பளபளக்கும் கண்கள் ஆடும் வால்
பிரபஞ்சம் நாய்க்குட்டி வடிவத்தில்
விளையாட அழைக்கிறது.
- ஒரு
ஹைகூ கவிதை
ஆம், ப்ரவுனி.
கோலி உருண்டைக்குள்
பூவாய் ஒளிரும்
ஒளிதான் உன் கண்கள்
அந்தப் பூவிலிருந்து
நீள்வதுதான்
உனது ஆடும்
துடுக்குவால்
அழைக்கிறது
எல்லையற்று விளையாட.
விளையாடு
விளையாட்டை நிறுத்தும் வரை
மரணமில்லை
விளையாடு
இலக்கை மறந்து
இலக்கையே விளையாட்டாக்கி
விளையாடு
விளையாடும் வரை மரணமில்லை.
விளையாடு
உலகத்தைப் பந்தாக்கி
உன்னையே
பந்தாகப் பாவித்து
விளையாடு
பால்கனி
முற்றம்
சிறை மதிலோரம்
படுக்கையறை
சடலக்கூடம்
பேதமற்று விளையாடு
சின்னது பெரியது
காற்று போனது
எல்லாவற்றுக்கும்
உயிர்கொடுத்து விளையாடு
இறந்த பந்தென்ற ஒன்று இல்லை
எலும்பு உடையாது
உயிர்போகாது
அனுமன் போல
எத்தனை உயரமென்றாலும்
குதி பற
உடல் காற்றாக மாற
மனத்தை உருட்டி விளையாடு
உன் இதயம் நாக்காகட்டும்
வெளியே காட்டு
தப்பொன்றுமில்லை
தேகம் உலை போல் எரிந்து
விசிலென இரையட்டும்
விளையாடு
000
உனது குரைப்பு
இன்னும் பிஞ்சாகவே
இருக்கிறது
அது உனக்குத் தெரியவில்லை
அதனால் பெரிய நாய்களின் குரைப்போடு
போட்டிப் போட்டுக்
குரைக்க
வேண்டாம்.
தொண்டை கெட்டுப்போகும் ப்ரவுனி
அதனால் கொஞ்சம் சோடா சாப்பிடு.
000
சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார்
உன் தட்டில் போடப்பட்டதை
நீ சாப்பிடு
நான் தின்னுவதைப்
பார்த்து ஏங்காதே
ப்ரவுனி.
000
Comments