Skip to main content

அஷ்டாவக்கிரர் அஷ்டாவக்கிரி

ஷங்கர்ராமசுப்ரமணியன்



ஹென்றி கார்ட்டியே ப்ரஸ்ஸனின்

கருப்பு வெள்ளை புகைப்படத்தில் தான்

ரமணரை அவன் முதல்முறை பார்த்தான்

பெண்கள் போல மார்பிலிருந்து தொடை வரை

வெள்ளை முண்டு அணிந்திருந்தார்

அவர் வளர்த்த பசு லக்ஷ்மி

அவரது கால்களுக்கிடையே

தலை நீட்டிக் கொண்டிருந்தது

ரமணர் அவனுக்கு ஒன்றைச் சொன்னார்

அவன் கேட்கவேயில்லை

முதல் புகைப்படம் வழியாக

அவன் தனது இருபதுகளில்

அடைந்த உணர்வு சற்று அசூயை

இரைஞ்சும் அவர் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தது

இப்போதும் ஞாபகத்திலிருக்கிறது

இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன

ரமணரை அவன் படிக்கத் தொடங்கினான்

ரமணரின் படங்களையும்

பார்த்தான்

அறுக்கும் அவரது கண்களைப் பார்க்க

ஆசையாக இருக்கிறது அவனுக்கு

அவரது சொற்கள் அவனது மனச்சல்லடையைத் தாண்டி

கேட்கத் தொடங்கியிருக்கின்றன

சொற்கள் சொற்கள் சொற்கள்

சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது

சமீபத்தில் பார்த்த வீடியோ ஒன்றில்

ரமணர் பின்புறம் காட்டி

கையில் கோலுடன்

அருணாசல மலையில் நடந்து போனார்

ஓரிடத்தில் நின்று

அவனுக்கு முகம் காட்டித் திரும்பி


நான் தான் உனது அஷ்டாவக்கிரர் ன்றார்

அவனுக்குப் புரிந்தது  

அதற்குப் பிறகு

அவன் வீட்டுக்கு வந்த

ரயில் நிலையத்தில் பார்த்த

இரண்டு காகங்கள்

தன்னை எண்கோணலான அஷ்டாவக்கிரர்களாகக் காட்டின

ஒரு நாய்

நானும் அஷ்டாவக்கிரன் என்று சொல்லி

நொண்டியபடி கடந்து போனது

ஒரு மழைநாளில் முக்காடிட்டு
தெருவில் விரைந்த
கிழவி 
அஷ்டாவக்கிரியாக 
தோற்றம் காட்டி மறைந்தாள் 

இருபதுகளில் ஏற்பட்ட அசூயையின் காரணம்

அவனுக்குத் தெரியும்

அது இப்போது முக்கியமும் அல்ல.

Comments