தான் எழுதிய படைப்புகள் காரணமாக சீன அரசால் வேட்டையாடப்பட்டு தற்போது லண்டனில் வசிக்கும் 65 வயது எழுத்தாளர் மா ஜியானின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. ஓவியக் கலைஞருமான மா ஜியானின் ஓவியங்கள், 1983-ம் ஆண்டில் ‘ஆன்மிக மாசுபாடு’-ஐ ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டு கிழித்தெறியப்பட்டு அழிக்கப்பட்டதோடு சீன அரசால் கைதும் செய்யப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவரது தனிப்பட்ட வாழ்விலும் புயல் வீசியது. விவாகரத்து பெற்ற அவரது மனைவி, மா ஜியானை தமது மகளைப் பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை.
கலைஞனாகவும் தனிப்பட்ட வகையிலும் நேர்ந்த துயரங்களாலும் தன் எதிர்காலம் குறித்த கேள்விகளாலும் துளைக்கப்பட்டு பதில் தேடி மூன்றாண்டுகள் சீனா முழுவதும் கால்நடைப் பயணத்தை மேற்கொண்டார். பௌத்த சமயத்தைத் தழுவினார். திபெத்திலும் சிறிது காலம் வசித்தார். தனது திபெத்திய அனுபவங்களையொட்டி ஆங்கிலத்தில் எழுதிய கதைகளின் சிறிய தொகுப்பே ‘நாக்கை நீட்டு’.
உலகின் கூரை என்று சொல்வதற்குத் தகுந்த உயரத்தில் காற்றழுத்தம் குறைந்து, கடினமான தட்பவெப்பச் சூழ்நிலைகளுக்குள் அகமும் புறமுமாக அதீதச் சூழலுக்குள் அலையும் மனிதர்களின் கதைகள் இவை. இது சிறுகதைத் தொகுப்பாக எழுதப்பட்டிருந்தாலும் ஒரு நாவலாகவும் படிக்க முடியும். காமமும் மரணமும் இந்தக் கதைகளை ஒரு நாவலாகத் தைத்துள்ளன.
எழிலும் கோரமும் சேர்ந்து பேரன்னை போல நெடிதுயரந்து இமயமலை நிற்கிறது. அதன் மடியில் வாழும் மனிதர்களால் அனுசரிக்கப்படும் உணவும், கழுத்தறுக்கப்பட்ட கடமாவின் ரத்தத்தைப் போல் பச்சையாகவே இருக்கிறது. உணவும் அடிப்படை வசதிகளும் பற்றாக்குறையில் இருக்கும் போது உடல் இச்சையே உயிர் என்னும் ஆகுதிக்கு நெய் வார்க்கிறது. இச்சை பெருகும் போது மரணம் இயல்பாகச் சமீபித்து விடுகிறது. மரணத்துக்கு அருகில் குற்றவுணர்வும் அச்சமும் மீட்புக்கான வேண்டுதலும் மரமாக முளைக்க எலும்புகளின் குவியலில் புத்தர் அங்கே தோன்றிவிடுகிறார். காமம், ரணம், குற்றவுணர்வு, மரணத்தின் எலும்புகளாலான மலையின் மீது அமர்ந்திருக்கும் புத்தரை இந்தக் கதைகளில் பார்க்கிறோம்.
சீனாவின் அரசியல் ரீதியான ஒடுக்குமுறையாலும் நிலவும் வறுமையாலும் நவீன காலத்தில் காயப்படுத்தப்பட்டிருக்கும் பௌத்தத்தின் பூர்விக நிலமான திபெத்தை, ஒரு பயணியின் துல்லியமான கண்களின் வழியாகப் பார்க்கிறோம். ஆசிரியர் ஒரு ஓவியராக இருந்தது ஒரு அனுகூலம். திபெத்திய கலாசாரத்துக்கு அன்னியன் என்ற ஆசிரியரின் அனுகூலம் வாசகனுக்கும் உதவியாக இருக்கிறது. அற்புதங்கள் என்று தோன்றக்கூடிய நிகழ்ச்சிகளும் நிதானமாகவே சொல்லப்படுகின்றன.
‘நீலவானும் அந்தப் பெண்ணும்’ முதல் கதையில் யம்துரோக் ஏரிக்கரைக்கு அருகே இறந்த பெண் மையிமாவின் விண்ணடக்கத்தைப் பார்க்க அவள் வசித்த வீட்டுக்குக் கதைசொல்லி அழைத்துச் செல்லப்படுகிறார். மையிமா வாழ்ந்த வீட்டின் சுவரில் ஓவியமாக கோரப்பற்களைக் காட்டியபடி வாழ்க்கைச் சக்கரத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் மரணக் கடவுள் யமன்தான் இந்தக் கதைகளை நம்மிடம் கூறுகிறார். இக்கதையில் மையிமாவுக்கு நடக்கும் விண்ணடக்கச் சடங்கில் அவளது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வல்லூறுகளுக்கு இரையாக இடப்படுகிறது. ஒரே ஒரு முறை கதைசொல்லியின் புகைப்படக் கருவியின் பொத்தான் மையிமாவின் விண்ணடக்கச் சடங்கில் இயங்க மறுக்கிறது. அது மையிமாவின் மறுப்புதான் என்று கதைசொல்லி உறுதிசெய்யவில்லை.
முதல் கதையில் தந்தையின் பாலியல் தொந்தரவிலிருந்து தப்பித்து இரண்டு பேருக்கு மனைவியாகி பிரசவத்தில் இறந்துபோகும் மயிமா, தந்தையின் இச்சைக்காட்பட்டு கணவனாலும் கைவிடப்பட்டு தொலைந்து போன பெண், பேராசையால் விபரீதமாக மரணிக்கும் கர் மடாலய ஸ்தூபி நிர்மாணக் கலைஞர் சங்பூச்சாவின் மனைவி குலா, பெண் புத்தராவதற்கான சடங்கில் உயிரிழக்கும் யுவதி சாங்சாங் தாஷி என அனைவரும் பெண்கள். புராணமும் அன்றாட நிகழ்வுகளும் உண்மையும் புனைவும் துல்லியமாகக் கோக்கப்பட்ட கதைகள் இவை.
திபெத்தின் இயற்கையை ஒப்ப, இந்தக் கதைகளின் பெண்கள் எல்லாரும் மிகக் குறைந்த சந்தோஷத்தையும் அதீதமாகத் துக்கத்தையும் மரணத்தையும் தங்கள் உடலில் சுமப்பவர்கள் அவர்கள். ஆண்கள் சாகச விழைவு, பாவ உணர்ச்சிக்குட்பட்டு வாழ்க்கைச் சக்கரத்துக்குள் மரணத்துக்காகக் ஆலயங்களிலும் அறைகளிலும் தனியாகக் காத்திருக்கிறார்கள். துன்பம் என்னும் கழியில் ஒன்றையொன்று விரட்டிச் சுழலும் திசைகாட்டிகளைப் போல ஆண்களும் பெண்களும் தென்படுகின்றனர். பெண் என்னும் அபரிதமிதத்தை உறிஞ்சிச் சலித்திருப்பவனாக ஆண் தென்படுகிறான்.
இந்தக் கதைகள் முழுவதும் உடலின் இருட்டுக்குள் நாம் அறியாத உறுப்புகள், உணர்வு நிலைகளுக்குள்ளும், புரிதல்களுக்குள்ளும் ஆசிரியர் அழைத்துச் செல்கிறார்.
இகம், பரம் இரண்டையுமே அடைவதற்கு லௌகீகத்திலும் ஆன்மிகத்திலும் உடலே சாதனமாக ஊடகமாகக் கருதப்படுகிறது. சமயங்கள், அரசு, வர்த்தகம் ஆகியவற்றுக்கும் உடலே மூலதனம்.
‘தீட்சையின் கடைசி நிலை’ கதையில் புத்த தீட்சையை ஏற்க சிறுவயதிலிருந்து கடுமையான நியமங்களை அனுசரித்த சாங்சாங் தாஷி இரண்டாம் நாள் உறைநதியின் குளிர் தாளாமல் இறந்துபோகிறாள். ஒரேயொரு நாள் தான் மீதம். அவள் உடல் அவளை புத்தராவதிலிருந்து தோல்வியடைச் செய்துவிட்டது.
இந்தக் கதைகள் இப்படித்தான் உடலைத் தழுவுகின்றன; நம் உடலை அறுத்துக் கடைகின்றன; உடல் வழியாகவே உடலைப் பூரணமாக அறிவதன் வாயிலாகவே அதைக் கடக்கும் முயற்சியையும் பரிசீலிக்கின்றன. அந்த முயற்சியின் வியர்த்தத்தையும் அதன் துயரத்தையும் பேசுவதால் அவை நவீன காலக் கலைப்படைப்பாகின்றன. காய்ந்த எலும்பின் கடைசி நினைவு வலியாகத்தானே இருந்திருக்கும்.
சமீபத்தில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளில் நம் மரபுக்கு நெருக்கமான படைப்பு ‘நாக்கை நீட்டு’. திபெத்தைப் போன்றே நெடிய மரபின் சுமை கொண்ட, தற்போது வெறும் நுகர்வுச் சந்தையாக மாறிக் கொண்டிருக்கும் நமது பண்பாட்டிலிருந்து இந்தக் கதைகளை வாசித்து நம்மையும் பரிசீலித்துக் கொள்வது அவசியமானது.
Comments