Wednesday, 18 September 2019

இப்பாலில் அப்பால் இல்லையா யவனிகா


சமீபகாலமாக துருக்கிய சினிமா இயக்குனர் நூரி பில்கே ஜெலான்-ன் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அகிரா குரசவா, பெர்க்மன், அந்த்ரேய் தார்க்கோவ்ஸ்கி வரிசையில் சினிமாவை ஒரு மாபெரும் விசாரணை ஊடகமாக்கும் அரிய கலைஞர்களில் ஒருவர் அவர். தற்போது நான் பார்த்து முடித்த அவரது ‘விண்டர் ஸ்லீப்’ படத்தைப் பார்த்து முடித்தபோது, நூரி பில்கே ஜெலான், இயற்கைக்கு அருகில் பெண்களையும் ஏழைகளையும் வைக்கிறார் என்பது புரிந்தது. பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலின் ஒரு பகுதியையும் ஆண்டன் செகாவின் ஒரு சிறுகதையையும் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்திலும் அவரது மற்ற திரைப்படங்களைப் போன்றே ஆண் மீது அழுத்தமான விமர்சனத்தை எழுதிச் செல்கிறார்.

ஆழம் மேலா, கீழா என்பதல்ல; ஆனால் ஆணிடம் ஆழத்தில் இருக்கும் அம்சம் இல்லை. ஆழத்தில் தாக்குப்பிடிப்பதற்கான தகவமைப்போ உறுப்புகளோ பரிணாமத்தில் அவனிடம் உருவாக இல்லை. எங்கோ அவன் தட்டிக்கொண்டே இருக்கிறான். ஒரு மேலோட்டமான இடத்தில் தான் அவன் தலை தட்டிக்கொண்டிருக்கிறது. அறிவு அவனைக் கைவிடும் இடம் அது. 

கருத்தியல் ஆணினுடையது; வரலாறு அவனுடையது; அவன் தன் கலையாலும் அறிவாலும் உருவாக்கிய கோட்பாடுகளும் சமயங்களும் ஆலயங்களும் அவனுடையது. பத்மநாபபுரம் ஆலயத்தின் பாதாளத்திலுள்ளது போன்ற மாபெரும் பொக்கிஷங்கள் அவன் சேர்த்தவை...அதற்கு மேல் பாம்பணையில் படுத்திருக்கும் விஷ்ணுவும் அவனால் உருவாக்கப்பட்டவரே.

ஆனாலும் அவன் இயற்கையாக இல்லை. இயற்கையோடு இல்லை. அவனுக்கு அடைக்கலம் கொள்ள ஒரு வீடொன்றை அவன் இன்னும் உருவாக்கவேயில்லை.

அதனால் தான் இயற்கை அவனைக் குட்டிக்கொண்டே இருக்கிறது. பெண் அவனைக் குட்டிக்கொண்டே இருக்கிறாள்...

விண்டர் ஸ்லீப்பில் வரும் ஒரு கிழவரின் உரையாடலை யவனிகா ஸ்ரீராம் கவிதைகளை அறிமுகம் செய்வதற்கான சாவியாக ஒரு கவிதையாக எழுதி எடுத்துள்ளேன். அந்தக் கிழவர், வனத்தின் நடுவே ஒரு பண்ணை வீட்டில் வசிப்பவர். அவருக்கு இப்போது யாரும் இல்லை. அவர் தன்னைப் பார்க்க வரும் நண்பரிடம் மதுவருந்திக் கொண்டே பேசத் தொடங்குகிறார்.

நான் குழந்தைப் பருவத்தில்

தோட்டத்தில் விளையாடுவதுண்டு

அப்பா அம்மாவோடு இப்படியே காலம் இருக்குமென்ற

ஒரு உணர்வுதான் அப்போது இருந்தது

ஆனால் இப்போதைய என் நிலை என்ன

சில சமயங்களில் எனக்கு ஆச்சரியமாக இருக்கும்

இந்த வீடு எப்போது இப்படிக் காலியானதென்று

தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த

அந்த அம்மாவின் சின்னப்பையன்

எங்கே போனான்

அவன் எப்போது தனியாக வசிக்கும் குடிகாரக் கிழவனானான்

எனக்குத் திருமணமானது

குழந்தை பிறந்தது

அவர்கள் எங்கே போனார்கள்

என் மனைவி கல்லறையில் இருக்கிறாள்

மகளோ பல மைல்களுக்கப்பால் போய்விட்டாள்

மாற்றவே முடியாத சில விஷயங்களுக்கு சற்று வளைந்து கொடுக்கத்தான்

வேண்டுமென்று இப்போது தோன்றுகிறது

மனிதர்களை அதீதமாக எடைபோட்டுத் தீர்ப்பு சொல்ல வேண்டியதில்லை

எப்படி நடக்கிறதோ அவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு விடவேண்டியதுதான்.


சரித்திரம் முழுவதும் ஆண் வளைந்து கொடுக்கவேயில்லை. தனது தீர்ப்புகளின் பயனின்மையையும் உணரவேயில்லை. அவன் பெண்ணைப் போல இயற்கை போல எதையும் தாங்கி ஏற்றுக் கடக்கவேயில்லை. அதனால் அவனுக்கு அடைக்கலமென்று கால்களுக்குக் கீழே துளி நிலமும் இல்லை. அதனால் தான் கற்பனாதீதத்தின் அந்தரக் கோளத்தில் வாழ்ந்த பிரமிளுக்கு இந்த நிலம் காலடி படும்போதெல்லாம் எரிந்தது. யவனிகாவுக்கோ தரை நழுவிக் கொண்டே இருக்கிறது...

பிரமிளும் யவனிகாவும் ஒரு மொழியில் சற்றே முன்பின்னாக தமிழ் மொழியில் எழுதிய கவிஞர்கள் என்ற ஒற்றுமையைத் தவிர வேறெதுவும் அவர்களுக்குள் ஒற்றுமையே கிடையாது.

யவனிகா அடிப்படையில் மறுத்து புறக்கணித்து கடுமையாக விமர்சிக்கத் துணியும் அப்பால் சமாசாரங்களோடு தொடர்புடைய ஒரு ‘பழைய’ கவிஞர் அவர். ஆனால் வேறு வேறு பாதைகளில் அலைந்து ஓய்ந்து சலித்து வந்து கால் நீட்டி அமரும் பாறை ஒன்றாகவே இருவருக்கும் இருக்கிறது.
தமிழில் முழுக்கவும் இப்பால் சமாசாரங்களோடு புரண்டுருண்ட கவிஞன் என்று யவனிகா ஸ்ரீராமை முழுக்கவும் வகுக்க முடியும்.

அப்பால் என்பது என்னவென்பதை தற்போது சற்றுத் தொகுத்துக் கொள்ளலாம் என்று கருதுகிறேன். அழகு, உண்மை, கடவுள் என்ற வரிசையில் அப்பால் உலகத்தோடு தொடர்பு கொள்ளாத தமிழ் புதுக் கவிஞர்களே இல்லை என்று நான் சொல்லத் துணிகிறேன். மரபைப் பொறுத்தவரை கடவுள், உண்மை, அழகு என்ற வரிசையில் கவிதை தொழிற்பட்டிருக்கிறது

அழகு, உண்மை, கடவுள் ஆகிய அம்சங்களின் பழைய மகத்துவங்களை, பழைய புனிதங்களை, பழைய அதிகாரங்களைக் களைந்தவர்களென்று ஒச்சப்படுத்தியவர்களென்று புதுக்கவிஞர்களைச் சொல்லலாம். அங்கே தான் பிரபஞ்சத்தின் நடனத்தை ஆடிய நடராஜர், மேஜை நடராஜராக ஞானக்கூத்தனில் ஆகிறார்.

 ஆனால் அவர்கள் அந்த அம்சங்களை நோக்கி உரையாடியதன் மூலமாகத் தான் கவிதையின் அமைதியும் கவிஞனுக்கான அமைதியும் அவர்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்டன.

000

மதத்தை கவிதை இடம்பெயர்க்கும் என்று உண்மையாகவே கருதிய ஆத்மாநாமுக்கு எதிர்நிலையில் தன்னை வைத்துக் கொண்டவன் யவனிகா. கவிதை லௌகீக மதிப்பீட்டின் அடிப்படையிலான விலைசொல்வதற்கு அப்பாற்பட்ட மதிப்பு மிக்கது என்ற பிரமிளின் எண்ணத்தை யவனிகா மறுக்கிறான். எறும்புகள் போல, பாம்பைப் போல, ஊறும் மனத்தை வெளியில் அலைவதைப் போல வேடிக்கை பார்த்து சில கணங்களில் சொரூப நிலையைத் தேடும் நகுலனின் அறிதல் முறையையும் மறுக்கும் கவிதை யவனிகாவுடையது.

அவனைப் பொறுத்தவரை ரொட்டி சுடுபவனின் ரொட்டிக்கு எத்தனை மதிப்போ அத்தனை மதிப்புதான் கவிதைக்கும். அப்பாலை மறுத்தபடியே அதன் அழகியலை மறுத்தபடியே அப்பால் பிறப்பித்த கவிதையை மறுத்தபடியே அதனால் அப்பாலை சதா நினைத்தபடியே அப்பாலுடன் குடித்தனம் நடத்தியபடி குத்தலாகவும் பேசியபடியே உடன் வாழும் பெண்ணைப் போல இப்பாலிலும் தரிக்க முடியாமல் முயங்கியும் முரண்பட்டும் இயங்குகின்றன யவனிகாவின் கவிதைகள்

000

முடியவில்லை, இயலவில்லை, சகிக்கவில்லை, சுலபமில்லை, சலனமில்லை என இவன் கவிதைகளில் இல்லை இல்லை என்ற பதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இருப்பது என்று சொல்லப்படுவது குறித்த எல்லாவற்றின் மீதும் எப்போதும் சந்தேகமே இருக்கிறது யவனிகாவுக்கு. இருக்கக் கூடும், இருக்கலாம் என்றே உரைக்கப்படுகிறது. இருந்தது, இருந்திருப்பதாக நம்பக் கூடியது இல்லை இப்போது இல்லை என்ற அறிவிப்பைச் செய்யும் நள்ளிரவுக் கோடாங்கி தான் யவனிகாவோ என்றும் தோன்றுகிறது.

இருந்த நிலம் இல்லை. இருந்த பசுமை இல்லை. இருந்த வாழ்வு இல்லை. இருந்த கிராமம் இல்லை. இருந்த மரங்கள் இல்லை. இருந்த தாய்மை இல்லை. இருப்பாள் என்று நம்பிய பெண் இல்லை. கைப்பிடித்து நம்பிய கருத்தியலும் இல்லை. இந்தச் சூழ்நிலையில் தான் கவிதை என்று எதுவெல்லாமோ அதுவெல்லாம் இல்லை இல்லை என்று சொல்பவனாகி விட்டான் யவனிகா.

ஒருவகையில் அரிஸ்டாட்டில் சொல்லும் அவலச்சுவை தான் யவனிகா கவிதைகளின் தனித்தன்மையாக இருக்கிறது. புதிய கோலம் கண்டிருக்கும் இந்த நூற்றாண்டின் வாழ்க்கையை அதன் குரூரம், அவலம், அசிங்கம், வலி, முரண்நகையை  மூர்க்கமற்ற மொழியில் புறாவின் முனகல் போல முகமில்லாமல் வெளிப்படுத்திய கவிதைகள் இவை. ஒரு தத்துவவாதி, ஒரு லாரி டிரைவர், ஒரு பாலியல் தொழிலாளி, ஒரு சிறுவியாபாரி, பன்னாட்டுப் பயணிகள் வரும் சுற்றுலா விடுதியின் சமையல்காரன், தலைமைச் செயல் அதிகாரியாக வாய்ப்புள்ளவன் என பலகுரல்கள் சஞ்சரிக்கும் நிலப்பகுதி யவனிகாவினுடையது. எனினும் அவனது கவிதைகள் துயரத்தில் தொடங்கி இல்லாமையில் தொடங்கி முரண்பாட்டில் தொடங்கி அங்கேயே முடிபவை. அங்கே அரிஸ்டாட்டில் உத்தேசித்தது போல ஆன்மசுத்தியோ, துயர்மீட்போ பார்வையாளனுக்கோ வாசகனுக்கோ யவனிகாவில் உத்தேசமுண்டா அதற்கு உத்தரவாதமும் உண்டா என்று எனக்குத் தெரியவில்லை.


000


யவனிகா கவிதை எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து கவிதை எழுதத் தொடங்கியவன் நான். எனக்கு யவனிகா இல்லை இல்லை என்று சொல்லச் சொல்ல, இருக்கிறது இருக்கிறது என்ற நம்பிக்கை கூடிக்கொண்டு வருகிறது. அவன் இப்பாலிலேயே நம்பிக்கையை வைத்துக் காலூன்றியவன். அதுசார்ந்த துயரத்தையும் சலிப்பையும் அதற்குரிய பொறுப்போடு சுமக்கிறான்.

நான் இப்பாலுக்குள் அப்பாலை சிருஷ்டிக்க முயல்வதில் நம்பிக்கை கொண்டவனாக இருக்கிறேன். யவனிகாவின் கண்கள் உறைந்திருக்கும், அவன் கவிதைகளின் எதார்த்தமும்,கற்பிதமோ என்றும் சந்தேகப்படும் எல்லையில் நான் இருக்கிறேன். இப்பாலில் அப்பாலுக்கான நிம்மதிச் சந்துகளை அழகியல் வழியாக, அழகின் வழியாகத் தேடிக் கொண்டிருப்பவன் நான்.

நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்குமிடையே இறந்தகாலத்தில் கொண்டு சேர்க்கும் கவிதைக் குதிரை ஒன்றை யவனிகா போஷித்து வளர்க்கிறான். இந்தக் குதிரைதான் அவனது நிலங்களையும் மனிதர்களையும் பல்லுயிர்க் கூட்டத்தையும் அவர்களது வலி இன்பம் காமத்தையும் ஒன்று சேர்க்கிறது போலும்.மார்பைன் நிரம்பிய பலாச்சுளை

கவிதையில்

எனது மூளையில் ஒரு நீர்இறைக்கும் எந்திரம்

அல்லது

களைக்கொல்லிகளுக்கான ரசாயனக்கூட்டு

அல்லது

ஒரு பளுதூக்கியின் நெம்புகோல் திறன்

கொழுப்புச் சத்துடன்

ஒரு தின்பண்டம்

மார்பைன் நிரப்பிய பலாச்சுளை

அரைகிராம் பிளாட்டினம்

என்று மூளையைப் பிரித்துப் பிரித்துப் பார்க்கிறான் யவனிகா. அவனது மூளை அப்படி.

அக்ரூட் பருப்பைப் படைத்த பின்னர் மனித மூளை படைக்கப்பட்டதா? மனித மூளையின் சிறுபிம்பமாக அக்ரூட் படைக்கப்பட்டதா என்ற வியப்பில் என் கவிதையின் விந்தை அமர்ந்திருக்கிறது.

இந்தத் துருவத்திலிருந்து அவன் கவிதைகளை எனக்குப் பார்க்க நேர்ந்திருக்கிறது.

நாம் கூட்டம் நடத்தும் ஊருக்கு மிக அருகில் வடலூரில் இருக்கும் வள்ளலார், உணவைத் தவிர வேறு எதுவுமே அவசியமில்லை என்று உரைத்திருக்கிறார். அந்த இல்லையை தமிழ் கவிதையும் கலைஞர்களும் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகாவது மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.

(கடலூரில் கவிஞர் கனிமொழி. ஜி ஆம்பல் சார்பில் ஒருங்கிணைத்த யவனிகா ஸ்ரீராம் படைப்புகள் தொடர்பான கூட்ட நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை இது)
  

No comments:

வைரமுத்துவின் தமிழ் உலா

ஊரடங்கு நாட்களில் புரிந்த நற்செயல்களில் ஒன்றாக குருதத்தின் ‘ப்யாசா’ திரைப்படத்தைப் பார்த்ததைச் சொல்வேன். ‘ப்யாசா’ படத்தின் நாயகன் அன்ற...