மார்டின்
பட்லர்
(போர்ச்சுகீசிய நாட்டில்
வசிக்கும் மார்டின் பட்லர், சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த ரஷ்ய மெய்ஞானியான
குர்ட்ஜிப் அவர்களின் நேரடி மாணவியான ரீனா ஹேண்ட்சின் உதவியுடன் ஆன்மப்
பயிற்சிகளில் பல்லாண்டு காலம் ஈடுபட்டவர். மனித நிலைமைகள் பற்றிய ஆழமான
புரிதலுக்கு இவர் வருவதற்கு ஸ்பினோஷா போன்ற தத்துவவாதிகளையும் முறையாகக்
கற்றிருக்கிறார். martinbutler.eu என்ற
இணையத்தளத்தில் கட்டுரைகளையும் வீடியோக்களையும் தொடர்ந்து இட்டுவருகிறார். என்
காலத்தையும் என்னைச் சுற்றியுள்ள நிலைமைகளையும் புரிந்துகொள்வதற்கும் இந்தச்
சூழ்நிலைகளுக்குள் எனது விழைவுகள், ஆசைகள், வலிகள் ஆகியவற்றைக் குறைத்துக்
கொள்வதற்கும், எனக்கு வழங்கப்பட்டுள்ள வளங்களினூடாக நிறைவாகவும் நீதியாகவும்
இருப்பதற்கும் மார்டின் பட்லரின் எழுத்துகள் உதவிகரமாக இருக்கின்றன. அவரது
எழுத்துகள் உரிமைத்துறப்பை அறிவித்திருப்பதால் எனக்குப் பிடித்தவற்றை இங்கே
மொழிபெயர்த்து வெளியிடுகிறேன். இங்கே தொடர்ந்து அது வெளியாகும். தன்னில் மட்டுமே
வேலை சாத்தியம் என்று நம்புபவர்கள் அவரது எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கலாம்.
மார்டின் பட்லர் என்னிடம் ஏற்படுத்திய பயன்விளைவை இன்னும் சில வாசகர்களும்
அடையலாம் என்ற நம்பிக்கையில் இந்தக் கட்டுரைகளை மொழிபெயர்க்கிறேன்.)
நாம்
அனுபவம் கொள்ளும் உலகம், அதற்கு நாம் அளிக்கும் உருவகிப்பு மட்டுமே- அதுவே நிஜ உலகம் அல்ல. உலகம் எப்படி இருக்கிறதோ அப்படியே அறிந்துகொள்வதற்கு வழி இல்லையென்பதால் நம்மால் உலகத்தை அறிய முடியாதென்பதே நிஜம். அப்படியெனில்,
சர்க்கரை இனிப்பானதா?
சர்க்கரை அதனளவில் பல்வேறு பண்புகளைக் கொண்ட
குறிப்பிட்ட மூலக்கூறாகும்; இனிப்பு அதன் பண்புகளில் ஒன்றல்ல. மனித நாக்கு
தான் அதற்கு இனிமையைச் சேர்க்கிறது. இனிப்பு எப்படி தன்வய அனுபவமோ, நிறமும், இசைமையும்,
அழகும், ஒழுங்கும் இன்னபிறவும் தன்வய அனுபவங்களே.
உலகம்
பற்றிய நமது அனுபவம் தன்பால்பட்டது- அதுவொரு தன்பால்பட்ட மெய்மை. நாம்
சிந்திக்கும் வழியும் தன்மயமானதே- தர்க்கம், கணிதம், பகுத்தறிவு, காரணம் மற்றும்
விளைவு எல்லாமும். நமது பகுத்தறிவால் மெய்மையைப் பற்றிவிட முடியுமென்ற எந்தவிதமான
பாவனையும் அப்பட்டமான முட்டாள்தனமே. நமது அறிவால் புரிந்துகொள்ளக் கூடிய
கட்டமைப்புகள் முழுவதும் அறிவாலேயே சிருஷ்டிக்கப்பட்டதுதான். நமது அறிவைப் பற்றி
உலகத்துக்கு எதுவும் தெரியாதென்பதோடு நமது அறிவால் அது நிர்ணயிக்கப்படுவதும் இல்லை. உலகை நமது மனங்கள் உருவகிக்கும் வழியைப் புரிந்துகொள்ளவே, எல்லா அறிவியல்களும் உண்மையில் முயல்கின்றன. இந்த உருவகிப்புக்கு வெளியே உள்ள உலகத்தை, நம்மால் தொடர்பு கொள்ள
இயலாத உலகத்தைப் பற்றி அறிவியல்கள் பொருட்படுத்துவது இல்லை. நாம், தன்மயப்பட்ட சொந்த
மெய்மைக்குள் புலன்வயமாகவும் கருத்து ரீதியாகவும் அடைத்துத் தாழிடப்பட்டுள்ளோம்.
இந்த
நிலை அப்பட்டமாக ஒரு கேள்வியை எழுப்புகிறது. நம்மால் அறியக்கூடியதுதான் என்ன?
பதிலும் அப்பட்டமானதுதான். நம்முடைய மனங்களின் இயல்பை, உலகை நமக்கு நாமே உருவகித்துக் கொள்ளும் வழிவகையை நாம் அறிய இயலும். ஆனால், அதற்கு வெளியே இருப்பதாகச் சொல்லப்படும் அறிவு பாவனை
எல்லாமே வெறும் பேராசைதான்.
நமது
மனங்கள் உலகைப் படைப்பதில்லை. ஆனால் உலகை அனுபவம் கொள்வதை மனம் தான் வரம்புறுத்துகிறது.
வாழ்வும் மரணமும் நமது சொந்த உருவகிப்புகள் தான் – நமது அனுபவங்களை மனம்
வகைப்படுத்துவதற்கான வழியாக காலம் உள்ளது. பிறப்பு, இறப்பு என்பது உண்மையிலேயே
இருக்கிறதா? இமானுவேல் கான்ட் உறுதிப்படுத்துவது போல மெய்மையின் பண்பாக காலமில்லையென்றால்,
பிறப்பும் இறப்பும் இல்லை. மெய்மையை உருவகிக்கும் வழியின் ஒரு பண்புதான் காரியகாரணத்
தொடர்புறுத்தலெனில் சுதந்திர விருப்புக்கும் நமது வாழ்க்கையில் வழியே இல்லை.
நமது
உலகம் என்பது தன்மய உருவகிப்பு தான் என்பதை உணர்வதால் ஏற்படும் பாதகமென்னவெனில்,
அனுபவத்துக்கு அப்பாற்பட்ட அறிவு பாவனைகளை நாம் இழக்க நேர்கிறது. அதன் நேர்மறை
அம்சம் என்னவென்றால், நமது தன்மய உருவகிப்பு, ஒரு எதார்த்தமாக நம்மேல் செலுத்தும் தாக்கத்தை
வலுவிழக்கச் செய்வதற்கு அதைப் பயன்படுத்தலாம்.
பிறப்பு-இறப்பு என்பது இல்லை, காரணமோ
காரியமோ இல்லை, இடமோ, காலமோ, நிறமோ, இசைமையோ இல்லையென்றும் இதைச் சொல்லலாம்.
மத்திய காலத்தில் பயிலப்பட்ட எதிர்மறை இறையியலையே இது பிரதிபலிக்கிறது. கடவுள்
இல்லை, அவர் ஒரு நிறமல்ல, அவர் வெளியில் இல்லை, அவர் காலத்தில் இல்லை என்று
அவர்கள் சொன்னதையொப்ப.
நாம் எல்லாரும்
தன்மயமான உருவகிப்பில் சிக்கியிருப்பதால், மெய்மையைப் பற்றி எதுவுமே அறிந்துகொள்ள
முடியாதென்பதை நம்மால் ஒப்புக்கொள்ள முடியுமானால், மெய்மையின் இயல்பு குறித்து
கொஞ்சூண்டு மேலதிகமாகச் சொல்வதற்குச் சாத்தியமும் ஆகலாம். அழகிய முரண்தான்,
அத்துடன் நான் முரண்களை விரும்புபவன்.
Comments