Skip to main content

இது துயரம்தான் பழனிவேள்காலையில் கவின்மலரிடம் தொலைபேசிய போது தான் நண்பர்களால் நரேந்திரன் என்று அழைக்கப்படும் பழனிவேளின் மரணச் செய்தியைத் தெரிந்து கொண்டேன். பழனிவேளைத் தெரியுமா என்ற தொனியிலேயே விஷயம் உணரப்பட்டுவிட்டது. வே. பாபு மரணச் செய்தியும் அப்படித்தான் வந்தது- ஏற்கனவே தெரிந்தது உறுதிப்படுத்தப்படுவது போல. பழனிவேள் உடல்நலமில்லாமல் இருப்பது பற்றி கண்டராதித்தன் சில மாதங்களுக்கு முன்னர் என்னிடம் சொல்லியிருந்ததை மனம் கோத்திருக்க வேண்டும். இது துரதிர்ஷ்டமானது தான். பகலிரவுப் பொழுதுகளை, சில போதைப் பொழுதுகளை, படைப்பூக்கமிக்க தருணங்களைப் பகிர்ந்த நம் வயதையொத்தவர்கள் இல்லாமல் போவது.

பழனிவேளை நண்பர் என்று சொல்லமுடியாது. 90-களின் இறுதியில் 2000-ம் ஆண்டின் துவக்கத்தில் புதுக்கவிதையின் வடிவத்தை, உள்ளடக்கத்தை மாற்றிய, கவிதை வடிவத்தை வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான லட்சியப்பூர்வமான கருவியாகப் பாவித்த இளம் நவீன கவிஞர்களின் இயக்கம் ஒன்று செயல்பட்டது. திருநெல்வேலி, நாகர்கோவில்,  திருவண்ணாமலை, சென்னை, திண்டுக்கல் என வேறு வேறு இடங்கள் சார்ந்து அவர்கள் இயங்கினார்கள். எல்லாரும் சேர்ந்து கூடி பேசிக் கொண்டனர் என்றெல்லாம் சொல்லமுடியாது. அடிக்கடி பார்த்து நட்பெல்லாம் பாராட்டாமலேயே அவர்களுக்குள் மதிப்பும் மரியாதையும் அரிதான உரையாடல்களும் இருந்தன. ஆனால் படைப்பு சார்ந்து அவர்கள் ஒரு புதிய உணர்வையும் ஆற்றலையும் பற்றவைக்கப்பட்டது போலப் பகிர்ந்துகொண்டவர்கள். அந்த இயக்கத்தின் கடைக்கொழுந்து என்று பழனிவேளைச் சொல்வேன்.

ஒரு தோற்றுப் போன விவசாயியின் வேரைக் கொண்ட உலகை நோக்கிக் கிளைகளால் தழுவ முயலும் கவிஞன் பழனிவேள். ஒதுங்கிய தெருவிலும் சோடியம் விளக்கு தொகுதியை எழுதிய மலைச்சாமியையும் பிரம்மராஜனையும் பழனிவேளின் கவிதைகளில் தடம்காண முடிகிறது. வான்கோவும் ஏழு கன்னிமார் குளித்த வடதமிழ்நாட்டு கிராமத்துச் சுனையும் சந்திக்கும் இடம் பழனிவேள்.

மகாபாரதக் கூத்துக் கதாபாத்திரத்தின் ஆகிருதியைக் கொண்ட பழனிவேள், அறிமுகமாகும்போதே ஆரவாரம், சட்டென வெளிப்படும் வன்முறையுடன் தான் எங்களுக்கு அறிமுகமானார். மணல் புத்தகம் என்ற கவிதை சார்ந்த சிற்றிதழைத் தொடங்கும் எண்ணத்துடன் நான் இருந்தபோது முதலில் அதற்கு ஆதாரமான ஊக்குவிசையாக நினைத்தது திருவண்ணமாலை சார்ந்த நண்பர்களைத் தான்.

ஆரணியில் அப்போது தேவதாஸ் இருந்தார். ராணி திலக், ஸ்ரீநேசன், அசதா, பழனிவேள் எல்லாரையும் மணல் புத்தகத்துக்கு பங்களிப்பு கேட்க எண்ணி திருவண்ணாமலையில் ஒரு குன்றில் காலை பனிரெண்டு மணிவரை பேசினோம். போர்ஹே கவிதைகள் சிலவற்றை அங்கே மொழிபெயர்த்து அசதாவும் நானும் வாசித்தோம். தமிழ் சிற்றிதழ் சூழலில் ஒரு மடைமாற்றத்தை  நிகழ்த்திவிட வேண்டுமென்ற நம்பிக்கையை அந்தச் சந்திப்பு ஏற்படுத்தியது. அப்போது தான் சில நண்பர்களை முதல் முறையாகச் சந்தித்தோமென்று ஞாபகம். புது எழுத்து மனோண்மணியும் இருந்தார். ஜி. முருகன் இருந்தார். 

எங்கள் அப்போதைய குலச்சடங்குகளின் ஒரு அங்கமாக மலையிலிருந்து இறங்கி நேராக ஒரு டாஸ்மாக் பாருக்கு நண்பர்கள் அனைவரும் சென்றோம். தளவாய் பார்த்துவந்த குமுதம் தீராநதி மாத இதழ் சார்ந்து ஏதோ பிரச்சினையை பழனிவேள் எழுப்பினார். என்னையும் தளவாயையும் தவிர மற்ற நண்பர்களுக்கு பழனிவேளின் உக்கிரம் ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும். நான் பழனிவேளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். கடுமையான வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டன. ஒருகட்டத்தில் பழனிவேள் மேஜையின் மீது தன் செருப்பை எடுத்துவைத்தார். நானே அப்போது சின்னதொரு ரௌடியாக சிற்றிதழ் சூழலில் அறியப்பட்டவனாக இருந்தும், பெரிய ரவுடிகளோடு புழங்கிய அனுபவம் உள்ளவனாக இருந்தும், பழனிவேளின் முரட்டுத்தனம் எனக்கு மிகவும் புதியதாகவே இருந்தது. செருப்பு வைக்கப்பட்ட நிமிடத்தில் அந்த இடத்தில் என்னையும் தளவாயையும் தவிர எல்லாருமே தெறித்து ஓடிவிட்டனர்.

திருவண்ணாமலைக்குக் கணிசமான பணத்தை அப்போதைய காலத்தில் நாங்கள் கொண்டு போயிருந்தும் கொண்டு போன பணம் பில் கொடுத்ததில் தீர்ந்துவிட்டது. பவா வீட்டுக்குப் போய் பணம் வாங்கித்தான் திரும்ப முடிந்தது.

அடுத்து ஒரு முறை, எனது திருமணத்துக்கு முன்னால் நான் இருந்த அம்பாள் நகர் அறைக்கு வந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு ஒரு இரவு தங்கி ஊர் திரும்பினார். அன்று மிகவும் சுபாவமாகப் பேசிக் கொண்டிருந்தோம். அவரது பராக்கிரமங்களெல்லாவற்றையும் களைந்து பேசிக் கொண்டிருந்த இரவு அது.

அதற்குப் பிறகு நெருக்கமாக பழனிவேளை நான் பார்க்கவேயில்லை. தவளை வீடு தொகுதி உயிர்மை வெளியீடாக வந்தது. சென்னைக்கு வந்து சினிமாவுக்கு முயன்றதாக நண்பர்கள் சொல்லத் தெரியும். நடுவில் ஒரு கூட்டத்தில் பிரம்மராஜனிடம் நேரில் விமர்சித்த கவிஞர் கண்டராதித்தனைக் கண்டித்து அவரை தாறுமாறாக பழனிவேள் அடித்த செய்தி வந்தது. ‘இன்னர் ப்ளோ சார்ந்து மகாபாரத ஓவிய, கவிதைக் கண்காட்சிக்கு வந்திருந்தார் பழனிவேள். அப்போதுதான் கடைசியாகப் பார்த்திருப்பேன்.

மகாபாரதக் கூத்து சார்ந்த ஓவியங்களுக்கு நான் எழுதிய கவிதைகளை அவர் மிகவும் விரும்பினார். என் மீது அன்று மிகுந்த நேசத்துடன் நடந்துகொண்டார். அதுகுறித்து நண்பர்களிடமும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதன்பின்னர், முகநூலில் எல்லாரையும் கடுமையாக வசைபாடுபவராக, குறிப்பிட்ட சாதிய நோக்கு, பிராந்திய, வாழ்க்கை நோக்குகளுக்குள் குறுகிப்போனவராக அவரது ஸ்டேட்டஸ்களை என்னால் பார்க்கமுடிந்தது. கிட்டத்தட்ட அவர் தனது குருவாகவே பாவித்துவந்த பிரம்மராஜன் போன்றவர்கள் பழனிவேளின் இப்படியான நடவடிக்கைகளில் என்ன தலையீட்டைச் செய்தார்கள் என்று தெரியவில்லை.

அன்றாட வாழ்க்கை தரும் சவால்கள், நெருக்கடிகள், பொறுப்புகளிலிருந்து கலைஞன் விடுபடுவதற்கான வழிகளில் ஒன்றாக மது அருந்துவதும் பார்க்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. விடுபடுவதற்கும் லேசாவதற்கும் உபாயமாகக் குடியே அப்போது எங்களுக்கு இருந்தது.

 குடிப்பது, சண்டையிடுவது, கசப்புகளையும் புகார்களையும், வசைகளையும் அவரவர் சக்திக்கு ஏற்ப வெளிப்படுத்துவது என்பதெல்லாம் எங்கள் நடவடிக்கைகளாக இருந்தது. அதை தார்மீகச் செயல்பாடு என்றும் படைப்பூக்கத்தின் ஓர் அங்கம் என்றும் நினைத்தோம். அக்காலகட்டத்தில் நாங்கள் எழுதிய கவிதைகளின் நிலங்களும், வாழ்க்கைகளும், பறவைகளும் கொண்டிருந்த ஒளியில் இப்போதும் உணரக்கூடியளவில் இருக்கும் அதன் சுடர் நிறங்களில் எங்களுடைய அப்போதைய மடத்தனங்களும் குணக்கேடுகளும் கள்ளமின்மையும் சேர்ந்தே இருக்கின்றன நண்பர்களே.

சில வீழ்ச்சிகள், சில பிறழ்வுகள், சில மறுபரிசீலனைகள், சில உயிர்ப்புகள், சில மரணங்கள் என அந்தக் கதை பல ரகசியக் கிளைகளாகப் பிரிந்துள்ளதை இப்போது திரும்பிப் பார்க்கமுடிகிறது.  
அப்படிப்பட்ட இன்னொரு மரணம் பழனிவேளுடையது. தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா...

தன்னைக் கைவிட்ட விவசாய பூமியிலிருந்து, அதற்குப் பக்கத்திலிருக்கும் தனது வீட்டிலிருந்து தனது தடித்த வசைகளையும் சேர்த்தே நேசத்தைப் பகிரத் துடித்திருப்பான் பழனிவேள். நமக்குப் புரியவில்லை. அவனது வரவேற்பு இப்படியாகவே இருக்கிறது.

வாரும்
நீவிரோ வேன்கோவின் சுவைஞர் என்றால்
நன்கு வளர்ந்த சூரியகாந்தித் தோட்டத்தைத்தருவேன்
பின்னோடும் மலையும் விளிம்பில் சூரியனும்
சத கோடி திரை வானும் இனாம்
என் வசைகளைப் பொறுப்பாயேயானால்
ஏழு கன்னிமார் குளித்த சுனையும்
நத்தத்தில் மீதமுள்ள ராஜேந்திரசோழன் பட்டயமும்
கவர்ந்த ஆநிரை மீட்ட மூபாட்டன் கள்ளும்
பன்றிக்கொழுப்பில் சுட்ட பணியாரமும் கூட.  

Comments