காண்ஸ்டாண்டைன் பி. கவாஃபி
இதாகாவுக்குச் செல்லத் தயாராகும் போது
உங்கள் பாதை நெடியதாகவும்
முழுக்க முழுக்க சாகசங்கள்
கண்டுபிடிப்புகளைக் கொண்டதாகவும்
இருக்கட்டுமென்று பிரார்த்தியுங்கள்.
லஸ்ட்ரிகோனியன்ஸ், சைக்லோப்ஸ்,
கோபம் உமிழும் பொசீடியானைப்
பார்த்து அச்சம் வேண்டாம்.
உங்களது எண்ணங்களை உயரத்தில்
வைத்திருக்கும் வரை
அபூர்வமான ஒரு கிளர்ச்சி
உங்கள் உயிரையும் உடலையும் கிண்டிக்
கொண்டிருக்கும் வரை
அதைப் போன்றவற்றை உங்கள் வழியில்
காணவே மாட்டீர்கள்.
உங்கள் ஆன்மாவுக்குள் அவர்களை நீங்கள்
கொண்டு வராவிட்டால்
உங்கள் ஆன்மா உங்களுக்கு முன்
அவர்களைக் கொண்டு வந்து
நிறுத்தியிருக்காவிட்டால்
லஸ்ட்ரிகோனியன்ஸ், சைக்ளோப்ஸ்,
காட்டுமிராண்டி பொசீடியானை
நீங்கள் எதிர்கொள்ளவே மாட்டீர்கள்
உங்கள் பயணத்தடம் நீண்டதாக
இருக்கவேண்டுமென
வேண்டிக்கொள்ளுங்கள்
நீங்கள் இதுவரை பார்த்திராத
துறைமுகங்களைக் காணும்போது
துறைமுகங்களைக் காணும்போது
அத்தனை மகிழ்ச்சி, உற்சாகம் கொண்ட
வேனிற்பருவத்தின் காலைப்பொழுதுகளில்
இருக்கட்டும்
பொனீசிய வர்த்தகச் சாவடிகளில்
முத்துச்சிப்பி, பவழம், கற்பூரமணி,
கருங்காலி
புலன்களைத் தூண்டும் நறுமணப்
பொருட்களை
வேண்டுமளவு வாங்க
நீங்கள் பயணத்தை
நிறுத்தலாம்.
பல எகிப்திய நகரங்களை நீங்கள்
பார்க்கலாம்
எகிப்தின் ஞானகுருக்களிடம்
கற்கவும் கற்றதைத் தொடரவும் செய்யலாம்
இதாகா எப்போதும் மனதில் இருக்கட்டும்.
அங்கே சென்று சேர்வதற்குத்தான்
நீங்கள்
விதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
ஆனால் பயணத்தில் எந்த அவசரமும்
வேண்டாம்.
வருடங்கள் எடுத்துக் கொண்டால்
நல்லதுதான்,
நீங்கள் தீவை அடையும்போது முதுமையை
எட்டியிருப்பீர்கள்
இதாகா உங்களை செல்வந்தனாக்கும் என்ற
நப்பாசைக்கு அவசியமின்றி
வழியில் சம்பாதித்த அத்தனையோடும்
நீங்கள் வளமுடன்
இருப்பீர்கள்
இதாகா உங்களுக்கு அற்புதமான
யாத்திரையை வழங்கியது.
அவளின்றி நீங்கள்
கிளம்பியிருக்கவே
மாட்டீர்கள்.
உங்களுக்கு இனி தருவதற்கு அவளிடம்
ஒன்றுமேயில்லை.
அவளை நீங்கள் வறியவளென்று
கண்டாலும்
இதாகா உங்களை ஏமாற்றப் போவதில்லை
அனுபவம் எத்தனையோ அத்தனை
ஞானவான் நீங்கள்
அப்போது இதாகாக்கள் என்பவை
என்னவென்பதையும்
நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
குறிப்புகள்
இதாகா- அயோனியக் கடலில் உள்ள கிரேக்கத் தீவு. ஹோமரின் ஒடிசியஸ் காலத்திலிருந்து
நெடுந்தொலைவுக்குப் பிறகு வரும் லட்சிய இலக்காக இருக்கும் பெயர் இதாகா.
லஸ்ட்ரிகோனியன்ஸ் –
மனிதர்களை உண்ணும் ராட்சதர்கள்
சைக்ளோப்ஸ்- ஒற்றைக்கண்ணர்கள்
பொசீடான் – கடல் கடவுள்
Comments