ஒரு இரவு
நேரத்தில் மூன்று கார்கள் துருக்கிய கிராமப்புறச் சாலையில் மூன்று கார்கள்
பயணிக்கின்றன. அந்தக் கார்களில் ஒரு பிரேதப் பரிசோதனை மருத்துவர், அரசு
வழக்கறிஞர், போலீஸ் அதிகாரி, காவல்துறை ஊழியர்கள், குழிதோண்டுபவர்கள், கொலையில்
பங்குபெற்றதாக கருதப்படும் அண்ணன்,தம்பி இருவருடன் சேர்ந்து பயணிக்கின்றனர். குடிபோதையில்
கொலைசெய்து புதைத்த ஒரு மனிதனின் பிணத்தைத் தோண்டியெடுப்பதே அந்தப் பயணத்தின்
நோக்கம்.
கார்களை அங்கங்கே நிறுத்தி பயணம்
தொடர்கிறது. நள்ளிரவில் குடிபோதையில் பிணத்தைப் புதைத்ததாலும், வறண்ட பாலைவனத்தின்
நிலப்பரப்பு ஒரே மாதிரியாகத் தோற்றமளிப்பதாலும்,கொலையாளிகளா ல் சரியாக
இடத்தைச் சொல்லமுடியாமல் குழப்பம் ஏற்படுகிறது. சீக்கிரம் வேலை முடிந்து விடும்
என்ற நினைத்தவர்களுக்கு அந்த நீண்ட பயணம் களைப்பு தருகிறது.
ஒரு கட்டத்தில்
எல்லாரும் பயணத்தில் பேசிக்கொள்ளத் தொடங்குகிறார்கள். இளம் ஆட்டிறைச்சியின் ருசி,
நீரிழிவு நோயால் அடிக்கடி சிறுநீர் வருவது, குடும்பம்,மனைவியர், மரணம், வேலையில்
இருக்கும் அதிகாரப் பாகுபாடு, அலுப்பு, குழந்தைகளைக் கவனிக்கமுடியாதது என அந்தப்
பேச்சு நீள்கிறது. ஒரு கட்டத்தில் இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்பதாக ஒரு மௌனம்
காரில் சூழ்கிறது.
பேச்சின்
மையமாக பெற்றோர்கள் செய்யும் காரியங்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவதில் பேச்சு
மையம் கொள்கிறது.
அரசு வழக்குரைஞர் அருகில் பயணிக்கும்
மருத்துவரிடம் தனியாகப் பேசத் தொடங்குகிறார். கர்ப்பமாக
இருந்த ஒரு பெண், குழந்தையைப் பிரசவித்த பிறகு ஒரு குறிப்பிட்ட தேதி சொல்லி அந்த
தேதியிலேயே மரணம் அடைந்ததாகவும், அது போன்ற ஒரு மரணம் மருத்துவரீதியாக சாத்தியமா
என்றும் கேட்கிறார். அந்த மரணம் இயற்கையானதா, தற்கொலையா என்று மருத்துவர் கேட்க,
அரசு வழக்கறிஞர் இயற்கையானதுதான் என்று உறுதியாகச் சொல்கிறார். சில மருந்துகள்
மூலம் மாரடைப்பை ஏற்படுத்தி இயற்கையானது போல மரணமடைய வழி உண்டு என்கிறார்
மருத்துவர்.
பயணவழியில் வரும் கிராம அதிகாரியின்
வீட்டுக்கு அனைவரும் சிறிது இளைப்பாறச் செல்கின்றனர். அந்த வீட்டில் அனைவரும்
அரிக்கன் விளக்கொளியில் அமர்ந்து ரொட்டி சாப்பிடுகின்றனர். அப்போது, மெழுகுவர்த்தி
ஒளியில் பேரெழிலும் அமைதியும் வாய்ந்த யுவதி ஒருத்தி, அங்கே தோன்றி எல்லாருக்கும் தேநீர்
தருகிறாள். அவள் அந்த கிராம அதிகாரியின் மகள். அந்த இருட்டில் அவளது அழகு எல்லார்
மனதிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. சடலத்தைத் தேடி வந்தவர்களுக்கு
உயிர்ப்பின் மாபெரும் அழகு ஒரு ஆத்மீக உண்மையைச் சொல்லிவிடுகிறது.
அதுவரை கொலை பற்றி வாயே திறக்காமல்
இருந்த குற்றவாளி கெனன், கொலைசெய்யப்பட்டவனின் மகன் தனக்குப் பிறந்தவன் என்கிறான்.
குடிபோதையில் தனக்கும் கொலையானவனின் மனைவிக்கும் இருந்த உறவைச் சொன்னதால், ஏற்பட்ட
தகராறில் தான் அந்த குற்றம் நடந்துவிட்டதாகவும் கூறுகிறான். புதைக்கப்பட்ட பிணம்
அதிகாலையில் கண்டுபிடிக்கப்படுகிறது. அங்கேயே அரசு வழக்கறிஞர் முதல் தகவல்
அறிக்கையை பதிவுசெய்கிறார்.
சடலம் அரசு மருத்துவமனை பிணவறைக்குக்
கொண்டு வரப்படுகிறது. அங்கே இறந்தவனின் உறவினர்கள் கூடி நிற்கிறார்கள். இறந்தவனின்
மனைவியும், 'மகனும்' அந்தக் கூட்டத்தில் நிற்கிறார்கள். அந்தப் பையன் கொலையாளி
கெனன் மீது ஒரு கல்லை விட்டெறிகிறான். கொலையாளி முகத்தை மூடி கதறி அழுகிறான்.
மர்மமாக மரணத்தை சந்தித்த பெண்ணின்
கதையை மீண்டும் அரசு வழக்கறிஞர் மருத்துவரிடம் மீண்டும் மருத்துவமனையில்
தொடர்கிறார். கணவனின் காதல் உறவுகள் தெரியவந்ததன் காரணமாக அந்தப் பெண் தற்கொலை
செய்திருக்க கூடும் என்ற முடிவுக்கு மருத்துவர் வருகிறார். ஒருகட்டத்தில் அந்தப்
பெண், வழக்கறிஞரின் இறந்த மனைவியாக இருக்கலாம் என்று தோன்றச் செய்கிறார்
இயக்குனர்.
அரசு மருத்துவர், பிணவறையில் தனது
சோதனை முடிவுகளை உதவியாளருக்குச் சொல்லியபடி, போஸ்ட்மார்டம் செய்கிறார்.
இறந்தவரின் நுரையீரலுக்குள் மணல் இருப்பதைப் பார்க்கும் மருத்துவர், அந்த விவரத்தை
தனது அறிக்கையில் பதிவுசெய்யாமல் விடுகிறார். கொலைசெய்யப்பட்டவரின் மனைவியை
அழைத்து உடைகளை மருத்துவர் தருகிறார். அந்த பையைச் சுமந்தபடி துயரத்துடன்
இறந்தவனின் மனைவியும், அவளது குட்டி மகனும் மலைப்பாங்கான பாதையில் வீட்டுக்குத்
திரும்புவதை மருத்துவர் பிணவறை ஜன்னலில் இருந்து பார்க்கிறார்...
அவர்கள் செல்லும் பாதைக்கு சற்று
கீழே மைதானத்தில் சிறுவர்கள் கால்பந்தாட்டம் ஆடுகிறார்கள். அப்போது அடிக்கப்பட்ட
பந்து ஒன்று மேலே நடந்து கொண்டிருக்கும் பையனின் அருகில் வர அவன் அதைப் பிடித்து
மைதானத்துக்குத் திரும்பி அடித்து அனுப்பிவிட்டு அம்மாவுடன் சேர்ந்து நடக்கிறான்.
டால்ஸ்டாயின் குறுநாவலைப் போல பெரிய
திருப்பங்கள் இன்றி உரையாடல் வழியாகவே பெரும்பகுதியும் அரையிருட்டில் கழியும்
திரைப்படம் இது. குடும்பம், குடும்ப உறவில் கடைபிடிக்க வேண்டிய நேர்மை போன்ற
மதிப்பீடுகள் இன்னும் பெரிதாக மாறாத ஒரு கலாச்சாரச் சூழலில் எடுக்கப்பட்டிருப்பதால்
இந்தியப் பார்வையாளனுக்கும் நெருக்கம் தரும் படம் இது. பெரிய நிகழ்வுகள் முன்பு
முன்பு மாற்றம் கொள்ளும், நெகிழும் எளிய மனிதர்களின் கதை இது. பார்ப்பதற்கு எளிதாக
தோற்றம் தரும் அன்றாட நடப்புகளிலும் உறவுகளிலும் உள்ள புதிர்களை அதன்
மர்மத்தொனியிலேயே இப்படத்தில் கையாளப்பட்டுள்ளன. மரணம், எந்த வழியிலும் வரலாம்
என்பது இப்படத்தின் உட்த்வனியாக உள்ளது.
இப்படத்தின் இயக்குனர் நூரி பில்கே
சிலான். மருத்துவராகவும், வழக்கறிஞராகவும் நடித்திருக்கும் முகம்மது உஸ்னரும்,
டானர் பிர்செல்லும் வாழ்வின் அலுப்பான, சோகப் பரிமாணத்தை மிக அழகாக
வெளிப்படுத்துபவர்கள். 2012 இல் வெளியான திரைப்படம் இது.
Comments