத் தூக்கி எனது இருசக்கர வாகனத்தில் வைத்து புது வீட்டுக்குப் போகலாமென்று சொன்னேன். அது இறங்கிப் போய்விட்டது. எனக்கு அந்தப் பிரிவு முன்பே உணர்த்தப்பட்டிருந்தது. பூனைகள் என் கவனத்தின் ஒரு பகுதியான பிறகு, சென்னையிலுள்ள கோயில்களில் பூனைகள் என் கவனத்தில் தென்படத் தொடங்கியுள்ளன. என் சொந்த ஊரான திருநெல்வேலியில் உள்ள ஆலயங்களில் குறிப்பாக நெல்லையப்பர் கோயிலில் நான் அதிகமாகப் பூனைகளையே பார்க்காதது ஞாபகத்தில் உள்ளது. கோபுரத்தின் அடுக்குகளில் இருள் மூலைகளில் அவை பதுங்கியிருக்கலாமே தவிர அவை திரளாகக் கண்களுக்குப் பட்டதேயில்லை.
சென்னையில் குறிப்பாகக் கடற்கரையோரக் கோயில்களில் பூனைகள் இருக்கின்றன. குமரக் கோட்டத்திலுள்ள தெப்பக் குளப்படிகளில் அவை உலவுகின்றன. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சீமாட்டிகளின் தோற்றம் கொண்ட பூனைகள் முதல் தேசலான பணிப்பெண்களின் தோற்றம் கொண்ட பூனைகள் வரை பிரதானப் பிரகாரத்தில் வலம் வருகின்றன. கடற்கரையோரத்தில் மீன்கள் சாப்பிட்டு வளர்ந்த பூனைகள் படிப்படியாக நகர்ந்து பரம்பரைகளைக் கடந்து ஆலயங்களுக்கு வந்திருக்க வேண்டும்.
மீனிலிருந்து பாலை நோக்கிய யாத்திரை என்று சொல்லலாம். எலிகளும் சிறப்பு ஈர்ப்பாக இருக்கும். திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் சமாதி ஆலயத்திலும் பூனைகள் சுதந்திரமாக அலைந்து திரிகின்றன. அங்கே சேவல்கள், நாய்கள், பூனைகள் நம்மைப் போலவே சுதந்திரக் குடிகள். உண்டியல், கருவறை, புத்தக அலமாரி என எங்கும் அலைகின்றன.
ஒரு வியாழக்கிழமையன்று இருளில் பிரசாதப் பாத்திரம் இருக்கும் நாற்காலியின் நடுப்பலகையில், சிலை போல தன் சுருண்ட வால் மேல் முனியாக அமர்ந்திருந்தது ஒரு பூனை. பாம்பன் சுவாமி கோவிலிலிருந்து திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்துக்கும் பூனைகள் பரவும் நாளை நான் எதிர்பார்த்திருக்கிறேன். பெசன்ட் நகரில் கடற்கரையோரம் புதிதாக வந்துள்ள முருகர் கோயிலில் பக்தர்களை விட காதலர்களும் பூனைகளும்தான் அதிகம் காணப் படுகின்றனர்.
சென்ற வாரம் வெள்ளிக்கிழமை கொடி மரத்துக்கு அருகே நடந்து சென்ற சூலிப் பூனையை சூலி என்று தெரியாமல் அதன் வாலை காலால் விளையாட்டாக ஆர்மோனியக் கட்டைகளை அழுத்துவது போல மென்மையாக அழுத்திவிட்டேன். வயிற்றைப் பார்த்த பிறகு சங்கடப்பட்டு கையால் தொட்டுப் பரிகாரம் செய்துகொண்டேன்.
வெளியே வந்த பிறகு நண்பரும் கவிஞருமான ஜயபாஸ்கரனுக்குத் தொலைபேசியில் அழைத்தேன். போகும் ஆலயங்களிலெல்லாம் பூனைகள் தென்படத் தொடங்கியுள்ளதைப் பகிர்ந்துகொண்டேன். சூலிப் பூனையின் வாலைத் தொட்ட கதையைச் சொன்னேன்.
சூலியாக இருக்கும் எந்த உயிரும் வேறு ரூபம் கொண்டுவிடுவதாகச் சொன்னார். பூனைகள் எல்லாமே பெண்கள்தான் என்றேன். அவர் பாஷோவின் கவிதையொன்றைப் பகிர்ந்துகொண்டார்.
‘காதலாலும் பார்லிக்கஞ்சியாலும்
மெலிவு அடைந்திருக்கும்
அந்தப் பெண் பூனை.’
ஆமாம். சரியாகத்தான் இருக்கிறது.

Comments